நடப்பு
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!

நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!

நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!

ரு படத்தில் வடிவேலு ‘கிணத்தைக்  காணோம்’னு போலீஸ்ல புகார் கொடுப்பார்; கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரு சம்பவம் பங்குச் சந்தையிலும் கடந்த வாரம் நடந்தது. ‘நேத்து வாங்கின பங்கைக் காணோமே’ என்று பல முதலீட்டாளர்கள் கதறித் துடித்தனர். இதனால், உச்சத்தில் இருந்த பங்குச் சந்தை கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியது.   

நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!

வடிவேலு நடித்த சினிமாப் படத்துக்கும் கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அந்தப் படத்தில் வடிவேலு போலீஸில் புகார் கொடுப்பார். இங்கே போலீஸ்தான் காணாமல் போனதற்குக் காரணம்.

இந்தச் சம்பவம், இந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களை மட்டுமின்றி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அப்படி என்ன நடந்தது?

சென்ற திங்கள்கிழமையன்று மாலை, சுமார் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டது செபி. மறுநாளே அவற்றின் வர்த்தகம் பங்குச் சந்தைகளில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ‘க்ரேடட் சர்வைலன்ஸ் மெஷர்’ (Graded Survillence Measure- GSM) என்னும் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அது என்ன ஜி.எஸ்.எம் என்று கேட்கிறீர்களா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் அமைப்பான செபியின் பங்களிப்பு அபரிமிதமானது. அந்த  அடிப்படையில், சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறைதான் இந்த ஜி.எஸ்.எம்.

அதாவது சந்தேகத்துக்கிடமான முறையில் செயல்பாடுகள் உள்ள நிறுவனங்கள், திடீரென அதீத ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் அல்லது திடீரென வழக்கத்தைவிட அதிக அளவில் வணிகமாகும் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி சிறு முதலீட்டாளர்கள்  மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக செபி அறிமுகப்படுத்திய நடவடிக்கை இது. கடந்த கால சந்தை ஏற்றங்களில் இப்படிப் பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

நாகப்பன் பக்கங்கள்: ஷெல் கம்பெனிகள்... செபியின் நடவடிக்கையினால் கதிகலங்கிய சந்தை!இதில் ஒன்று, இரண்டு என ஆறு அளவுகோல் களின்படி, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் உண்டு. நாம் வாங்கும் பங்கின் மதிப்பைப்போல, இருமடங்கு, அதாவது 200% முன்பணமாகக் கட்ட வேண்டும்; அந்தப் பணம் பல மாதங்களுக்குப் பின்புதான் திரும்பத் தரப்படும், திங்கள்கிழமை மட்டும் வாரத்துக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே பங்குகள் வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்படும். 

இந்தக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்த 300-க்கும் மேற்பட்ட பங்குகளைச் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் கொண்ட ‘ஷெல் கம்பெனி’கள் என வகைப் படுத்தியது மத்திய அரசின் வர்த்தக விவகாரத் துறை அமைச்சகம்.

வகைப்படுத்தியவுடன், அந்தத் தகவலை     செபியிடம் பகிர்ந்துகொண்டது மத்திய அரசின் அமைச்சகம். மேலும், இந்த நிறுவனங்களை ஜி.எஸ்.எம் ஆறு என்னும் கடுமையான உச்சபட்ச நடவடிக்கைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டது. செபியும் அதைப் பின்பற்றி, பங்குச் சந்தைகளுக்கு உத்தரவிட்டது.

இதன் தாக்கம் என்னவென்று பார்ப்போம். இந்தப் பிரச்னை முடியும்வரை, இந்தப் பங்குகள் இப்போதைக்கு மாதம் ஒருமுறை மட்டுமே, அதுவும் முதல் திங்கள்கிழமை மட்டுமே சந்தைகளில் வர்த்தகமாகும்.

