மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?

செல்லமுத்து குப்புசாமி

பிஇ (PE) விகிதம் என்பது ஒரே துறையில் இயங்கும் பல நிறுவனங்களை ஒப்பிடுவதற்கும், பல்வேறு துறைகளை ஒப்பிடுவதற்கும் மற்றும் ஒரு நிறுவனத்தை பல்வேறு காலகட்டங்களில் ஒப்பிடுவதற்கும் பயன்படுகிறது.      

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?

எது குறைவான பிஇ எண்ணில் கிடைக்கிறதோ, அது மலிவாகக் கிடைக்கிறது என்று பொருள். குறைவாகக் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வாங்குவதும், அதிக பிஇ எண் நிலவுகிறது என்ற காரணத்தினால் மட்டுமே வாங்காமல் விடுவதும் ஆபத்தில் முடியலாம்.

உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட வருடத்தின் தவறான செயல்பாட்டால் ஒரு கம்பெனி நஷ்டம் அடையலாம். அப்போது இபிஎஸ்  எதிர்மறையாகக்  கணக்கிடப்படும். அப்படியானால் அதன் விகிதமும் நெகட்டிவ்தானே? ஆனால், ஒரு வருடத்தை மட்டுமே கவனிக்காமல், கடந்த ஐந்து அல்லது 10 வருடங்களாக நிறுவனம் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என ஆராயலாம். பொதுவாக அதன் பிசினஸ் சூழலும், செயல்பாடும் எப்படி என ஆராயலாம். இந்த வருடம் அது நஷ்டமடையக் காரணம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என யோசிக்கலாம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?ஒரு சில துறைகள் அடுத்துவரும் 10-20 ஆண்டுகளில் அமோகமாக வளரும் என்ற நம்பிக்கை இருக்கும். அந்தத் துறையில் இயங்கும் நிறுவனங்களின் பிஇ மற்ற துறைகளைவிடக் கூடுதலாகத்தான் இருக்கும். அதிக பிஇ காரணமாக அவற்றைப் புறந்தள்ளி விட்டு மந்தமான துறையில் முதலீடு செய்வது சரியான முடிவாக அமையாது.  அதேபோலத்தான் ஒரு துறையில் உள்ள மார்க்கெட் லீடர். நிறைய பேர் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அதிக பணம் சம்பாதிப்பது போலத்தான் மார்க்கெட் லீடர். குறைவான பிஇ-க்கு விற்பனையாகும் நிறுவனங்கள் காலப்போக்கில் காணாமல் போகலாம். அல்லது அதே அளவில் பல வருடங்கள் தாக்குப் பிடிக்கலாம். அதற்குள்ளாக மார்க்கெட் லீடர் பன்மடங்கும் பெருகியிருக்கும்.

மேலோட்டமாக பிஇ விகிதம் என்று பார்த்தால், நாம் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டின் ஒரு பங்கு லாபம் (EPS) என்னவோ, அதன் அடிப்படையில் பிஇ கணக்கிடுவது ஒருமுறை. பொதுவாகவே, கடந்த நிதியாண்டில் அடைந்த லாபத்தை வைத்து அல்லது கடந்த 12 மாதங்களில் அடைந்த லாபத்தை வைத்து பிஇ கணக்கிடுவது வாடிக்கை. சிலர்அடுத்த ஆண்டு லாபத்தின் அடிப்படையில் கணக்கிட்டுப் பரிந்துரைப்பார்கள். சில பேர் கடந்த 5 ஆண்டுகளின் ஒரு பங்கு லாபம் (EPS) என்னவோ, அவற்றையெல்லாம் சராசரி செய்து அதனைத் தற்போதைய பங்கு விலையோடு ஒப்பிட்டு பிஇ கணக்கிடுமாறு வலியுறுத்துகிறார்கள்.

ஆனால், நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பிஇ விகிதம் கணக்கிட உதவும் எண்களெல்லாம் கடந்த காலத்தினுடையவை. ஷேர் மார்க்கெட்டைப் பொறுத்தமட்டில் நாம் வாங்குவது எதிர்காலத்தைத்தான். ஆகையால், இந்த பிஇ எண்ணை ஒரு அளவுக்குமேலே பிடித்துத் தொங்கிக்கொண்டே இருப்பதால் பயனில்லை.

ஒரு கம்பெனியின் ஷேரை வாங்குகிறோம் எனில், அதன் பங்குதாரர் ஆவதாகவே பொருள். அது ஈட்டுகிற எதிர்கால லாபங்களையும் நாம் அனுபவிப்பதற்காக வாங்குகிறோம். தற்போதைய இதே லாபம் நீடிக்குமென்றால், நாம் போடும் பணம் முழுவதுமாக நமக்குத் திரும்பக் கிடைக்க எத்தனை வருடங்கள் பிடிக்கும் என்பதை பிஇ சுட்டிக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது?

உதாரணத்துக்கு, ஏ, பி என இரு நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். 8 ரூபாய் லாபம் ஈட்டுகிற நிறுவனமாகிய ஏ-வின் பங்கை ரூ.80-க்கு வாங்கினால், அந்தப் பங்கை வாங்க செலவழித்த பணம் முழுவதையும் அதன் லாபம் மூலமே ஈட்ட பத்து வருடங்கள் ஆகும். வருடம் 8 ரூபாய், பத்து வருடங்களில் 80 ரூபாய். இந்தப் பத்து வருடம் என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் பிஇ விகிதம் 10. இதேமாதிரி ஆண்டுக்கு ரூ.10 லாபம் ஈட்டும் நிறுவனத்தின் ஒரு ஷேரை ரூ.150-க்கு வாங்கினால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்க 15 ஆண்டுகளாகும் என்பதை அதன் பிஇ விகிதம் 15 சுட்டுகிறது. அதனால்தான் சிறிய பிஇ விகிதம் நம்மை ஈர்க்கிறது. ஆனால், பத்து வருடங்கள் கழித்து நிறுவனம் ஏ ரூ.8 லாபமும், பி ரூ.10 லாபமும் ஈட்டப் போகின்றனவா அல்லது அது ரூ.16, ரூ.20-ஆக பெருகப் போகிறதா, ரூ.4, ரூ.5-ஆக சுருங்கப் போகிறதா என்பது அவற்றின் எதிர்காலச் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்தது.

நாம் ஷேர் வாங்கும்போது ஒரு கம்பெனியின் எதிர்காலத்தை வாங்குகிறோம். அது எப்படி இருக்குமென்று யாருக்கும் தெரியாது. நிச்சயமாக இப்படி இருக்கும், அப்படி இருக்குமென்று யாராலும் உறுதியாகக் கூற இயலாது. அந்த நிச்சயமற்ற தன்மையே ஷேர் மார்க்கெட் முதலீடுகளைப் பரவசமாக மாற்றுகிறது.

பொத்தாம்பொதுவாக எல்லோரும் வாங்குகிறார்கள் என்பதற்காக நாமும் வாங்காமல் அது என்ன நிறுவனம், என்ன பிசினஸ் செய்கிறது, அது கடந்த காலத்தின் பிசினஸா அல்லது எதிர்காலத்தின் பிசினஸா, அதே துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அதற்கான எதிர்காலம் என்ன என்பது மாதிரியான தேடல்கள் மூலம் அந்த நிச்சயமற்ற தன்மையை ஓரளவு குறைக்க முடியும். நம்மால் முடிந்த அளவு யூகங்களைக் குறைத்து, தகவல்களையும், செய்திகளையும், பிசினஸ் அறிவையும் அகலமாக்கினால் அது சாத்தியமே.

(லாபம் சம்பாதிப்போம்)