
ஓவியம்: பாரதிராஜா
பணவசதி படைத்தவர்களுக்குத்தான் நாணயம் விகடனில் குடும்ப நிதி ஆலோசனை சொல்வார்கள் என்று சிலர் முகநூலில், போகிற போக்கில் குற்றச்சாட்டைச் சொல்லிவிட்டுப் போவதுண்டு. எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் திட்டமிடல்கள் வேண்டும் என யார் கேட்டு வந்தாலும், அவர்களுக்கான நிதித் திட்டமிடல்களை நாணயம் விகடன் கடந்த காலத்தில் நிச்சயம் செய்து தந்திருக்கிறது. வீடுகளில் பணிபுரியும் பெண்மணி ஒருவருக்குத் தேவையான நிதித் திட்டமிடலை இந்த வாரம் தருகிறோம்.

அவர் பெயர் ஜோதி. “சார், எனக்கு மெயில் எல்லாம் அனுப்பத் தெரியாது. போனிலேயே சொல்லிவிடுகிறேன்” என்றவர் தொடர்ந்து தன்னைப் பற்றியும், தன் குடும்ப நிதிநிலை பற்றியும், தன் எதிர்காலத் தேவைகள் பற்றியும் நம்மிடம் விளக்கமாகப் பேசினார்,
“நான் சென்னையில் மூன்று வீடுகளில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு 47 வயது. எனக்குத் திருமணமாகிவிட்டது. ஆனால், கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். குழந்தைகள் இல்லை. நான் வேலை செய்யும் வீட்டில் நாணயம் விகடனை வாங்குவார்கள். ஒருநாள் நாணயம் விகடனைப் பற்றி என்னிடம் சொன்னவர்கள், ‘உனக்குன்னு ஏதாவது சேர்த்து வை. அதுக்கு, முதல்ல இந்தப் புத்தகத்தைப் படி’ என்று என்னிடம் கொடுத்தார்கள். நாணயம் விகடனில் குடும்பத்துக்கு நீங்கள் சொல்லும் நிதி ஆலோசனை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எனக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா...” என்று உருக்கமாகக் கேட்டார்.
‘‘நிச்சயமாக’’ என்று சொல்லிவிட்டு, அவர் தொடர்பான விவரங்களைக் குறித்துக்கொண் டோம். அவர் சொன்னவை...

“89 வயதாகும் என் அம்மாவும், மனைவியைப் பிரிந்து வாழும் என் தம்பியும் என்னுடன் இருக்கிறார்கள். என் தம்பிக்கு வயது 45. நான் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். என் தம்பி பர்னிச்சர் கடையொன்றில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார்.
அரிசி முதலான சில பொருள்களை ரேஷனில் வாங்கிக்கொள்வதால், வீட்டு வாடகையோடு சேர்த்து குடும்பச் செலவு ரூ.8,000 வரை ஆகிறது. மீதிப் பணத்தை வீட்டிலேயே சேர்த்து வைக்கிறேன். சிலிண்டருக்காகத் தொடங்கிய வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆனாலும், பணத்தை வங்கியில் போட்டு வைக்கவில்லை. எப்போதாவது உறவினர்களுக்குக் கொடுத்து உதவி செய்வேன். அவர்கள் சில மாதங்களில் திரும்பத் தந்துவிடுவார்கள். உடல்நிலை சரியில்லாதபோது அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிடுவதால் மருத்துவச் செலவுகள் பெரிதாக இல்லை. எப்போதாவது அவசரம் என்றால், அம்மாவைத் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வேன். வருடத்துக்கு இந்த வகையில் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். வேறு எந்தச் செலவும் இல்லை. தற்போது ரூ.1 லட்சம் வரை வீட்டில் சேர்த்து வைத்துள்ளேன்.

