
சொக்கலிஙகம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ எம்.வினோத்குமார்.
‘‘நான் தற்போது சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி மூலம் ரூ.8,000 முதலீடு செய்து வருகிறேன். கூடுதலாக மாதம் ரூ.10,000 குழந்தையின் படிப்புக்காக முதலீடு செய்ய இருக்கிறேன். இதனை யூலிப் திட்டத்தில் முதலீடு செய்யலாமென நினைக்கிறேன். இதற்கு யூலிப் திட்டம் சரியாக இருக்குமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சரியாக இருக்குமா? அடுத்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் அதிகரிக்கும் எனவும், யூலிப்-ன் செலவு விகிதம் அடுத்த எட்டு ஆண்டுகளில் குறைந்து, வருமானம் அதிகரிக்கும் எனவும் சொல்கிறார்கள். எனவே, அடுத்த 15 வருடங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளைவிட யூலிப் அதிக வருமானம் தருமா?’’
‘‘எக்ஸல் ஷீட்டில் கணக்கு எவ்வாறு வேண்டுமென்றாலும் போட்டுக் காண்பிக்கலாம். இன்னும் எட்டு வருடங்களில், மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதமும் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
இன்றைய தேதியில் எத்தனை சதவிகிதம் பேர் இந்தியாவில் 8, 10, 15 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடர்ந்து வருகிறார்கள்? நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு அவ்வப்போது பணத் தேவை ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் யூலிப் பாலிசிகளிலிருந்து பணத்தைத் திரும்ப எடுப்பது சிரமம்.
மேலும், நீங்கள் சொல்கிறபடி பார்த்தாலும், யூலிப் பாலிசிகளில் ஆரம்ப கட்டணம் மிக அதிகம். நிதித் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு விஷயம், எட்டு வருடங்கள் கழித்து கிடைக்கும் ரூ.100-ஐவிட, இன்று கிடைக்கும் ரூ.50 மேல். அவர்கள் சொல்லும் கூற்று உண்மை என்றால், ஏன் யூலிப் திட்டங்களைவிட, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அதிக அளவில் மக்கள் வாங்குகிறார்கள்?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மொத்த வருமானத்திலும் சரி, வெளிப்படைத்தன்மையிலும் சரி, வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையிலும் சரி, யூலிப் திட்டங்களைவிட சிறந்தது என்பதில் துளிகூட சந்தேகம் இல்லை. ஆகவே, உங்களின் எதிர்காலத் தேவைகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளையே நாடுங்கள்.
உங்கள் குழந்தைகளின் கல்விக்குப் பின்வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் – ரூ.5,000, பிரின்சிபல் குரோத் ஃபண்ட் – ரூ.5,000.”
@ ஆர்.செல்வராஜூ
“நான் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறேன். வயது 50. நான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புகிறேன். அப்போது எனக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் தேவை. நான் ஏற்கெனவே சுந்தரம் டாக்ஸ் சேவர் ஃபண்டில் ரூ.30 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அதன்மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் எனக்கு வருமானமாகக் கிடைக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக ஆண்டுக்கு 12% அளவில் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. நான் இன்னும் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்தத் தொகையை அதே ஃபண்டில் முதலீடு செய்யலாமா?”
“சுந்தரம் டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் இ.எல்.எஸ்.எஸ் திட்டமாகும். உங்களுக்கு வரிச் சலுகை தேவையில்லாதபோது நீங்கள் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்தத் திட்டங்களில் மூன்று வருட லாக்-இன் உள்ளது. அதனால் உங்களுக்கு அவசரத் தேவைகள் ஏதும் ஏற்பட்டால், உங்கள் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாது.
மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தரும் டிவிடெண்டுக்கு எந்தவிதமான கேரன்டியும் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக பங்குச் சந்தை காளையின் பிடியில் உள்ளதால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களால் நல்ல டிவிடெண்ட் வழங்க முடிகிறது. இதுவே சந்தை கரடியின் பிடியில் சென்றால், டிவிடெண்டுகள் குறையலாம் அல்லது முழுவதுமாக சில காலாண்டுகளுக்கு அல்லது ஒரு சில வருடங்களுக்கு நிறுத்தப்படலாம்.
ஆகவே, உங்களுக்கு இந்த மாத / காலாண்டு வருமானம் ஒரு பொருட்டல்ல என்றால், கூடுதல் தொகையை நீங்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்துகொள்ளலாம். அவ்வாறு செய்தாலும் ஒரே ஃபண்டில் மேலும் தொகையை முதலீடு செய்ய வேண்டாம். நீங்கள் எதிர்பார்க்கும் டிவிடெண்டைக் கீழ்க்கண்ட சில ஃபண்டுகளும் வழங்கி வருகின்றன. பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்ட் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி புரூடன்ஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட்”
