மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!

செல்லமுத்து குப்புசாமி

ங்களுக்கு ஜெஃப் பெஜோஸைத் தெரியுமா? கடந்த ஜூலை மாதத்தின் இறுதி வாக்கில் அவர் உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் ஆகிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. அதுவரைக்கும் முதலிடத்தைப் பிடித்து வைத்திருந்த பில்கேட்ஸை முந்திச் சென்று அந்த இடத்தை எட்டினார் ஜெஃப்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!

இவரைப் பற்றித் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. 1994-ம் ஆண்டு அமேசான் கம்பெனியைத் தன் கார் ஷெட்டில் இருந்து ஆரம்பித்தார். தற்போது உலகப் பணக்காரர் பட்டியலின் உச்சம் தொட்டிருக்கிறார். (அமேசான் பங்கு விலை சற்றே சரிந்ததால், மறுபடியும் இரண்டாம் இடத்துக்குச் சென்றது வேறு விஷயம்.)

இந்த அமேசானின் வெற்றிக் கதையையும், ஜெஃப்பின் வெற்றிக் கதையையும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள். அமேசான் மட்டுமல்ல, வெற்றி பெற்ற எல்லா பிசினஸ் சாம்ராஜ்ஜியங்களைப் பற்றி வாசிப்பது ஒரு நல்ல முதலீட்டாளராவதற்கு உதவும்.

தொடக்கத்தில், ஆன்லைனில் புத்தகங்களை விற்கும் ஒரு முயற்சியாகத்தான் அமேசான் உருவானது. புத்தகக் கடைகளை எல்லாம் மெள்ள மெள்ள விழுங்கிச் செரித்த பிறகு, மற்ற பொருள்களையும் ஆன்லைனில் விற்கத் துவங்கியது. இதில் என்ன வேடிக்கை என்றால், முதலில் தனது புத்தக விற்பனையை இழுத்து மூடிய அமேசான், தற்போது தனது கிண்டில் ஈ-புக் மூலம் படிப்படியாக பதிப்பகங் களுக்கும் மூடுவிழா நடத்திக்கொண்டு வருகிறது.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!தற்போது அமேசான், உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக உள்ளது. முதலிடம் ஆப்பிள், இரண்டாவது ஆல்ஃபாபெட் (கூகுள்), மூன்றாவது மைக்ரோசாஃப்ட், அதன்பிறகு அமேசான்.

இந்த நான்கு நிறுவனங்களையும் உன்னிப்பாகக் கவனித்தால், இவை அனைத்துமே புதிய தலைமுறை பிசினஸ்கள் என்பது சட்டெனப் புரியும். இவை ஆரம்பித்த காலத்தில் ஆச்சர்யமான ‘தீம்’ என்று சொல்லிக்கொள்ளலாம். கோடிக் கணக்கில் பணம் போட்டு, தொழிற்சாலைகளை நிறுவி, பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்று அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாக ஈட்டி அதை சிறுகச் சிறுக சேமித்து (அல்லது மறுபடியும் பிசினஸில் போட்டு விரிவாக்கம் செய்து) பெரு நிறுவனங்களாக உருவெடுத்தவையல்ல இவை.

ஒரு ஐடியா. அது க்ளிக் ஆனதும், பல்கிப் பெருகி கற்பனைக்கும் எட்டியிராத அபார வளர்ச்சியை ஈட்டியது அந்த ஐடியா. இந்த கம்பெனிகளை அவை சிறிய அளவில் இருந்தபோது (ஏன் இப்போதுமேகூட) வழக்கமாகப் பங்குகளை வாங்க உபயோகிக்கும் சூத்திரங்கள் மூலம் வடிகட்டியிருந்தால் யாராக இருந்தாலும் அவற்றைத் தவறவிட்டிருப்பார்கள். பிஇ விகிதம், புக் வேல்யூ உள்ளிட்ட அநேக காரணிகளில் இவை விடுபட்டுப் போயிருக்கும். சொல்லப் போனால், அமேசானின் பிசினஸ் மாடல் ஒன்றும் புதிதல்ல. டாட் காம் காலகட்டத்தில் பல ஆன்லைன் புத்தகக் கடைகள் உருவாயின. இதே பிசினஸ் மாடலைப் பல பேர் முயன்று பார்த்தார்கள். ஏன், மெக்டொனால்ட்ஸ் ஃபாஸ்ட் புட் செயினைக்கூட சில நிறுவனங்கள் காப்பி அடிக்க முயன்று தோற்றுப்போயின.