என்னாலும், என் தம்பியாலும் இன்னும் பத்து வருடம் வரை வேலை பார்த்து சம்பாதிக்க முடியும். அதற்குப் பிறகு ஆண்டவன் விட்ட வழி. எங்கள் இருவருக்கும் இன்றைக்குப் போலவே பிற்காலத்தில் வாழ்க்கையை நகர்த்தத் தேவையான வருமானம் தொடர்ந்து கிடைக்கும் வகையில் ஏதாவது ஆலோசனை சொன்னீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன். இது தவிர, வேறு என்ன வேண்டும் என்று எனக்குக் கேட்கத் தெரியவில்லை’’ என்று நிறுத்தினார். இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருந்தாலும், எந்தவொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு இலக்கு இருக்க வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டும். அந்த வகையில் எதிர்காலத்துக்காகச் சேமிக்க வேண்டும் என நினைக்கும் இவரை நாம் எல்லோருமே பாராட்டலாம்.
இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு, பெண்கள் பணத்தை அஞ்சறைப் பெட்டிகளிலும், அடுக்குப்பானைகளிலும் சேமித்து வைப்பார்கள். இது கம்யூட்டர் யுகம். வங்கிக் கணக்கு இல்லாதவர் கள் யாரும் இப்போது இருக்க முடியாது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பதாகச் சொல்லியுள்ளீர்கள். சம்பாதிக்கும் பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்தாலாவது குறைந்தபட்ச வட்டி வருமானம் கிடைத்திருக்கும். வீட்டிலேயே வைத்திருப்பதால், பணத்தின் மதிப்பு குறைந்து போவதுடன், பாதுகாப்பும் இல்லை. சராசரியான வருமானம் தரும் எளிமையான சேமிப்புத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. நீண்ட காலத்தில் ஓரளவுக்கு நல்ல லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இருக்கின்றன. இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ரூபாய் 2 லட்சம் கவரேஜ் தருகிற பிரதம மந்திரியின் இன்ஷூரன்ஸ் திட்டம் (விபத்து) பாலிசியை ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரீமியம் செலுத்திப் பெற்றுக்கொள்ளுங்கள். ரூ.330 பிரீமியம் செலுத்தி, ரூ.2 லட்சம் கவரேஜ் பெறக்கூடிய லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்தை யும் எடுத்துக்கொள்வது அவசியம். இன்னும் கூடுதல் வசதி படைத்தவர்கள் ஆண்டுக்கு ரூ.5,000 செலுத்தி பென்ஷன் திட்டத்திலும் சேர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் 60 அல்லது 62 வயது வரை பணிபுரிவதாக வைத்துக்கொள்வோம். உங்களுடைய ஓய்வுக் காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.19,300 தேவையாக இருக்கும். ஆக, நீங்கள் ரூ.58 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும். இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் சேர்ப்பது என்று பிரமிக்க வேண்டாம். இன்னும்கூட கூடுதலான தொகையை, உங்களால் மிக சுலபமாக சேர்க்க முடியும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், ரூ.50 ஆயிரத்துக்குள் முதலீடு செய்யும்பட்சத்தில் பான் கார்டு அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் சில நூறு ரூபாயைச் செலவழித்து, நீங்கள் பான் கார்டு வாங்கினால், பிற்காலத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்ய நிச்சயம் பயன்படும். உங்களுக்கு தற்போது மாதமொன்றுக்கு ரூ.17 ஆயிரம் மீதமாகிறது. அதனை எப்படிப் பிரித்து முதலீடு செய்யலாம் என்று சொல்கிறேன்.
ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்டிலும், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்டிலும் மாதமொன்றுக்கு தலா 2,000 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் கிடைக்க சாத்தியமுண்டு. நிறுவனங்களில் பணிபுரி பவர்களுக்கு பி.எஃப் இருப்பதுபோல, எல்லோரும் முதலீடு செய்யும் வகையில் பி.பி.எஃப் உள்ளது. இதில் நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், உங்களின் ஓய்வுக் காலத்தில் ரூ.17.15 லட்சம் கிடைக்கக்கூடும்.
அடுத்து, தபால் ஆர்.டி-யில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால், 10 வருடங்களில் ரூ.8.75 லட்சம் கிடைக்கும். அதனை மறுமுதலீடு செய்தால், உங்கள் ஓய்வுக் காலத்தில் ரூ.10.7 லட்சம் கிடைக்கக்கூடும். அடுத்து, வங்கி ஆர்.டி-யில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்யும்பட்சத்தில் உங்களின் 60 வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கக்கூடும். ஆக மொத்தமாக, நீங்கள் ஓய்வுபெறும்போது ரூ.68 லட்சம் வரை கிடைக்கக்கூடும்.
எல்லா வகை முதலீட்டுக்கும் போக, உங்களிடம் இன்னும் ரூ.1,000 இருக்கும். அரசாங்கம் வழங்கும் ரூ.1 லட்சம் காப்பீட்டை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளவும். தேவைப்பட்டால் மிச்சமிருக்கும் 1,000 ரூபாயைப் பயன்படுத்தி இன்னும் ரூ.1 லட்சத்துக்குக் கூடுதலாக ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ளவும்.
உங்களிடம் தற்போதுள்ள ரூ.1 லட்சத்தை இரண்டாகப் பிரித்து டெபாசிட் செய்து வைக்கவும். அவசரத் தேவை உருவாகும்போது அதிலிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஓய்வுக் காலத் தேவைக்கு மேலேயே சேர்க்க வாய்ப்பு இருப்பதால், ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
இங்கே பரிந்துரை செய்யப்பட்ட முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி (மியூச்சுவல் ஃபண்ட் உள்பட) உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, நன்கு புரிந்துகொண்ட பின் முதலீடு செய்யுங்கள்.
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg.
no - INA200000878
கா.முத்துசூரியா
