நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்!

வேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

வேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்!

புத்தகத்தின் பெயர்: ரிச் 20 சம்திங்

ஆசிரியர்: டேனியல் டிப்பியாசா (Daniel DiPiazza)

பதிப்பகம்: TarcherPerigee 

‘சராசரி வருமானத்தைத் தரும் வேலையை விட்டுவிட்டு, லாபத்தை அள்ளித்தரும் பிசினஸ் ஒன்றை ஆரம்பியுங்கள்’ என்கிற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கும் டேனியல் டிப்பியாசா என்பவர் எழுதிய  புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.   

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு சுமாரான சம்பளத்தைத் தரும் வேலைக்குச் சென்று அங்கே ஏச்சுப்பேச்சுகளை வாங்கி, நேரம் காலம் பார்க்காமல் உழைத்து, மேலதிகாரிகளுக்குப் பயந்து, பல்வேறு இம்சைகளுடன் வாழும் வாழ்க்கையை விட்டுவிட்டு, ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற ரீதியாக வாழ பல புதுமையான வழிகளைச் சொல்லும் நிறுவனமான ரிச்20சம்திங்.காம் என்னும் இணையதளத்தின் உரிமையாளரே இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். இந்த இணைய தளத்தை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது எது என்பதைப் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்கிறார்  அவர். 

‘‘அட்லாண்டாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வெண்ணெயைப் பந்துபோல் உருட்டி சிறிய பிளாஸ்டிக் கண்டெய்னர் ஒன்றில் போட வேண்டும். ஒரு நாள் ரெஸ்ட்டாரென்ட் மேனேஜர் என்னிடம் வந்து, ‘தம்பி, நீ ஒவ்வொரு உருண்டையிலும் 0.007 மைக்ரோ கிராம் வெண்ணெயை அதிகமாகச் சேர்க்கிறாய். இதனால் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 50 டாலர் நஷ்டமாகிறது. இந்த நஷ்டத்துக்கான இழப்பீட்டை நீ தருவியா?’ என்றாராம். இதைக் கேட்டு நொந்துபோனேன். ‘என்ன பிழைப்பு இது, நம் நேரத்தை ஏன் நாம் இங்கே வீணடிக்கிறோம்? வேலையும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. சுற்றியிருக்கிற ஆட்களும் ஒன்றும் பிரமாதம் இல்லை. இந்த வேலையில் பிழைப்பை ஓட்டி என்ன பிரயோஜனம்?’ என்கிற எண்ணம் எனக்குள் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தது. அதுதான் என் வெற்றிப் பயணத்தின் ஆரம்பம்.

அங்கிருந்து கிளம்பிய நான் மூன்று தொழில்களைத் தொடங்கினேன். போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம், வெப் டிசைன் நிறுவனம் மற்றும் ஒரு கன்சல்ட்டிங் நிறுவனம் என  மூன்றையும் தொடங்கிய நான், நான்காவதாகத் தொடங்கிய ரிச்20சம்திங் நிறுவனத்தின் மூலமாகவே முதல் மில்லியன் டாலர்களைச் சம்பாதித்தேன்’’ என்கிறார் அவர்.

இதற்குத் தேவையான முதலீடு அவருக்கு எப்படிக் கிடைத்தது? கூகுள் நிறுவனம் பணம் தந்ததா... இல்லை அவரது வசதியான மாமா ஏது பணம் தந்து உதவினாரா என்றால், அதுதான் இல்லை. ‘‘என்னிடம் என்னென்ன திறமை இருக்கிறதோ, அதையெல்லாம் மெருகேற்றி அடுத்தவர்களுக்கு உதவும் படியும், அவர்கள் பணம் கொடுத்து அதை பெற்றுக்கொள்ளும்படியும் மாற்றினேன் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை’’ என்கிறார் டேனியல்.

வேலையை விடுங்கள்; பிசினஸைத் தொடங்குங்கள்!பொதுவாக, ஒருவர் தொழில் செய்து அதில் ஜெயித்தால் நாம் அவரைப் பார்த்து ஒன்று, பொறாமைப்படுகிறோம் அல்லது கோபப்படுகிறோம். ஏன்? பெரும்பாலும் நம்மில் பலரும் வாழ்வின் தடைகளை விட்டு வெளியேவர மனதில்லாதவர்களாகவே இருக்கிறோம். அதனாலேயே வாழ்நாள் முழுவதும் ஒரு நிறுவனத்தைச் சார்ந்து செயல்பட உடனடியாகத் தயாராகிவிடுகிறோம். அது மட்டுமல்ல, ஏன் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதற் கான காரணங்களையும் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போக ஆரம்பிக் கிறோம். நமக்குத் தொழில் செய்வதில் இருக்கும் இடையூறுகளும் தடுமாற்றங் களும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தொழில் செய்ய முயல்பவர்களோ, அவற்றைக் கண்டறிவதோடல்லாமல் அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்துவிடுகின்றனர்.

