மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ!

 ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ!

செல்லமுத்து குப்புசாமி

ங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஏதோ ஒரு பண்டத்தை விற்று, வாங்குகிற வியாபாரம் கிடையாது. அது ஒரு பிசினஸில் நாமும் பார்ட்னராக, சக உரிமையாளராக, ஒரு நிறுவனத்தின் லாப - நஷ்டங்களில் பங்கெடுப்பதற்கான அச்சாரமாகக் கருத வேண்டிய ஒரு நிகழ்வு என்று ஏற்கெனவே பேசியிருக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதையும், கல்யாணத்துக்கு வரன் தேடுவதையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அணுக வேண்டும்.  

 ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ!

நம் வீட்டுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் ஆராய்வோம்? கல்வித் தகுதி என்ன, பையன் நல்ல வேலையில் இருக்கிறாரா, அவர் வேலை செய்யும் கம்பெனியின் பெயர் என்ன, அது நல்ல கம்பெனியா, உண்மையிலேயே அந்த வேலையில்தான் இருக்கிறாரா, அவர் சொல்லும் சம்பளம் நிஜம் தானா, நல்ல குடும்பமா, பழக்கவழக்கம் எப்படி, கூடா நட்புகள் உண்டா, வேறு எதேனும் தொடர்புகள் உண்டா என்றெல்லாம் பல கோணங்களிலும் ஆராய்வோம் இல்லையா?

சில விஷயங்களை எண்கள், எண்ணிக்கைகள் மூலம் அறியலாம். உதாரணத்துக்கு, மாதவனுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளம், ஊரில் ஐந்து ஏக்கர் விவசாய நிலமும், குடியிருக்க வீடும் உள்ளது என்பது போன்றவை அளக்கக்கூடிய (quantitative) விஷயங்கள். அளவிட முடியாத சில (qualitative) சங்கதிகளும் உள்ளன. இப்போதைக்கு நாம் அளவிடக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

“மாப்பிள்ளை வேலைக்குப் போறது, மாசமானா கைநிறைய சம்பளம் வாங்கறது எல்லாம் இருக்கட்டுங்க. பூர்வீகச் சொத்து, வீடு வாசல் ஏதாவது இருக்கா?” என்ற கேள்வியை நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம்.

இப்போதெல்லாம் யாருக்கு எப்போது வேலை போகும் என்று தெரியவில்லை. மேலை நாடு களைப்போல, நமக்கு வேலை என்பது போய் விட்டால், நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆதரவான விஷயம் (Support Mechanism) ஏதும் கிடையாது. ஒருவேளை, வேலை பறி போனால்கூட வேறு எதாவது சொத்து இருந்தால், வாழ்க்கை சிக்கலில்லாமல் ஓடும் என நாம் நினைப்பதில்  ஒன்றும் தவறில்லை. அதனால்தான் நாம் சம்பளத்துடன் சேர்த்து, மாப்பிள்ளை (அல்லது மாப்பிள்ளை வீட்டார்) வேறு என்ன வைத்திருக்கிறார் என யோசிக்கிறோம்.

இதே அணுகுமுறையை ஷேர் மார்க்கெட் முதலீடுகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஷேர் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது (EPS), ஒரு ரூபாய் லாபம் சம்பாதிக்கும் ஷேரை வாங்குவதற்கு நாம் எவ்வளவு செலவிட வேண்டியிருகிறது (PE விகிதம்) என்பன மாப்பிள்ளை எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற கேள்விக்கான விடைகள்.

 ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ!



ஒருவேளை, நாளைக்கே பிசினஸை இழுத்து மூட நேரிட்டால் நம் முதலீடு என்னவாகும்? இந்தக் கேள்விக்கான விடைதான் புக் வேல்யூ (book value) எனப்படும் புத்தக மதிப்பு. இந்தப் புத்தக மதிப்பீட்டைப் புரிந்துகொள்வதற்கு, கம்பெனியின் பேலன்ஸ்ஷீட்டை கவனிக்க வேண்டும். பேலன்ஸ் ஷீட்டில் ஒருபக்கம் கம்பெனியில் உடைமைகள் (வர வேண்டியவை, வங்கி இருப்புகள், மற்ற உடமைகள்) இருக்கும், இன்னொரு பக்கம் அதன் சுமைகள் (கடன்கள், செலுத்த வேண்டிய பாக்கிகள்).
சுமைகளைவிட உடைமைகள் கூடுதலாக இருந்தால், அது வலுவான பேலன்ஸ்ஷீட்.  கடன்கள் அதிகமாவும், உடைமைகள் குறை வாகவும் இருந்தால், அது ‘வீக்’கான பேலன்ஸ்ஷீட். வலுவான பேலன்ஸ்ஷீட் உள்ள கம்பெனிகளுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு; என்ன தான் வேலைக்குப் போய் சம்பாதித்தாலும் பூர்வீகச் சொத்து வைத்திருக்கும் மாப்பிள்ளையைப் போல.