ஒரு பிசினஸில் சிறந்து விளங்குவது வேறு; ஒரு புதிய பிசினஸ் மாடலையே உருவாக்குவது வேறு. அப்படி தனக்கென தனிப்பாதை அமைத்த நிறுவனங்கள் இவை. ஆட்டோக்காரர் மீட்டர் போடாமல், அவரைவிட்டால் நமக்கு வேறு வழியில்லையென்று தெரிந்துகொண்டு அநியாயத்துக்கு ரேட் சொன்னால், அந்த அடாவடித்தனத்துக்கு ஒரு முடிவு வரும். ஓலாவும், ஊபரும் வந்து முந்திச் செல்லும். எத்தனைப் பிரதிகள் விற்றது என்ற விவரத்தையும், விற்ற பிரதிகளுக்கான ராயல்டியையும்  ஏழை எழுத்தாளனுக்குக் கொடுக்காமல் ஏமாற்றும் பதிப்பாளரை அமேசான் கிண்டில் கடந்து செல்லும்.

எங்கெல்லாம் சிக்கல்களும், சவால்களும் உள்ளனவோ, அங்கெல்லாம் புதிய பிசினஸ் உருவாவதற்கான சாத்தியம் உள்ளதென்று பொருள். சென்னையில் இரண்டு சாஃப்ட்வேர் பொறியாளர்கள். அவர்களுக்கு ஃபில்டர் காபி குடிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த ஃபில்டர் காபி கிடைக்கும் ‘உயதர சைவ உணவகங்களில்’ விலை மிக அதிகம். வழக்கமான சாலையோர தேநீர் கடைகளுக்குப் போகும் பழக்கமில்லை இவர்களுக்கு. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காபிக் கடை இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிக்கிறார்கள் இருவர். அப்படி உருவானதுதான் இன்று சென்னையின் முக்கியமான இடங்களில் எல்லாம் நாம் காணும் மெட்ராஸ் காபி ஹவுஸ். இப்படியொரு கடை இருந்தால் நன்றாக இருக்குமே என நூற்றுக்கணக்கான சாஃப்ட்வேர் ஆசாமிகள் நினைத்திருப்பார்கள். ஆனால், குமரவேலும், பிரசன்ன வெங்கடேஷும் அந்த நினைப்புக்குச் செயல் வடிவம் தந்்திருக்கிறார்கள்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்!

‘‘நாங்கள் இந்த மாதிரி காபி ஷாப் ஆரம்பிக்கப் போகிறோம். பணம் கொடுத்து ஷேர் ஹோல்டர் ஆகிறீர்களா” என நம்மை அவர்கள் அணுகி யிருந்தால் நாம் யோசித்திருப்போம் அல்லவா? அதுதான் பிசினஸ்.

எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை வெகுவாக உள்ளடக்கியதுதான் பிசினஸ். ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் பிசினஸ் சாம்ராஜ்ஜியங்கள் அப்படியே தேங்கிப் போவதும், புதிய பிசினஸ் சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதும் இயல்பானது. ஆனால், நாம் ஷேர் மார்க்கெட்டில் பங்குகளை ஆராயும்போதெல்லாம் நேற்றைய உலகின் கண்ணாடியை அணிந்துகொண்டு பனிமூட்டம் நிறைந்த அடுத்த நாளைத் தேடுகிறோம். பனிமூட்டத்துக்கு அப்பாலிருப்பது பளபளப்பான நெடுஞ்சாலையா, படுகுழியா என்பது நமக்குத் தெரியாது.

