நடப்பு
Published:Updated:

பைசா பங்குகள் ஜாக்கிரதை!

பைசா பங்குகள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
News
பைசா பங்குகள் ஜாக்கிரதை!

சுமதி மோகன பிரபு

ங்குச் சந்தைக் கட்டுபாட்டு வாரியமான செபி, இந்தியா முழுக்க 331 செல் கம்பெனிகளின்  (வரி ஏய்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போலி நிறுவனங்கள்) பங்குகள், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆவதற்குத் தடை விதித்துள்ளது.    

பைசா பங்குகள் ஜாக்கிரதை!

இந்த நிலையில், கடந்த பல மாதங்களாகவே இந்தியப் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் உள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி போன்ற பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை அடைந்தவாறே உள்ளன. பங்குச் சந்தையின் இந்தத் தொடர் ஏற்றம், குறிப்பாக சில பங்குகளின் அதிவேக வளர்ச்சி பற்றிய செய்திகள் இப்போது சிறு முதலீட்டாளர்களை வேகமாக சென்றடைந்து வருகின்றன. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே பங்குச் சந்தையில்  சிலர் பெரும் பணம் சம்பாதித்ததைப் பார்த்து, ‘அடடா, ஓர் அருமையான வாய்ப்பைத்  தவற விட்டுவிட்டோமே’ என்கிற ஏக்கம் பலருக்கும் வருவது இயல்பே. ‘பங்குச் சந்தையில், குறுகிய காலத்தில் எளிதில் அதிக லாபம் அடைய முடியும்’ என்கிற மாயையை புதிய முதலீட்டாளர் களிடம் உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இப்போது அதிகமாகவே உள்ளன.

 மற்ற சந்தைகளைப் போலவே பங்குச் சந்தையும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. அதே சமயம், எளிதில் புலப்படாத புதைகுழிகளையும்  சந்தையானது தனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டுள்ளது என்பதையும் பங்குச் சந்தை முதலீட்டில் முதல் காலடி எடுத்து வைக்கும்போதே எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். சரிவர ஆராயாமல், அவசர கதியில் மேற்கொண்ட சில முதலீட்டு முடிவுகள் காரணமாக ஏற்படும் இழப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் இருந்தவர்கள் அனுபவ பூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள்.

 பங்குச் சந்தையில் உள்ள பல கவர்ச்சிகரமான அபாயங்களில் முக்கியமானது,  அடிப்படையில் வலுவற்ற, யூகத்தின் அடிப்படையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுவருகிற பைசா பங்குகள்தான். இதனை ‘பென்னி ஸ்டாக்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த பென்னி ஸ்டாக்குகளின் குணநலன்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால், துஷ்டனைக் கண்டு தூர விலகி நிற்கிற மாதிரி நம்மால் விலகி நிற்க முடியும்.

பென்னி ஸ்டாக் என்றால்...?

பொதுவாக, பத்து ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் வணிகமாகும் பங்குகளை ‘பென்னி ஸ்டாக்குகள்’ எனலாம். இந்த நிறுவனங்களின்  பங்குச் சந்தை மதிப்பு (Market Cap) சில நூறு கோடி ரூபாய்களில் மட்டுமே இருக்கும். 
இந்த நிறுவனங்களின் தொழில் என்பது பெரிய அளவில் இல்லாமல், மிகச் சுமாராக, பெயருக்கு நடக்கிற மாதிரி இருக்கும். சில நிறுவனங்களில் எந்த விற்பனையும் நடக்காமல் இருக்கும். இன்னும் சில நிறுவனங்களில் வருமானமானது தொடர்ந்து நஷ்டத்திலேயே இருக்கும். ஆனாலும், இந்த நிறுவனங்களின் பங்கு விலை தொடர்ந்து உயர்வதைப் பார்க்கும் சிறு முதலீட்டாளர்கள், நாமும் ஏன் இந்தப் பங்கை வாங்கி, நல்ல லாபம் பார்க்கக்  கூடாது என்கிற எண்ணத்தில் இந்தப் பங்குகளை வாங்குவார்கள். 

அடிப்படையே சரியில்லாத இந்தப் பங்குகளின் விலை, ஆதாரமில்லாத சில தகவல்கள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் விறுவிறுவென ஏறும்; இறங்கும். அதனால்தான் இந்த வகைப் பங்குகளை ‘ஊகபேர பங்குகள்’ (Speculative Stocks) என்றும் சொல்வார்கள். மிகச் சில வணிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்தப் பங்குகள் செயல்படுவதால், மிக மிக உஷாராக இந்தப் பங்குகளை அணுக வேண்டும்.

