நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்!

கமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

மாடிட்டி வியாபாரத்தில் நம்மூரைப் பொறுத்தவரை இரண்டு வகையான டிரேடர்கள் அதிகம் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சிலர், ‘நான் நிறைய லாபம் சம்பாதிக்கிறேன்’ என்பார்கள். பலர், ‘நான் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகிறேன்’ என்பார்கள். யாருமே, ‘நான் தொடர்ந்து  சுமாரான லாபத்தைச் சம்பாதித்து வருகிறேன்’  என்று சொல்வதில்லை. அப்படியிருந்தால் அவர்கள் விதிவிலக்காக மட்டுமே இருப்பார்கள்.     

கமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்!

கமாடிட்டி வியாபாரம் என்பது பல்வேறு காரணிகளால் முன்னேறிக்கொண்டுதான் வருகிறது. பொருள்களின் விலையானது  உயரும் என நாம் நம்பும்போது வாங்கி விற்பதும் (லாங்), இறங்கும் என்று நம்பும்போது விற்று வாங்குவதும் (ஷாட்) பொதுவான வியாபார வழிமுறைகள் ஆகும்.

ஆனால், இந்த லாங்கும் ஷாட்டும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியுமா என்று கேட்டால், கொஞ்சம் கஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘நான் விலை ஏறுகிறது என்று வாங்கும்போது, கமாடிட்டியின் விலை இறங்க ஆரம்பிக்கிறது. இதனால் நஷ்டம் வருகிறது. தொடர்ந்து இறங்குகிறதே என்று நினைத்து, விற்று வாங்கும் முயற்சியாக ஒரு குறிப்பிட்ட கமாடிட்டியை விற்றால், அதன் விலை உயர ஆரம்பித்து, மீண்டும் இறங்க நஷ்டம் அதிகமாகிறது. இப்படி லாங்கிலும் நஷ்டம், ஷாட்டிலும் நஷ்டம் வந்தால், எப்படித்தான் டிரேட் செய்து நாலு காசு சம்பாதிக்கிறது’ என்று மனசுக்குள் வருத்தப்படும் டிரேடர்கள் ஏராளம்.

டிரேடிங் செய்யும்போது குழப்பமான மனநிலையில் சந்தையை அணுகுவதே நாம் அடுத்தடுத்து நஷ்டங்களைச் சந்திப்பதற்கு முக்கிய காரணம். நஷ்டத்துக்கும் குழப்பமான மனநிலைக்கும் என்ன தொடர்பு? இதனால்கூட நஷ்டம் வருமா என நீங்கள் கேட்கலாம். கொஞ்ச நஞ்சமல்ல, நெருங்கிய தொடர்பு நிச்சயம் உண்டு.  இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

டிரேடிங் செய்யும்போது தெளிவான மனநிலை யுடன் இருந்தால் மட்டுமே அன்றைக்கு அதில் இறங்க வேண்டும். குழப்பமான மனநிலையில் இருந்தால்..?

டிரேடிங் செய்வதை நிச்சயமாக நிறுத்திவிட வேண்டும். மனசு தெளியும்வரை அடுத்த வியாபாரத்தைச் செய்யக் கூடாது. நாம் தண்ணீர் எடுக்க ஒரு குளத்துக்குப் போகிறோம்.  தண்ணீர் தெளிவாக இருக்கிறது. நாம் தண்ணீர் எடுக்க நினைக்கும்போது, ஒரு சிறுவன் குளத்தில் ஒரு கல்லை எடுத்து வீசுகிறான். தண்ணீர் கலங்கிவிட்டது. அப்போது நாம் தண்ணீர் எடுப்போமா? எடுக்க மாட்டோம். தண்ணீர் தெளியும் வரை காத்திருப்போம் இல்லையா?

அதுமாதிரிதான் டிரேடிங்கும்.  நாம் தெளிவாக இருக்கும்போது செய்யும் பெரும்பான்மையான டிரேடிங் வெற்றிகரமாக இருக்கும்.  தெளிவில்லாமல் இருக்கும்போது செய்யும் பெரும்பான்மையான டிரேடிங் நஷ்டத்தில்தான் முடியும்.

கமாடிட்டியில் லாபம் தரும் சூட்சுமம்!

சரி, நாம் டிரேடிங் செய்யும்போதும் நம் மனதில் ஏன் குழப்பம் வருகிறது?   

நாம் டிவி பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பார்த்தால் தெளிவாக இருக்கும்.  இன்னும் கொஞ்சம் அருகில் போய்ப் பார்த்தால்,  படம் தெளிவில்லாமல் இருக்கும். இன்னும் அருகில் போய்ப் பார்த்தால், படத்துக்குப் பதிலாகப் புள்ளிகளே தெரியும். இந்த நிலைதான் டிரேடிங் செய்பவர்களுக்கும். சந்தையை ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து பார்க்க பழக வேண்டும். 

அது என்ன குறிப்பிட்ட தொலைவு என்று கேட்கிறீர்களா? இங்கு தொலைவு என்றால், தூரத்தைக் கூறவில்லை. விலையின் நகர்வை சற்றே தள்ளி நின்று பார்க்க வேண்டும். தினசரி வியாபாரியாக இருந்தால், ஒரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்ன விலையில் வியாபாரம் நடக்கிறது என்பதை அறிய முற்படலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கேட்கும்போது, உங்கள் மனதில் ஒரு தெளிவான படம் தோன்றும்.  இந்த விலை எதைத் தாண்டி போனால் வாங்கலாம் அல்லது விற்கலாம் என்பதற்கான தெளிவு இருக்கும். 
 
