
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்
வெற்றிக்கான இலக்குகளை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே!
வெற்றியை மனதுக்குள் காட்சிப்படுத்துங்கள்

ஒரு விஷயத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த வெற்றியை நாம் கண்டுவிட்ட தாக நம் மனதுக்குள் காட்சிப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அந்த வெற்றியை நம் மனதுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி நம் மனதைப் பழக்கப்படுத்து வதன் மூலம் நமது வெற்றி நிஜமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
ஒரு கால்பந்து போட்டியில் இரண்டு அணிகள் மோதிக் கொண்டன. அதில் ஒரு அணிக்கு விளையாட்டு தொடர்பான அனைத்து உத்தி களையும் கற்றுத் தந்ததுடன், ஜெயிப்பது தொடர்பான எண்ணங்களைக் காட்சிப் படுத்தும் முறையும் கற்றுத் தரப்பட்டது. இன்னொரு அணிக்கு வெறும் விளையாட்டு உத்திகள் மட்டுமே கற்றுத் தரப்பட்டன.
இறுதிப் போட்டியில் எந்த அணி ஜெயித்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெற்றியைக் காட்சிப்படுத்திப் பார்க்கத் தெரிந்த அணிதான் ஜெயித்தது.

ஜெயித்த அணியினரிடம், ‘‘எப்படி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றீர்கள்’’ என்று கேட்டபோது, “நாங்கள்தான் நிறைய முறை கனவிலேயே அவர்களைத் தோற்கடித்து விட்டோமே” என்றார்கள்.
வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற நினைப்பே நம்மை நிச்சயம் வெற்றி பெற வைக்கும் என்பதுதான் மனித மனதின் உளவியல். இதை நன்கு புரிந்துகொண்டவர்களே ஜெயிக்கிறார்கள்.
நான் இப்போது என் மனதில் எதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? உலகத்திலேயே நம்பர் ஒன் சலூனாக நேச்சுரல்ஸைக் கொண்டுவர வேண்டும் என்பதையே. நீங்கள் அடைய வேண்டிய இலக்கினை நீங்களும் உங்கள் மனதில் காட்சிப்படுத்தி, அதற்கு உங்கள் மனதைப் பழக்கப்படுத்துங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள்.
செயலில் இறங்கவேண்டும்
சிலர், ‘நான் என் பிசினஸை அப்படி செய்வேன்; இப்படி செய்வேன்’ என்பார்கள். ஆனால், அதற்கான செயலில் இறங்கவே மாட்டார்கள். இப்படித் தயங்கித் தயங்கியே நிற்பவர்கள், தங்களின் தயக்கத்தினால் சம்பாதித்த லாபத்தைவிட, அடைந்த நஷ்டமே அதிகம். தங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்புகளை மற்றவர்களுக்கு விட்டுத் தருவதே இவர்களது வேலையாக இருக்கும்.
நம் எல்லோருக்கும் நிலவில் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்றுதான் தெரியும். ஆனால், வேறு ஒருவரின் தயக்கத்தால்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. நிலவுக்குச் செல்லும் புராஜெக்ட்டுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் கேப்டன் இல்லை. ஆல்ரின்தான் கேப்டன். நிலவுக்குச் சென்றதும் ஆல்ரினுக்கு ‘நிலவில் இறங்குங்கள்’ என்று தகவல் வருகிறது. ஆனால், அவர் ஏனோ தயங்கி நிற்கிறார். உடனே, ‘அடுத்தவர்...’ என்று தகவல் வருகிறது. அப்போது நீல் ஆம்ஸ்ட்ராங் எதைப் பற்றியும் யோசிக்காமல் நிலவில் இறங்குகிறார்.
இதன் மூலம் நிலவில் கால் பதித்த முதல் மனிதன் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்தது. ஆனால், மிகச் சிறந்த வாய்ப்பினைக் கடைசி நிமிடத் தயக்கத்தினால் இழந்தார் ஆல்ரின். அந்த ஏக்கமே அவரை வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறவிடாமல் அழுத்த, கடைசியில் ஒரு தோல்வியடைந்த மனிதனாக தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார் ஆல்ரின்.
வாய்ப்பு என்பது எப்போதுமே நமக்காகக் காத்திருக்காது. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு செயலில் இறங்க வேண்டும். ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்த வாய்ப்பைத் தட்டிக்கழித்தால், பிற்பாடு நிச்சயம் வருந்த வேண்டியிருக்கும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.
விடாமுயற்சி வேண்டும்
செயலில் இறங்கினால் முதலில் அடிபடும் என்பது நியதி. அப்படி அடிபடும்போதெல்லாம் விடாமுயற்சியோடு வெற்றியை நோக்கிச் செல்லவேண்டும். விடாமுயற்சி என்றாலே நமக்கு கஜினி முகமதுதான் நினைவுக்கு வருவார். ஆனால், நான் வேறு ஒருவரின் விடாமுயற்சியைப் பற்றிச் சொல்கிறேன்.
1930-ல் ஹங்கேரியில் ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் இருந்தார். அவர்தான் அந்த ஊரில் எந்தப் போட்டி வந்தாலும் வெற்றி பெறுவாராம். அந்த வருட ஒலிம்பிக் போட்டியிலும் அவர்தான் தங்கப் பதக்கம் வாங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பயற்சியின்போது அவரது கையிலேயே குண்டு வெடித்து அவரது வலது கையை இழந்துவிட்டார். அதற்காக அவர் சோர்வடைவில்லை. ‘நான் என் வலது கையைத் தான் இழந்தேன். என் நம்பிக்கையை அல்ல’ என்று தன் இடது கையால் துப்பாக்கிச் சுட பயற்சி எடுத்தார். இந்தப் பயிற்சியை யாரும் இல்லாத தனி மைதானத்தில் தான் செய்தார். வலது கையைப் போலவே, இடது கையாலும் சரியாக சுடக் கற்றுக்கொண்டபிறகு, உள்ளூர் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு அதில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றார். இதுதான் விடாமுயற்சிக்கான உதாரணம். பிசினஸில் எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும், ‘Never Ever Giveup’ என்கிற விடாமுயற்சி யுடன், அடுத்தகட்ட வேலையை நோக்கி நகர்ந்தால், வெற்றி நம் வசப்படும்.
கருத்துகளை மதிக்கவேண்டும்
தொழில் என்றால் அதில் தோல்வி இருக்கவே செய்யும். அதைச் சரிசெய்ய வேண்டும் என்றால், உங்களுக்கு வரும் கருத்துகளை மதிக்க வேண்டும். சில பேர் தங்களுக்கு வரும் எதிர்மறையான கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல், வேறு யாரையாவது காரணம் சொல்வார்கள். எங்கள் நிறுவனத்தின் சேவை சரியில்லை எனச் சிலர் சொன்னால், நான் அவர்கள் சரியில்லை என்று சொல்ல மாட்டேன். அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வேன். இப்படிச் செய்வதன் மூலம் நம்மை நாமே திருத்திக்கொள்ள முடியும். அதுவே நம் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவும்.
(மாத்தி யோசிப்போம்)
தொகுப்பு: மா.பாண்டியராஜன்