இன்றைக்கு மிகப் பெரிய ஜாம்பவான்களாக உருவெடுத்திருக்கும் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐ.டி.சி போன்ற பெரு நிறுவனங்களும் ஒரு காலத்தில் சிறிய நிறுவனங்களாகவே தொடங்கப் பட்டவைதான். இந்த நிறுவனங்களின் பங்குகளில்  ஆரம்ப காலத்தில் முதலீடு செய்தவர்கள் பல மடங்கு லாபம் சம்பாதித்ததுபோல, இப்போது சிறு நிறுவனங்களாக ‘பென்னி ஸ்டாக்கு’ளில் முதலீடு செய்தால், பிற்காலத்தில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியும் என்கிற தர்க்கத்தின் அடிப்படையில் இந்தப் பங்குகளைச் சிலர் வாங்குகிறார்கள்.

மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகிய இரு பெரிய பங்குச் சந்தைகளிலும்  இன்றைக்கும் நூற்றுக்கணக்கான ‘பென்னி ஸ்டாக்குகள்’  வர்த்தகமாகி வருகின்றன. ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் சில பங்குகளை வாங்கும் பணத்தில் (ரிலையன்ஸின் ஒரு பங்கின் விலை ரூ.1,500-க்கு மேல்; இந்தத் தொகையில் ரூ.10 விலையுள்ள 150 ‘பென்னி ஸ்டாக்குகளை’ வாங்கி விட முடியும்!) பல நூறு பைசா பங்குகளை வாங்க முடியும் என்கிற ஆசையும், குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்ட முடியும்  (ரூ.10 விலை கொண்ட பென்னி ஸ்டாக் ரூ.20-ஆக விலை உயர்ந்தால், 100% லாபம்; ஆனால், ரூ.2250  விலை உயர்ந்தால்தான், 50% லாபம்!) என்கிற பேராசையும் இந்த விதப் பங்குகளை நோக்கி சிறு வணிகர்களை ஓட வைக்கிறது. 

முளையிலேயே தவிர்த்துவிடுங்கள்

விளைவதில் எது கள்ளிச் செடி, எது நல்ல செடி என்பது நமக்குத் தெரியும். அது மாதிரி சிறந்த பங்குகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டறிவதும் முக்கியம். நம் முதலீட்டில் உள்ள நல்ல பங்குகளில் கள்ளிச் செடி போல இருக்கும் இந்தப் பங்குகளை எப்படி இனங்கண்டு தவிர்ப்பது என்பதற்கான கேள்விக்குப் பதிலைப் பார்ப்போம்.

காகிதக் கப்பல் கரை சேர்க்காது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் காகிதத்தில் மட்டும் செயல்படுகிறதா அல்லது தனது தொழில்துறையில் உண்மையிலேயே இயங்குகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை தேட வேண்டும். அந்த நிறுவனம் தொடர்ந்து விற்பனை வருவாய் ஈட்டுகிறதா, லாபம் சம்பாதிக்கிறதா,  லாபத்திலிருந்து ஒரு பகுதியை டிவிடெண்ட்-ஆகப் பங்குதாரர்களுக்கு வழங்குகிறதா, அரசுக்கு வரி செலுத்துகிறதா என்பவற்றையெல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும்.

ஒரு நிறுவனம் வளர்ந்துவரும் வேளையில், ஆரம்பகட்டத்திலேயே லாபம் ஈட்டுவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். நேர்மையாக நடக்கும் சில நிறுவனங்கள்கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் இடறிவிடுவதுண்டு. என்றாலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரு நிறுவனம், நஷ்டம் கண்டு வருகிறது என்று தெரிந்தால், அந்த நிறுவனத்தை விட்டு தூர விலகிவிடுவதே சரி.

இதற்கு அந்த நிறுவனத்தின் வருடாந்திர அல்லது காலாண்டு பண வரவு (Cash flow) பற்றிய தெளிவான புரிதல் அவசியம். ஒரு நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் அதிகப்படியான முதலீட்டுத் தேவைகள், தேய்மானங்கள் (Depreciation), விற்பனையில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக அல்லது தொழில் போட்டியினால் ஏற்படும் விலை நிர்ணயத் தொய்வுகள் காரணமாக லாப அளவு குறையலாம் அல்லது சில சமயங்களில் நஷ்டம்கூட ஏற்படலாம். ஆனால், பணவரவே முற்றிலும் இல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது.

