நடப்பு
Published:Updated:

பெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்?

பெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்?
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்?

பெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்?

பொதுவாக, வங்கிகளின் சேமிப்புத் திட்டங்கள் மூலம் பணம் சேர்த்து வைப்பதை ஆண்களுக்கே உரிய விஷயமாகவே பல பெண்கள் பார்க்கின்றனர். இதற்கு முன்பு நம் சமூகத்தில், பெரும்பாலான பெண்கள் படிக்காமல் இருந்த காலத்தில்,  வங்கிக் கணக்குகள் என்பதை ஆண்கள்தான் தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். அதனால் ஆண்களே வங்கிகளில் கணக்கு வைப்பதை வாடிக்கையான விஷயமாக வைத்திருந்தனர். வங்கிக் கணக்குகள் தங்களுக்குத் தேவையில்லாத விஷயம் விஷயம் எனப் பெண்களும் நினைத்து வந்தனர்.   

பெண்களுக்கான சிறப்பு வங்கிக் கணக்குகள்... என்ன லாபம்?


ஆனால், காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைக்குப் பெண்கள் படித்து, பெரிய பதவிகளை வகிக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர். பெண்கள், வங்கி மூலம் சேமிப்பதையும், முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கும்விதமாக, பெண்களுக்கான  பிரத்யேக சேமிப்புத் திட்டங்களை அறிமுகப் படுத்துவதில் தனியார் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், யெஸ் பேங்க்,  ஐடிபிஐ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பல தனியார் வங்கிகள், பெண் களுக்கான பிரத்யேக சேமிப்புத் திட்டங்களுடன் கூடுதல் சலுகைகளும் அளிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐடிபிஐ பேங்க் - ‘சூப்பர் சக்தி’ (Super Sakthi) 

‘சூப்பர் சக்தி’ திட்டத்தின்படி, வங்கிக் கணக்கு தொடங்கும் பெண்களுக்கு செக் புக், இலவச ஏ.டி.எம் டிரான்சாக்‌ஷன் போன்ற  சலுகைகள் வழங்கப்படுகின்றன.

குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை நகர்ப்புறங்களில் ரூ.5,000, நகரத்தையொட்டிய கிராமப்புறங்களில் ரூ.1,000, கிராமப் புறங்களில் ரூபாய் 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ பேங்க் - ‘அட்வான்டேஜ் வுமன் சேவிங்ஸ் அக்கவுன்ட்’ (Advantage Woman Savings Account)

ஐசிஐசிஐ வங்கி, இந்தச் சேமிப்புத் திட்டத்தின் கீழ் பெண்கள் செலுத்தும் பணத்துக்கு 6% வட்டி வழங்குகிறது.

மேலும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் இலவச டிரான்சாக்‌ஷன், சர்வதேச  டெபிட் கார்டு வழங்குவது, அதிக ரிவார்டு பாயின்ட்ஸ் ஆகிய சலுகைகளை அளிக்கிறது. இதில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக ரூ.10,000. 

18 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

ஃபெடரல் பேங்க் -  ‘மஹிளாமித்ரா’ (Mahilamitra)

‘மஹிளாமித்ரா’ சேமிப்புத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச  பராமரிப்பு  தொகை ரூபாய் 5,000 இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் சலுகைகளாக, சர்வதேச டெபிட் கார்டு, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

பேங்க் ஆஃப் இந்தியா -  ‘மஹிளா சேவிங்ஸ் அக்கவுன்ட்’ (Mahila Savings Account)

‘மஹிலா சேவிங்ஸ் அக்கவுன்ட்’டில் குறைந்தபட்ச  பராமரிப்பு்தொகையாக ரூபாய் 5,000 இருக்க வேண்டும்.

கோட்டக் மஹேந்திரா பேங்க் - ‘சில்க் உமன்’ (Silk Woman) சேமிப்புத் திட்டம்

‘சில்க் உமன்’ சேமிப்புத் திட்டத்தின் கீழ் பெண்கள் செலுத்தும் பணத்துக்கு 6% வட்டி வழங்கப்படுகிறது. மேலும்  காசோலை , ஏ.டி.எம் கார்டு வழங்கப்படுகின்றன.

பெண்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக வங்கிகள் வழங்கும் இதுபோன்ற சிறப்புத் திட்டங்களை அனைத்துப் பெண்களும் பயன்படுத்திக்கொள்ளலாமே!

- எம்.ஆர்.ஷோபனா

படம்: ப.பிரியங்கா