மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்!

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

தி.மு.க இல்லை என்றால் அ.தி.மு.க-வோ, காங்கிரஸ் இல்லை என்றால் பி.ஜே.பி-யோ, கோககோலா இல்லை என்றால் பெப்சியோ வளர்ந்திருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எந்தவொரு சின்ன விஷயம் என்றாலும் போட்டி என்று ஒன்று இருந்தால்தான், சில விதமான முயற்சிகள், பலவிதமான பயிற்சிகள் முனைப்புடன் நடக்கும்; அதுதான் மிகப் பெரிய வெற்றிகளை வாரிக்குவிக்க உதவும்.   

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்!

நம் வாழ்க்கையில் வெற்றிக்கு உத்வேகம் தரக்கூடிய ஆரோக்கியமான போட்டி என்பது நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவசியம். பிசினஸில் இது மிக மிக அவசியம். முதல் மதிப்பெண் பெற்ற மாணவனைப் பார்த்து இரண்டாம், மூன்றாம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள், “அடுத்த முறை உன்னைவிட நான் அதிக மதிப்பெண் எடுத்துக்காட்டுவேன்” என மனதுக்குள் எடுக்கும் சபதம்தான் அவர்களை முதலிடத்துக்குக் கொண்டுவரும் உழைப்பையும் பயிற்சியையும் தரக்கூடிய சக்தியைக் கொடுக்கிறது என்றால் அது 100% நிஜம். அப்படித்தான் நம்முடைய தொழிலும். போட்டி என்று ஒன்று இருந்தால்தான் நம்மால் முன்னேற முடியும். புதுமையான முயற்சிகளையும், அதிகமான ரிஸ்க்குகளையும் எடுக்க முடியும்.

ஒரு துறையில் நாம் மட்டும் தனித்து இருப்பதைவிட போட்டியாளர்களோடு இருக்கும் போதுதான் அடுத்தடுத்த இலக்கை நோக்கிச் சென்று புதிய வெற்றிகளைக் காண வேண்டும் என்கிற உத்வேகம் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். எப்போது நம் பிசினஸில் போட்டி குறைகிறதோ, அப்போதே சுவாரஸ்யமும் குறைந்து போகிறது.

பிசினஸில் போட்டி என்றால் அடுத்தவரை வீழ்த்தி வெற்றிகாண வேண்டும் எனச் சூழ்ச்சிகள் செய்வதல்ல; பிசினஸில் நியாயமான, நேர்மையான போட்டியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் போட்டிபோட்டு மக்களுக்கு நல்ல பொருள்களையோ, சேவைகளையோ செய்ய வேண்டும். இந்தப் போட்டி மக்களுக்கும் நல்லது; போட்டிபோடும் உங்களுக்கும் நல்லது. உங்களுக்கு லாபத்தையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்துவதாக இந்தப் போட்டி அமையும்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்!மேலும், உங்களோடு போட்டிபோட யாரும்  இல்லை என்றால், முயல் - ஆமை கதைபோல் உங்கள் பிசினஸ் ஆகிவிடும். போட்டி இல்லை என்றால், நீங்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுவீர்கள். நம்மைக் கடந்து செல்வதற்கு யார் இருக்கிறார்கள் என்கிற எண்ணமே நம் விழிப்பு உணர்வை மழுங்கச் செய்துவிடும். நாம் அஜாக்கிரதையாக இருக்கும் அந்தச் சமயத்தில்,  வேறு யாராவது உள்ளே நுழைந்து உங்கள் இடத்தைப் பிடித்துவிடுவார்கள். எனவே, ஆரோக்கியமான போட்டி இருந்தால் மட்டுமே நம்மால் எப்போதும் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இயங்க முடியும்.

ஜப்பானியர்களுக்கு  ஓடும் தண்ணீரில் வளரும் மீன்களே (Fresh Water Fish) மிகவும் பிடிக்கும்.  ஆனால், ஃபிரெஷ் வாட்டரில் இருக்கும் மீன்களைப் பிடிப்பது ஜப்பானியர்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ஆரம்பத்தில் கரையில் இருந்துதான் மீன்களைப் பிடித்தார்கள். இதைப் பார்த்து உஷாரான மீன்கள், ஆற்றின் நடுவில் நீந்த ஆரம்பித்தன. எனவே, படகு ஒன்றைத் தயார்செய்து ஆற்றுக்கு நடுவில்  சென்று மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துள்ளனர். ஆனால், அந்த மீன்களை ஜப்பான் மக்கள் வாங்கவில்லை. காரணம், அந்த மீன்கள் கரைக்கு வரும்போது இறந்திருந்தன. அவர்கள் உயிரோடிருக்கும் மீன்களை விரும்பினார்கள்.