சில பல வருடங்களுக்கு முன்பு  பலராலும் பரிந்துரைக்கப் பட்டு, பங்குச் சந்தையில் பரபரப்பாக வணிகமாகிக் கொண்டிருந்த தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரு பென்னி ஸ்டாக்கினை, தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்காக  மும்பையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தோம். அந்தத் தொலைபேசி எண் கூட அந்த நிறுவனத்துக்குச் சொந்தமானதல்ல என்பது அழைப்புக்குப் பிறகுதான் தெரிய வந்தது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையைச் செயற்கையான முறையில் ஏற்றி, அநியாய லாபம் பார்த்ததாக செபி அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டு, அது கடந்த மே மாதம் நிரூபிக்கப்பட்டது.  இதுபோல காகித அளவில் இருக்கும் பங்குகளை வேடிக்கை பார்க்கலாம். அதில் பயணம் செய்ய ஆசைப்படக் கூடாது.

ஆழம் தெரியாமல் காலை விடாதே

அதிகம் அறிந்திராத ஒரு நிறுவனத்தைப் பற்றிய செய்திகள் செபியினால் அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் மூலம் வரும்போது மட்டுமே  நாம் அதைக் கவனிக்கலாம். அதன் சாதக, பாதகங் களை ஆராய்ந்து, அதில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கலாம். ஆனால், வதந்திகள் அல்லது  ஊகத்தின் அடிப்படையில் எந்த முதலீட்டு முடிவையும் எடுக்கக் கூடாது. 

ஒரு நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்கள் யார் யாரென்பது குறித்த தெளிவான புரிதல், முதலீடு செய்யும்முன் நமக்கிருக்க வேண்டும்.  பதிவு பெற்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பலரும் இருப்பது ஆக்கபூர்வமானது. காலப் போக்கில் அவர்களின் முதலீடு அதிகமாகிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தெளிவும் வேண்டும்.

பங்கு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை மற்றும் ஆண்டு இறுதி அறிக்கையில் உள்ள தகவல்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். இந்த அறிக்கைகளை பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ  ஆகிய பங்குச் சந்தைகளின்  வலை தளங்களில் இருந்து எளிதாகப் பெற முடியும். ஒரு காலாண் டில் பெற்ற மிகையான லாபம் அல்லது ஒரு திருப்தியான நிதி அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பங்கினைத் தேர்வு செய்துவிட முடியாது.

தொடர்ச்சியான நிதிநிலை முடிவுகளில் ஒரு சீரான மற்றும் முரணற்றப் போக்கு இருக்க வேண்டும். லாபம் என்பது காகிதத்தில் மட்டுமே காணப்படுவதாக இருக்கக் கூடாது. ஏற்கனவே சொன்னபடி நிறுவனத்தின் செயற்பாடுகளில் இருந்து உண்மையான பணவரவு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விலை உயர்வுடன் வர்த்தமாகும் பங்குகளின் அளவும் அதிகமாகின்றனவா, தினசரி வர்த்தகத்தில் வாங்கப்படும் பங்குகள் நாள் முடிவில் பட்டு வாடாவுக்கு (Delivery) எடுத்துக் கொள்ளப்படு கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.

சில சமயங்களில் கருப்புப் பண முதலைகள் சிறு பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்துகின்றனர். இவர்கள்  ஒரு வருட காலத்துக்கு மேலே பங்குகளை தங்களது கணக்கில் வைத்திருக்கின்றனர். பின்னர் அந்தப் பங்குகளை அதிக விலையில் விற்று, வருகிற லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விலக்கு (Long Term Capital Gains) பிரிவின்படி, வரி செலுத்துகின்றனர்.

பங்குச் சந்தையில்  வணிகமாகும் பங்குகளை மும்பை பங்கு சந்தை A, B, T, Z எனப் பல வகை களாகப் பிரித்துள்ளன. இவற்றில் T வகை பங்குகளில் தினசரி (Intraday) வர்த்தகம் செய்ய முடியாது. Z  வகை பங்கு நிறுவனங்கள் பங்குச் சந்தையின் சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றாதவை. புதிய முதலீட்டாளர்கள் தமது ஆரம்ப நிலையில் T மற்றும் Z வகை பங்குகளில் முழுமையாகத்  முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது.

நஷ்டம் கண்டதே மிச்சம்!

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிறுவனம், சில வருடங்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிறுவனம், வெளிநாடுகளில் உள்ள சிறு நிறுவனங்களை கையாகப்படுத்தியதைக் கண்டு பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

குறுகிய காலத்தில் நிறைய லாபம் பார்க்கலாம் என்கிற ஆசையில் சிறு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை வாங்கினார்கள். ஆனால், 2010-ல் முதலீட்டாளர்களை ஏமாற்றும் விதமாக  தவறான வருவாய் அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்ததாக, சந்தையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. அதில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் கண்டதே மிச்சம்!