இப்படி செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் விலை நகர்வைப் பார்த்துக்கொண்டால்,  ஒரு சில புள்ளிகளின் ஏற்றம் என்பது பிரமாண்ட ஏற்றமாகத் தெரியும். ஒரு சில புள்ளிகளின் இறக்கம் பிரமாண்டமான இறக்கமாகத் தெரியும். இந்தப் பிரமாண்டம், நம் மனசுக்குள் ஒரு டிரிக்கரை ஏற்படுத்தலாம். இதனால் சின்ன லாபத்திலேயே நாம் விற்றுவிட வாய்ப்புண்டு.  இல்லையென்றால்,  ‘இப்ப ஏறுது வாங்கு’ என்று மனம் சொல்லும், சில புள்ளிகள் இறங்கியதுமே, ‘ஐயோ இப்ப விற்றுவிடு’ என்றும் சொல்லும். அப்புறம், ‘விற்று வாங்கு’ என்று நம்மைத் துரத்தும். விற்றபின் விலை ஏற ஆரம்பித்தால் ‘கவர் பண்ணு’ என்று கத்தும். இப்படி மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவு வியாபாரத்தைச் செய்து இருப்போம். ஆனால், கூட்டிக்கழித்துப்  பார்த்தால், நஷ்டத்தில்தான் முடிந்திருக்கும்.

இவருக்கே இந்த நிலைமை என்றால், ‘டிக் பை டிக்’காக சந்தையைப் பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிக பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த மாதிரியான விறுவிறுப்பான வியாபாரத்தின் முடிவில், நமக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கும். அதேநேரம், நாம் கட்டும் பல்வேறு வகையான வரிகள் (டேர்ன் ஓவர் டாக்ஸ், செபி டாக்ஸ், ஸ்டாம்ப் டியூட்டி, சி.டி.டி, சர்வீஸ் டாக்ஸ்) அப்புறம் புரோக்கரேஜ், இவற்றின் மதிப்பு பூதாகரமாக இருக்கும். ‘இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்துக் கொஞ்சமும் மிஞ்ச மாட்டேன் என்கிறதே’ என்று நாமும் வருத்தப்படுவோம்.

சந்தையைக் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால் இதுமாதிரி நீங்கள் நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள். இதனால் என்ன பயன்?  நாம் தேவையில்லாத வியாபாரத்தில் ஈடுபட மாட் டோம். காத்திருந்து தேர்வு செய்த, குறிப்பிட்ட சில வியாபாரத்தில் மட்டுமே ஈடுபடுவோம்.

கமாடிட்டி டிரேடிங்கில் அடிக்கடி நஷ்டம் வருவதற்கு இதுமட்டும்தான் பிரச்னையா? இல்லை, இன்னும் நிறையவே இருக்கின்றன. நாம் இந்த டிரேட்டிங்கை பற்றி என்ன நினைக்கிறோம்? குறைவான பணத்தை வைத்து, நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றுதானே?

அது உண்மைதான். கச்சா எண்ணெய் மெகா லாட் ஒன்றை எடுத்துக்கொண்டால், அதன் அளவு 100 பேரல் ஆகும். லாபம் என்பது வந்தால், அதிகமாக இருக்கும். ஆனால், நஷ்டம் என்று வந்தால்? அதுவும் அதிகமாகவே இருக்கும் என்பதையே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.   ஆனால், லாபம் வரும்போது குறிப்பிட்ட லாபத்தில் வெளியே வரும் நாம், நஷ்டம் என்று வரும்போது, உடனடி முடிவேதும் எடுக்க நினைப்பதில்லை. இன்னும் பார்ப்போம், இன்னும் பார்ப்போம் என்று பொறுத்திருந்து, மிக அதிக நஷ்டம் வந்த பின்பே அதிலிருந்து வெளியேறுகிறோம்.

அப்படியானால் என்னதான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? நம்முடைய தாங்கும் திறனை முதலில் தீர்மானிக்க வேண்டும்.   தாங்கும் திறன் என்பது நம்மால் எந்த அளவுக்கு நஷ்டம் கண்ட பின்பும் நிலைகுலையாமல் இருக்க முடியும் என்பதைப் பொறுத்தது. இந்த அளவை நமக்கு நாமே சரியாக நிர்ணயித்துக்கொள்ளும் முதிர்ச்சி நம்மிடம் வந்துவிட்டால், குழப்பமான நிலை நீங்கிவிடும். இதன் பிறகு பரபரப்பு என்பது அண்டாது. அந்தச் சூழ்நிலையில், நம்மால் ஒரு முடிவைச் சரியாக எடுக்க முடியும். 

காரணம், கமாடிட்டி டிரேடிங்கில் ஒருவர்  எங்கு நஷ்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தாலே அவர் வெற்றியாளர்தான். ஏனெனில், இப்படிப் பட்டவர் பெரும் நஷ்டத்தைக் குறுகிய காலத்தில் அடைய விரும்பவே மாட்டார்.  நஷ்டம் என்பது நம் சக்திக்கு மீறியதாக இல்லாமல் இருந்தால், அந்த டிரேடிங்கை நாம் செய்யாமலே விட்டு விடுவோம். லாபமாக ஈட்டும் பணம் மட்டுமே நமக்குக் கிடைக்கும் லாபமல்ல; நாம் நஷ்டப் படாமல் காத்துக்கொள்கிற ஒவ்வொரு ரூபாயும் லாபமே என்பதை உணர வேண்டும்.

ஒரு டிரேடராக, லாபத்தை எப்போதும் எடுத்து  கணக்கில் வரவு வைப்பதை ஓர் இயல்பான விஷயமாகப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து லாபத்தை எடுக்கக்கூடியவராக நீங்கள் மாற வேண்டும் என்பதே லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள்!