நடப்பு
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!

ஓவியம்: பாரதிராஜா

வீட்டின்  பண நிர்வாகத்தை  பெண்கள் கையாண்டாலும், பெரிய அளவிலான எதிர்கால நிதித் திட்டமிடல் குறித்த முடிவுகளை எடுப்பது ஆண்களின் கைகளில்தான் நேற்று வரை இருந்துவந்தது.  தற்போது இந்த முடிவுகளை  பெண்களும் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். குடும்பத்தின் எதிர் காலத் தேவைகளுக்கான திட்ட மிடலைக் கேட்டு நாணயம் விகடனுக்கு வரும் மின்னஞ்சல்களில்  10-க்கு 4 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரிய முன்னேற்றம்.  இனி வரும்காலத்தில் நிதி  தொடர்பான முடிவுகளை பெண்களே சுயமாக எடுக்கும் நிலை வரும் என்பது நிதர்சனம்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!

காவ்யா, சென்னையைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வயது 29. இவரின் கணவரும் தனியார் நிறுவனத்தில்  பணிபுரிகிறார். வயது 35. இருவருமாகச் சேர்த்து மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

காவ்யாவிடம் நாம் பேசினோம்.  “நாங்கள் இப்போது வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். சென்னைப் புறநகரில் 900 சதுர அடியில் மனை ஒன்றை ரூ.8 லட்சத்துக்கு வாங்கியுள்ளோம். இதற்கு ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளோம். மீதமுள்ள ரூ.6 லட்சத்தை  இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு இ.எம்.ஐ. தொகையாக ரூ.25 ஆயிரம்  செலுத்தி வருகிறோம். பங்குச் சந்தையில் ரூ.2 லட்சமும்,  மியூச்சுவல் ஃபண்டில் ரூ.80 ஆயிரமும் தற்போது உள்ளது. 

எங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 15 வருடங்களில் ரூ.5 லட்சம் தேவை; குழந்தையின் திருமணத்துக்கு அடுத்த 20 வருடங்களில் ரூ.25 லட்சம் தேவை. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது என் 34-வது வயதில் வேலையிலிருந்து விலகி, சூப்பர் மார்க்கெட் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்கு ரூ.20 லட்சம் தேவை. இதற்கான ஆலோசனையும் முக்கியமாகத் தேவை. 

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!

அடுத்து, ஓய்வுக் காலத்துக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீட்டுத் திட்டங்கள் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும். இலக்குகளுக்கான தொகைகள் அனைத்தையும் இன்றைய மதிப்பில் குறிப்பிட்டு உள்ளேன்” என்றவர் தன் முதலீடுகள், வரவு செலவு விவரப் பட்டியலை அனுப்பி வைத்தார்.  

மாதாந்திரச் செலவுகள் மற்றும் முதலீடுகள் (ரூ.)

• வீட்டு வாடகை     : 10,000

• குடும்பச் செலவுகள்    : 10,000

• எஸ்.ஐ.பி (ஃபண்ட்)    : 10,000

• செல்வமகள் திட்டம்     : 10,000

• மனை இ.எம்.ஐ     : 25,000

• டூவீலர், டிவி இ.எம்.ஐ : 8,000 (இன்னும் ஆறு  மாதங்களில் முடியும்)

• இதர செலவுகள்     : ரூ.2,000

• மொத்தம்         : ரூ.75,000

• பி.எஃப்                : ரூ.3,600 (இதுவரை ரூ.2 லட்சம்)

இனி இவருக்கான நிதித் திட்ட மிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ்  பார்த்தசாரதி.

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!“காவ்யா, நீங்கள் பிசினஸ் தொடங்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன்  இருக்கிறீர்கள், வாழ்த்துகள். ஆனால், எந்த பிசினஸாக இருந்தாலும், அதில்  முன் அனுபவம்  பெற்றிருப்பது ஜெயிக்க உதவும். சிறிய அளவில் பிசினஸ் தொடங்கிப் படிப்படியாக விரிவுபடுத்துவதன் மூலம்  அனுபவத்தை வளர்த்துக்கொள்ள உதவும். 

நீங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் பிசினஸ் ஆரம்பிக்க ரூ.28 லட்சம் தேவையாக இருக்கும். இந்தத் தொகையைச் சேர்க்க இப்போது உங்களிடம் போதிய வருமானம் இல்லை. எனவே, ரூ.14 லட்சத்தை முதலீட்டின் மூலம் சேர்த்து,  மீதியுள்ள ரூ.14 லட்சத்தைக் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரூ.14 லட்சத்தைச் சேர்க்க மாத மொன்றுக்கு ரூ.17,100 முதலீடு செய்ய வேண்டும். தற்போது நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் ரூ.10 ஆயிரத்தையும், டிவி, டூவீலர் இ.எம்.ஐ முடிந்ததும், அந்தத் தொகையுடன் ரூ.8,000-த்தை சேர்த்தும், முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கிடைக்கக்கூடும்.

