
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

@ சுப்பிரமணியன்.
என் தங்கை ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். மாதந்தோறும் ரூ.15 ஆயிரத்தை எஸ்.ஐ.பி முறையில் மூன்று ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார். அதில் ஒன்று பிர்லா சன்லைப் ஈக்விட்டி ஃபண்ட் என அவர் முடிவு செய்திருக்கிறார். மற்ற இரு ஃபண்டுகளையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த மூன்று ஃபண்டுகளில் இரண்டினை ஐந்து ஆண்டுகளுக்கும், ஒரு ஃபண்டினை பத்து ஆண்டுகளுக்கும் வைத்திருக்க விரும்புகிறார். வீடு வாங்குவதற்காக இந்த முதலீட்டைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்.
‘‘உங்கள் சகோதரிக்கு இன்னும் ஐந்து வருடங்களில் வீடு வாங்குவதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். ஐந்து வருடங்களில் உறுதியாகப் பணம் தேவையா, ரிஸ்க் எடுக்கத் தயாரா என்பனவற்றைப் பற்றி நீங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. உங்கள் கேள்வியிலிருந்து ரூ.10,000 முதலீட்டை வீடு கட்டுவதற்காக வும், மீதி 5,000 ரூபாயை வேறு நோக்கத்துக்காகவும் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரியவருகிறது.

உங்கள் சகோதரிக்கு ஐந்து வருடங்களில் உறுதியாகப் பணம் வேண்டும்... மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை என்றால், நீங்கள் நிலையான வருமானத்தைத் தரும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதேபோல், 10 வருட முதலீட்டுக்கு லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளலாம். இதை ஆப்ஷன் 1 என வைத்துக்கொள்வோம்.
உங்கள் சகோதரிக்குச் சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம்; மேலும், அதிக வருமானத்துடன் கூடிய வரியில்லா வருமானம் வேண்டும் என்றால், மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் ஆப்ஷன் 2-ஐத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.”
@ தீனதயாளன்
என் வயது 26. எனது வீடு தருமபுரியில் உள்ள கிராமத்தில் உள்ளது. நான் தற்போது அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். தற்போது மாதம் 25,000 வரை குடும்பச் செலவாகிறது. எனக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளான். இதுவரை எந்தச் சேமிப்பும் செய்யவில்லை. ஆனால், தற்போது மாதம் ரூ.60,000 வரை சேமிக்க முடிவு செய்துள்ளேன். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி சொல்லவும்.
‘‘இந்த இளம் வயதில், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பும் உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய போதுமான அறிவு உங்களிடம் தற்போது இல்லாததால், ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்களின் பயணத்தைத் தொடங்குவது உசிதமாக இருக்கும். ஆம்ஃபி இணையதளத்தின் மூலம் (https://www.amfiindia.com/locate-your-nearest-mutual-fund-distributor-details) உங்களின் அருகில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரை அணுகலாம். நீங்கள் புதுமையாக ஆரம்பிப்பதால், ஒரு நிதி திட்டமிடலுடன் ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. உங்களின் நிதி ஆலோசகர் உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து, உங்களுக்கு முழுமையான தீர்வைத் தருவார்.’’

ராதாகிருஷ்ணன், சென்னை.
மூன்று வயது பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்கு (15 வருடங்களுக்குப் பின்) ஏற்ற ஃபண்ட் முதலீடு பற்றி கூறவும். குழந்தையின் பெயரில் தனியாகக் கணக்குத் தொடங்கி முதலீடு செய்யலாமா அல்லது பெற்றோரின் பெயரில் முதலீடு செய்யலாமா? ஏற்கெனவே குழந்தை மற்றும் அம்மா பெயரில் (U/G) இணைந்து வங்கிக் கணக்கு, நெட் பேங்கிங், செக் வசதி உள்ளது. வருடப் பராமரிப்புக் கட்டணம் இல்லாத அக்கவுன்ட் பற்றிக் கூறவும். கிடைக்கும் வருமானத்துக்கு டி.டி.எஸ், வருமான வரி போன்ற எதுவும் இல்லாமல் இருப்பது நல்லது.
‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு அவசியம் இல்லை. மேலும், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது தனியாகப் பராமரிப்புக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, 12 மாதங்களுக்கு மேல் காத்திருக்கும்போது, வரி, டி.டி.எஸ் போன்ற தொந்தரவுகளும் இல்லை.
குழந்தையின் பெயரில் மைனர் அக்கவுன்ட் வங்கியில் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அதே கணக்கை முதலீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தையின் அம்மா வங்கிக் கணக்கில் கார்டியனாக உள்ளதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் அம்மாவே கார்டியனாக இருப்பது நல்லது.
மொத்த முதலீட்டை ஹெச்.டி.எஃப்.சி சில்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்ட் – இன்வெஸ்ட்மென்ட் பிளானில் முதலீடு செய்துகொள்ளுங்கள். இது மாடரேட் ரிஸ்க் உள்ள ஃபண்டாகும். உங்களுடைய முதலீட்டுக் காலத்துக்கு நல்ல ரிஸ்க் அட்ஜஸ்டட் வருமானத்தைத் தரும்.’’