இதைப் புரிந்துகொண்ட மீனவர்கள் மீன்களைப் பிடித்து ஒரு தொட்டியில் போட்டு உயிரோடு கரைக்குக் கொண்டுவந்தார்கள். அந்த மீன்கள் சிறிய தொட்டிக்குள் நீண்ட நேரம் அடைபட்டு இருந்ததால், சோர்ந்து போய், தனது அடையாளமான சுறுசுறுப்பையே இழந்து காணப்பட்டன. இதைப் பார்த்த ஜப்பானியர்கள்  அந்த மீன்களையும் வாங்க மறுத்துவிட்டனர்.

இந்தப் பிரச்னையைப் பார்த்த மீனவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். மீன்களைப் பிடித்துத் தொட்டிக்குள் போடும்போது, மீன்களைக் கடிக்கக்கூடிய சின்ன சின்ன ஷார்க்குகளையும் போட்டனர். அந்த ஷார்க்குகள் மீனைக் கடிக்கும் போது அது தொட்டிக்குள் ஓடிக்கொண்டே இருக்க, கரைக்கு வரும்போது மீனும் சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்து, மக்கள் உடனடியாக வாங்கினார்கள்.

மீனின் சுறுசுறுப்பை வெளியே கொண்டுவர ஷார்க் என்னும் போட்டியாளர்  தேவைப்பட்டது போல், நம்மையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க போட்டியாளர்கள் கட்டாயம் தேவை. அப்போது தான் நாமும் வெளியில் தெரிவோம்.
நமக்கான போட்டியாளர்களை நாம் பிரச்னைகளாகப் பார்க்காமல், நம் வளர்ச்சிக்கான வாய்ப்பாகப் பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்.  போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்காமல் ஏணிகளாகப் பார்க்கக் கற்றுக்கொண்டால், நமக்கு எப்போதும் தோல்விகள் இருக்காது. 

போட்டியாளர்களை நெகட்டிவாகப் பார்த்தே நாம் பழகிவிட்டோம். நம் இந்தியாவில் ஐம்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது மகன், மகளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டாலோ அவர்களின் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இப்போது இருக்கிற மருத்துவ வசதிகளை வைத்துப் பார்த்தால், ஒரு மனிதன் 80 வயது வரை வாழ்வது சாத்தியம். வரும் காலத்தில் இது நூறு வயதாகக்கூட  மாறலாம். அப்படியிருக்க, ஓய்வு என்றால் பணிகளில் இருந்து விலகியிருப்பது என்ற நிலையிலிருந்து மாறி, நம்மால் இன்னும் என்ன செய்ய முடியும் என எப்போதும் எனர்ஜியுடன் பாசிட்டிவ்வாக யோசிக்கப் பழக வேண்டும். 

வயதான காலத்தில் நாங்கள் என்னதான் செய்வது எனப் பலரும் கேட்பதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது ஒரு செயலைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.  நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணத்தை நாம் எப்போதும் மனதில் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என் அம்மா 75 வயதிலும் புதுப்புது விஷயங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளிலேயே இருப்பார். பிசினஸ் செய்வதற்காகவும், இன்னும் அதிக பணம் சம்பாதிக்கவும்தான் அவர் இப்படி செய்கிறார் என நினைத்தேன். ஆனால், அதுதான் அவருடைய வாழ்க்கையை நீட்டிக்க உதவியாக இருந்தது. செயல்பாடு எதுவும் இல்லை என்றால் நம்மை நாமே சுருக்கிக்கொள்வோம். மனமும் உடலும் சோர்வடையும்.

நாம் இன்னும் நிறைய காலங்கள் இருக்கப் போகிறோம் என்று நம்ப வேண்டும். அந்தக் காலங்களை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்தப் போகிறோம் என்றும் நினைக்க வேண்டும். இதுதான் நமது வாழ்க்கையை நீட்டிக்கும். இந்த பாசிட்டிவ் சிந்தனையுள்ளவர்கள்தான் பிசினஸில் அறுபதைத் தாண்டியும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்; புது எனர்ஜியுடன் களத்தில் இறங்கும் இன்றைய இளைஞர்களுடனும் போட்டிபோட்டு ஜெயிக்கும் யோசனைகளை விதைக்கிறார்கள். 

தொகுப்பு: மா.பாண்டியராஜன்

(மாத்தி யோசிப்போம்)