இந்தப் பங்குகளின் விலை அதிகரிக்கவே முடியாது என்பது அதிர்ச்சியான விஷயம். இந்தப் பங்குகளை வாங்குபவர், பங்குக்கான விலை போக கூடுதலாக இரு மடங்கு, அதாவது 200% அதிக முன்பணம் வேறு கட்ட வேண்டும். இந்தப் பணம் பல மாதங்கள் கழித்தே நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பொய்க் கணக்குக் காட்டி, சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த மாதிரி நிறுவனப் பங்குகள் மீதான கடும் நடவடிக்கைகள் வரவேற்கக்கூடியதே. இதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.

அதேசமயம், இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கும் சில நிறுவனங்களின் பெயரைப் பார்த்து முதலீட்டாளர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். முறையாகத் தொழில் செய்து, ஆடிட்டர்களால் கணக்குத் தணிக்கை செய்யப் பட்டு, வருமான வரியைக் கட்டி, சேவை வரி, கலால் வரி ஆகியவற்றையும் கட்டி, பங்குச் சந்தைகளுக்குத் தங்கள் செயல்பாடுகளையும் நிதி நிலை அறிக்கைகளையும் தொடர்ந்து பதிவு செய்துவரும் நிறுவனங்களின் பெயரும் இவற்றில் இருக்கிறதே என்பதுதான் முதலீட்டாளர்களின் ஆச்சர்யத்துக்குக் காரணம். 

வர்த்தகம் நிறுத்தப்பட்ட பங்கு நிறுவனங்கள், என்ன காரணத்துக்காக அதன் பங்குகள் வர்த்தகமாவது  நிறுத்தப்பட்டுள்ளது என எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை என்பது முக்கியமான அதிர்ச்சி. எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஒளிவுமறைவில்லாமல் சொல்லியிருந்தால், அதிர்ச்சியோ அல்லது குழப்பமோ முதலீட்டாளர்களிடம் ஏற்படாமல் இருந்திருக்கும்.  
 
உதாரணமாக, கோவையைச் சேர்ந்த ‘லோட்டஸ் ஐ கேர் ஹாஸ்பிடல்’ என்னும் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. லாபம் ஈட்டி வரும் இந்த நிறுவனம் இப்போது டிவிடெண்டும் வழங்கியிருக்கிறது. இதன் இயக்குநர் குழுவில், பத்மஸ்ரீ, பத்மபூஷன் பட்டம் பெற்ற பிரபலமானவர்கள் அடக்கம். இந்த நிறுவன பங்கு வர்த்தகம் முடக்கப்பட்டது ஏன் என்பது பலரும் கேட்கும் கேள்வி.

செபியின் இந்த நடவடிக்கையால் தங்கள் இமேஜ் பாதிக்கப்பட்டு, தொழில் தடைப்படலாம் என்கிற அச்சத்தில், இந்த உத்தரவை எதிர்த்து ‘சாட்’ (SAT - Securities Appellate Tribunal) என்னும் அமைப்புக்குச் சென்று முறையிட்டுள்ளன சில நிறுவனங்கள். இவற்றின் மீது விதிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நீக்குமாறும் ‘சாட்’ உத்தரவிட்டது.

எனினும், கடந்த வெள்ளியன்று, ஜே.குமார் இன்ஃப்ரா நிறுவனத்தின் விலை ரூ.56.70 இறக்கம் கண்டு, ரூ.226.96 ஆகவும், பிரகாஷ் இண்டஸ்ட்ரிஸ் ரூ.27.80 இறக்கம் கண்டு, ரூ.111.20 எனவும்  20% வீழ்ச்சியைச் சந்தித்தன.

பொதுவாக, இந்த மாதிரிப் பிரச்னைகளில் விஜய் மல்லையாவைப் போன்ற  புரமோட்டர்களை விட, சிறு முதலீட்டாளர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தில் இனிவரும் நாள்களில் இன்னும் நல்ல தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.