எப்போதுமே ஒரு பிசினஸ் தொடங்கும்போது முதல் ஆண்டுக்கான செலவுகளுக்குப் பணத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது. குடும்பச் செலவுகள், குழந்தைகளுக்கான முதலீடு, வாங்கும் கடனுக்கான இ.எம்.ஐ, பிசினஸை நடத்தவாகும் செலவுகள் என உங்களுக்கு மாதம் ரூ.1,10,000 தேவைப்படும். குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாவது சேர்த்துக் கொள்வது நல்லது. மனைக் கடன் முடிந்ததும் மாதம் ரூ.24,300 என மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் கிடைக்கக்கூடும். 

2022-ல் பிசினஸ் கடனாக ரூ.14 லட்சத்தை  18% வட்டியில் நான்கு வருடங்களில் திரும்பச் செலுத்தும் வகையில் வாங்கும்பட்சத்தில், ரூ.41,100 இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். முதல் இரண்டு, மூன்று மாதங்கள் இருப்புத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து இ.எம்.ஐ செலுத்தினாலும், அதன்பிறகு பிசினஸிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு இ.எம்.ஐ செலுத்த ஆரம்பித் தால், இருப்புத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு பிசினஸ் வளரும் வரை வைத்துக் கொள்ளலாம். 

அடுத்து, உங்கள் மகளின் மேற்படிப்புக்கு ரூ.14 லட்சம் தேவையாக இருக்கும். உங்களிடம் முதலீட்டுக்கான வாய்ப்புக் குறைவாக இருப்பதால், மாதம் 3,000 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கி, வருடந்தோறும் 5% முதலீட்டை அதிகரிக்கலாம். 

உங்கள் மகளின் திருமணத்துக்கு இன்றைய மதிப்பில் ரூ.25 லட்சம் என்பது உங்கள் பொருளாதாரச் சூழலில் சற்று அதிகமே. ரூ.15 லட்சம் போதுமானதாக இருக்கும் என்பது என் கணிப்பு. இதன்படி பார்த்தால், 20 வருடங்கள் கழித்து உங்களுக்கு ரூ.58 லட்சம் தேவை. அதற்கு ரூ.9,400 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.6,500 முதலீட்டில் ஆரம்பித்து, ஆண்டுக்கு 5% படிப்படியாக முதலீட்டை அதிகரிக்க வேண்டும். செல்வமகள் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து வரும் 10,000 ரூபாயை இதற்கும், மேற்படிப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்.

அடுத்து, உங்கள் ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை பிசினஸ் தொடங்கியபிறகு, அதாவது 2023-லிருந்து தொடங்குங்கள். ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ1.63 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.4.3 கோடி சேர்க்க வேண்டும். நீங்கள் வேலையிலிருந்து விலகி பிசினஸ் ஆரம்பித்தபிறகு, உங்கள் பி.எஃப் தொகையை எடுத்து ஓய்வுக் காலம் வரை மறு முதலீடு செய்தால், ரூ.63.7 லட்சம் கிடைக்கக்கூடும். மீதம் ரூ.3.67 கோடி சேர்க்க வேண்டும். அதற்கு மாதம் ரூ.23,300 முதலீடு செய்ய வேண்டும்.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!

நீங்கள் ரூ.30 முதல் 50 லட்சம் அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ரூ.3 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ளவும். பங்குகள், ஃபண்டுகளில் இதுவரை உள்ள தொகையிலிருந்து பிரீமியம் செலுத்திக் கொள்ளவும். மீதமுள்ள தொகையை அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும்.

பரிந்துரை: நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்துவரும் ஃபண்டுகளைத் தொடரலாம். டிவி லோன் முடிந்ததும் கூடுதலாக ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூட்டீஸ் ஃபண்டில் ரூ.3,000, யூ.டி.ஐ டைனமிக் பாண்ட் ஃபண்டில் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லாங் டேர்ம் ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்யவும்.”

குறிப்பு:
இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor- Reg.

no - INA200000878 

கா.முத்துசூரியா 

நிம்மதி தரும் நிதித் திட்டம் -10 - 34 வயதினிலே!