
முடக்கப்பட்ட 11 லட்சம் பான் கார்டுகள்... - உங்கள் பான் கார்டின் நிலை..?
மத்திய அரசாங்கம் சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. ஒரு நபரின் பெயரிலேயே பல பான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து, அவற்றை முடக்கியிருக்கிறது. மத்திய அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை ஒரே நேரத்தில் லட்சக் கணக்கில் முடக்கப்பட்டு இருப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை ஆகும்.

பான் அட்டை என்பது வருமான வரித் தாக்கல் செய்யும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணம் என்கிற நிலை மாறி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டையாக மாறியுள்ளது.
என்றாலும், இதில் போலி பான் அட்டைகள் பெருகிவிட்டன என்கிற உண்மை சமீபத்தில் நடந்த பல்வேறு சோதனைகளின்போது வெட்ட வெளிச்சமானது. அதாவது ஒரே நபரின் பெயரில் உலவிய பல பான் அட்டைகள், இறந்தவர்களின் பெயரில் இருந்தவை, ஒரே பான் எண் பலருக்கும் வழங்கப்பட்டது எனப் பல குளறுபடிகள் நிறைந்த பான் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்த தகவல்களை மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் சமீபத்தில் வெளியிட்டார். ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்த அவர், “பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஆவணமாகவும், ஒரு நபர் செய்யும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பதுதான் வழிகாட்டிக் கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின்படி, உயிருடன் இல்லாத நபர் அல்லது பொய்யான அடையாளம் கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த பான் கார்டுகள் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 போலி பான் கார்டுகள் அடையாளம் கண்டு, நீக்கப்பட்டுள்ளன” என்றார்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்பு, உங்கள் பான் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது. அதனை அறிந்துகொள்ள, முதலில், https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இந்த லிங்க்குக்குச் செல்லுங்கள். அடுத்ததாகத் திறக்கும் வலைபக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத் (உங்கள் பெயர், துணைப் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யைப் (One Time Password) பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.
தற்போது பான் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மற்றும் சேவைகளைப் பெற பான் எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அடிப்படைச் சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம்’ என்று மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்தது மத்திய அரசு. இதற்காக ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ம் தேதிக்குள் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை. எனவே, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பான் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான வசதியை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து, பிறகு கேட்கப்படும் சுய விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பான் கார்டு செயல்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதனை ஆதாருடன் இணைக்க நடவடிக்கை எடுக்கலாமே!
-ராகினி ஆத்மவெண்டி எம்.