ஆகவே, நாம் என்ன மாதிரியான கண்ணாடியை அணிந்திருக்கிறோம் என்பது முக்கியம். அந்தக் கண்ணாடியை நம் அனுபவத்தின் வாயிலாக, அறிவின் வாயிலாக, வாசிப்பின் வாயிலாக உருவாக்கிக்கொள்வது அவசியம். உதாரணத்துக்கு  ஒரு விஷயம்.

வேளச்சேரியில் சின்னச் சின்ன துணிக்கடைகள் நிறைய இருந்தன. அங்கு சென்னை சில்க்ஸ் வந்ததும் அவற்றில் பாதிக் கடைகள் காணாமல் போயின. சரவணா ஸ்டோர்ஸ் வந்ததும் மிச்சமிருந்தவையும் காணாமல் போகின்றன. அமேசானும் இதே வேலையைத்தான் செய்கிறது. இங்கு அமேசான் என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. புதிய ஐடியாக்கள், அவற்றைச் செயல்படுத்தும் திறன், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் பாங்கு ஆகிய இரண்டின் கலவையே பிசினஸ் வெற்றிக்கான சூத்திரம்.

அப்படித்தான் இன்ஃபோசிஸ் உருவானது, அப்படித்தான் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உருவானது,  பெட்ரோல் பங்கில் வேலை செய்த திருபாய் அம்பானியின் ரிலையன்ஸும் அப்படித்தான் உருவானது.

ஒரு நல்ல முதலீட்டாளருக்கு ‘பிசினஸ் சென்ஸ்’ இருக்க வேண்டும். எந்த கம்பெனியில் ஷேர் வாங்குகிறோமோ, அந்த கம்பெனியைப் பற்றிய புரிதல், அது என்ன துறையில் இயங்குகிறதோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவு, அதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் போக்குகள் பற்றிய தெளிவு  முக்கியம்.

உதாரணமாக, நீங்கள் மருந்துவத் துறை சார்ந்த  நிறுவனத்தின் பங்கை வாங்க நினைக்கிறீர்கள்.  நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த நிறுவனத்தின் பின்னணி என்ன, எத்தனை ஆண்டு காலமாக அந்த நிறுவனம் இந்தத் தொழிலில் இருக்கிறது, கம்பெனியை நடத்துபவர்களின் கடந்த கால பின்னணி என்ன, மருந்து உற்பத்தித் துறை இன்றைக்கு என்ன அளவில் இருக்கிறது, மருந்துகளை விற்கும்போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது உள்ளிட்டவற்றில் தெளிவு வேண்டும். இதற்காக, ஷேர் மார்க்கெட்டை அனலைஸ் செய்கிறேன் என்று நினைத்து, ஷேர் மார்க்கெட்டில் வியாபாரமாகும் எல்லா கம்பெனிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள  வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எந்தெந்தத் துறையில் பங்கெடுக்க (பங்கு வாங்குவது ஒரு பிசினஸில் பங்கெடுப்பதுதானே!) நினைக் கிறீர்களோ, அந்தத் துறையில் உள்ள நிறுவனங்களை மட்டும் அலசி ஆராய்ந்தால் போதும்.

இப்படி நீங்கள் தொடர்ந்து செய்ய ஆரம்பித்து, அது தொடர்பான விஷயங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், ஒரு பங்கின் விலை ஏன் உயருகிறது அல்லது குறைகிறது என்கிற சூட்சுமம் உங்களுக்குச் சட்டெனப் புரியும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்குமுன், பிசினஸ் பழகுங்கள். 
 
(லாபம் சம்பாதிப்போம்)