உதாரணத்துக்கு, ஒரு கம்பெனியை எடுத்துக் கொள்ளுங்கள். அது தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு, தன்னிடம் இருப்பதை எல்லாம் எடுத்து தனியாகப் பிரித்து, பங்குதாரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறது. அப்படி செய்யும்போது, ஒவ்வொரு பங்குக்கும் (ஷேர்) எவ்வளவு கிடைக்கும்? அதுதான் புக் வேல்யூ.

பேலன்ஸ்ஷீட்டில் சுமைகள் பகுதியில் வங்கிக் கடன், சப்ளையரிடம் பொருள்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய பாக்கி, ஊழியர்கள் சம்பள பாக்கி, மற்றவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை எல்லாம் சேர்த்து ரூ.50 கோடி என்போம். உடைமைகள் பகுதியில் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம், வங்கிக் கையிருப்பு, கையில் உள்ள சரக்குகள், ஏனைய முதலீடுகள் எல்லாம் சேர்த்து ரூ.150 கோடி உள்ளதென்று கருதுவோம்.

சுமைகளையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழித்து விடுவதற்கு ரூ.50 கோடி செலவாகும். அதன்பிறகு ரூ.100 கோடி கையிருப்பில் இருக்கும். (நினைப்பது போல கட்டடங்கள், மற்ற உடைமைகளை எல்லாம் உடனே விற்றுப் பணமாக்கிவிட முடியாது என்பது வேறு விஷயம்!)ஆட்டத்தைக் கலைத்து கம்பெனியை இழுத்து மூடுவதென்று முடிவு செய்தால், கையில் ரூ.100 கோடி மிஞ்சும். அந்த நிறுவனத்தில் மொத்தம் ரூ.2 கோடி ஷேர்கள் உள்ளன எனில், ஒரு ஷேருக்கு ரூ.50 கிடைக்கும்.

கம்பெனியை இழுத்து மூடினால் ஒரு ஷேருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற கேள்விக்கான விடையாக நம் முன்னர் நிற்கும் ரூ.50-தான் அந்த நிறுவனத்தின் புக் வேல்யூ. அந்த கம்பெனியின் ஷேர் விலை பங்குச் சந்தையில் ரூ.100-க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் யோசிப்போம்.

நூறு ரூபாய்க்கு ஷேர் வாங்கினால் ரூ.50-க்கான மதிப்பு ஏற்கெனவே அதனுள் பொதிந்திருக்கிறது. எனவே, பிசினஸ் நொடிந்தாலும்கூட நம் முதலீடு சோரம் போகாது என நாம் கணக்குப் போடுவோம். கூடவே இன்னொரு கம்பெனியும் உள்ளது. அதன் பங்கு விலையும் ரூ.100-க்கு விற்கிறது. ஆனால், அதன் புக் வேல்யூ ரூ.20 மட்டுமே. அப்படியிருக்கும்போது ரூ.50 புக் வேல்யூ உள்ள நிறுவனமே நம் சாய்ஸாக இருக்கும்.

இப்படி பங்கு விலைக்கும் (P), புக் வேல்யூவுக்குமான (BV) விகிதம் P/BV எனப்படுகிறது.  குறைவான பிஇ விகிதம் எப்படி நமக்கு ஈர்ப்பானது என்று கருதுகிறோமோ, அதேபோல குறைவான P/BV  விகிதமும் ஈர்ப்பானது.

P/BV = 1 என்றால் 100 ரூபாய்க்கு வாங்கும் ஷேரில் ஏற்கெனவே 100 ரூபாய்க்கான மதிப்பு அதன் பேலன்ஸ்ஷீட்டில் உள்ளதென்று பொருள்.

P/BV = 2 என்றால் 100 ரூபாய்க்கு வாங்கும் ஷேரில் ஏற்கெனவே 50 ரூபாய்க்கான மதிப்பு அதன் பேலன்ஸ்ஷீட்டில் உள்ளதென்று பொருள்.

P/BV = 5 என்றால் 100 ரூபாய்க்கு வாங்கும் ஷேரில் ஏற்கெனவே 20 ரூபாய்க்கான மதிப்பு மட்டுமே அதன் பேலன்ஸ்ஷீட்டில் உள்ளதென்று பொருள்.

P/BV = 0.5 என்றால் 100 ரூபாய்க்கு வாங்கும் ஷேரில் ஏற்கெனவே 200 ரூபாய்க்கான மதிப்பு அதன் பேலன்ஸ்ஷீட்டில் உள்ளதென்று பொருள்.

ஆனால், அப்படியான முதலீட்டு வாய்ப்புகளை ஷேர் மார்க்கெட்டில் கண்டறிவது அபூர்வம். அப்படியே கண்டறிந்தாலும் அதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். காரணமே இல்லாமல்கூட இருக்கலாம்.

நல்ல வேலை, ஒரே பையன், மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்; அப்பாவுக்கு நிறைய நிலபுலன்கள் உள்ளன. ஆனாலும், 35 வயது வரைக்கும் ஏன் கல்யாணம் ஆகவில்லை???

P/BV ஏன் வெறும் 0.5 என்பதற்கான காரணத்தை ஆராய்ந்தால்... இத்தனை நாள் தேடித் தேடி வலை வீசிய மாப்பிள்ளை அவராகவும் இருக்கக்கூடும்.

(ஜெயிப்போம்)