
ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள் - 7ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை
கே.மாணிக்கம், சேலம்
எனக்கு வீட்டு வாடகையாக மாதமொன்றுக்கு ரூ.4 லட்சம் வருகிறது. ஓய்வு பெற்ற எனக்கு மாதந்தோறும் பென்ஷன் உள்பட ரூ.5 லட்சம் வருமானம் வருகிறது. நான் ஜி.எஸ்.டி வரியைக் கட்ட வேண்டுமா?

‘‘வீட்டு வாடகை வருமானத்துக்கு ஜி.எஸ்.டி-யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. (Notification No; 12/2017 Central Tax(Rate) dated 28/06/2017 as amended). மேலும், ஓய்வூதியத்துக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டியதில்லை.’’
ஜி.விவேகாநந்தன், வேலூர்
தமிழக அரசாங்கம் 40 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி மாற்றம் செய்ய மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது. இதில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, இவற்றில் எதற்கெல்லாம் வரிகள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன?
‘‘வெட்கிரைண்டருக்கு 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், கிலோ 100 ரூபாய்க்கும் கீழ் உள்ள பிஸ்கெட்டுகளுக்கு 5% வரியும் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் 18 சதவிகிதமாகவும், கம்பெரஸர் விலையைக் குறைக்கவும், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் ஃபர்னிச்சர் வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள் கள் 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், வீட்டு மற்றும் விவசாய உபயோக மின்சாரக் கம்பிகள் 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், ஏ.சி அல்லாத உணவகங்களுக்கு 5 சதவிகிதமாகவும், ஏ.சி உணவகங்களுக்கு 12 சதவிகிதமாகவும் குறைக்க தமிழக அரசு வேண்டுகோள் வைத்திருக்கிறது. மேலும், டிராக்டர்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான உதிரிப்பாகங்களுக்கு 12 சதவிகிதமாகவும் மற்றும் டயர் வேலைப்பாடுகளுக்கு 5 சதவிகிதமாகவும் விதிக்கப்பட வேண்டும். கிரானைட் மற்றும் மார்பிள் சாதனங்களுக்கு 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும் குறைக்கப்பட வேண்டும்.

அவுட்சோர்ஸிங் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுச் சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். 20 லிட்டர் குடிநீர் கேன்கள், இட்லி மற்றும் தோசை மாவு, மீன் வலை, கண்ணாடி மற்றும் அதன் பாகங்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு வேலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். நிலக்கடலை, சாக்லேட் மீதான வரி விகிதத்தை 18 சதவிகிதத்தி லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதில் சாக்லேட், மிட்டாய் மற்றும் ஊறுகாயும் அடங்கும். மேலும், பட்டுத் துணிகளுக்கு மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் ஆகியவற்றுக்கும் வரி விலக்குக் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கோரிக்கையில் சில 20-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அவை,
1) சில டிராக்டர் பாகங்கள்மீது வரி விகிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
2) ஜவுளித் துறையின் அனைத்துவகையான ஜாப் வொர்க் வேலைகளுக்கும் ஜிஎஸ்டி 5% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3) பணி ஒப்பந்தங்கள் ஜி.எஸ்.டி-யின் கீழ் 12% வரிக்கு உட்படுத்தப்பட்டு, உள்ளீட்டு வரி வரவுடன் செலுத்தப்பட வேண்டும்
மற்ற பொருள்களுக்கான வரி விகிதங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.’’
சி.ஆர்.ரமேஷ், தேனி.
நான் தேனியில் பருத்தி ஆலை வைத்திருக்கிறேன். நான் எதையும் விற்பனை செய்வதில்லை என்பதால், நான் சேல்ஸ் டாக்ஸ்-ல் பதிவு செய்துகொள்ளவில்லை. என் ஆடிட்டர் சொல்கிறபடி, ஜி.எஸ்.டி படி கான்ட்ராக்ட் சர்வீஸ் கீழ் இப்போது நான் பதிவு செய்துகொண்டிருக்கிறேன். என் ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.20 லட்சத்துக்கு மேல். நான் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?
``சரக்கு மற்றும் சேவை சட்டப்பிரிவு 2-ன்படி, மற்றொருவரின் பொருளில் அல்லது உற்பத்தி வேலையில் வரி செலுத்தப்படும்போது, அது `சேவை வழங்கல்’ எனச் சொல்லப்படும். ஆகவே, உங்களுடைய விதை நீக்கிய பருத்தி, சேவை வழங்கல் எனக் கருதப்பட்டு, வரி செலுத்தப்படும் சப்ளையாகக் கருதப்படும். நீங்கள் சொன்னபடி, உங்களுடைய டேர்ன் ஓவர் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருப்பதால், ஜி.எஸ்.டி செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள். அதன்படி, 2.5% சி.ஜி.எஸ்.டி-யும், 2.5% எஸ்.ஜி.எஸ்.டி-யும் ஆக மொத்தம் நீங்கள் 5% ஜி.எஸ்.டி கட்ட வேண்டும். . ஜாப்வொர்க் இன்வாய்ஸில் நீங்கள் இரண்டு வரிகளையும் தனித்தனியாகக் காட்ட வேண்டும்.’’
ஆர்.எஸ்.சங்கரன், புதுச்சேரி.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், ஜி.எஸ்.டி-யில் குறிப்பிடும்படியான மாற்றம் ஏதும் உண்டா?
“புதுச்சேரியில் உள்ள வரி விகிதமும் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள வரி விகிதமும் ஒரே மாதிரியாகும். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால், புதுச்சேரிக்குக் குறைந்த வரி செலுத்துவதன் பொருட்டு ஒரு பொருளை வாங்கவோ அல்லது கிளை திறக்கவோ புதுச்சேரிக்குப் போக வேண்டியதில்லை.”
தொகுப்பு: ஆகாஷ்