வேலைக்குச் செல்கிறீர்கள். அதில் நிறைய இடையூறுகள் வருகிறது. இடையூறுகளைக் களைய என்ன செய்ய வேண்டும்? முதலில் செளகர்யத்தை குறைத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, வேலையை விட்டு சென்றால் வருமானம் இருக்காது. அந்த அசெளகர்யத்துக்குத் தயாரானவர்கள் மட்டுமே இந்த நிலையைத் தாண்டிச் செல்ல முடியும். சரி, இதையெல்லாம் அனுசரித்து வேலைக்குச் சென்றால், கடைசி வரை வேலையில் இருக்க முடியுமா?

இந்தக் கேள்விக்கு விடை சொல்வதில்தான் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்தக் காலத்தில் படித்தோமா, ஒரு வேலைக்குப் போனோமா, கல்யாணம் செய்து கொண்டோமா, 30 முதல் 35 வருடங்கள் வேலை பார்த்தோமா, ரிட்டையர் ஆனோமா என்று  இருந்தோம். இன்றைக்கு அப்படியில்லை. வேலை நிரந்தரமற்றதாக இருக்கிறது.   வேலை நிரந்தரமற்றதாக இருக்கும் நிலையில், அதிகச் செலவு செய்து படித்து, பின்னர் வேலைக்குப் போவதால் என்ன பிரயோஜனம்? படிப்பதற்குப் பெரும் பணம் செலவு செய்வதற்குப் பதிலாக,  நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து நமக்கென ஒரு தொழிலை நிர்மாணித்துக் கொள்ளலாம். முதலில், நீங்கள் அசெளகர்யத்தைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருக்க வேண்டும். அதிலும் மற்றவர்களைவிட நீண்ட நாள்கள் அசெளகர்ய நிலையில் வாழத் தயாராக இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க முடியும். தூங்கும் வேளையில்கூட, பணம் சம்பாதிக்க ஒருவழியை கண்டுபிடித்து வைத்துக்கொள்ளாவிட்டால், நீங்கள் சாகும் வரை வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 

இன்றைய உலகம் உங்கள் அப்பா, தாத்தா வாழ்ந்த அந்தக் காலத்தைப்போல் இல்லை. உதாரணத்துக்கு,  எல்லாவற்றின் விலையும் ஏறிவிட்டது.  அதேபோல், அந்தக் காலம்போல் இல்லாமல் நமது தேவையும் ஏகத்துக்கு  அதிகரித்துக்கொண்டே போகிறது. உங்கள் அப்பாவும், தாத்தாவும் ஸ்மார்ட்போன் வைத்திருந்தார்களா? லேப் டாப் அவர்களிடம் இருந்ததா? இல்லை, ஆப்பிள் வாட்ச்  இருந்ததா? இதற்கெல்லாம் தேவைப்படும் ஒரே விஷயம் பணம்தான் இல்லையா? அதற்காக பணம் நம் பிரச்னைகளை எல்லாம் தீர்த்துவிடும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பெறுவதற்குப் பணமே பிரதானம் இல்லையா?

1800-களில் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் எக்கச்சக்கமான பணம் வேண்டியிருக்கும். மிருகத்தனமான போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஈவு இரக்கமில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும். ஆக, கொடூரமான விஷயங்கள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டியிருந்தது அந்தக் காலத்தில். இன்றைக்கு அப்படியில்லை. இணையதளம் இருக்கிறது. நல்ல ஐடியாவுக்குச் சுலபத்தில் முதலீடு கிடைக்கிறது. இன்றைய நிலையில், கஷ்டமான விஷயம் என்பது வெற்றிகரமாகத் தொழிலை நடத்துவதே. இன்றைக்கு சுலபத்தில் கிடைக்கும் பணத்தின் மகிமை ஒன்றே ஒன்றுதான். நீங்கள் செய்யும் தொழிலின் திசையைப் பணம் தீர்மானிப்பதில்லை. ஆனால், நீங்கள் செய்யும் தொழில் செல்லும் வேகத்தைப் பணம் தீர்மானிக்கிறது.

இன்றைய சூழலில் ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை கவனம் செலுத்தி, சுலபத்தில் செய்ய முடியுமா? இன்றைக்கு பெரும்பாலானோர்களால் முடியாத ஒரு விஷயமாக அது மாறி விட்டது. ஏனென்றால், எக்கச்சக்கமான நண்பர்கள். நேரில் பேசுகிறோமோ, இல்லையோ... ஆப்ஸ் மூலம் நொடிக்கு நொடி பேசுகிறோம். சாதாரணமாகவே மனிதர்களுக்கு மோட்டிவேஷன் லெவல்கள் என்பது மேலும் கீழுமாகப் போய்க்கொண்டேயிருக்கும். இதில் நண்பர்களும் ஆப்ஸும்  சேர்ந்து நம் முன்னேற்றத்தைத் திசை திருப்பிவிட  நிறையவே வாய்ப்புண்டு. அதனால் எது நம் வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேற்றத்தைத் தராதோ, அது நமக்கு வேண்டாம் என்று சொல்ல முதலில் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

நாம் என்னதான் வேலையில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு அதை பொறுமையாகச் செய்தாலும், 9 - 5 வேலை என்பது சுதந்திரமற்றது. ஏனென்றால், 9 - 5 நீங்கள் ஒரு இடத்தில் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தை விட்டுவிட்டு, நீங்கள் இஷ்டத்துக்கு எங்காவது அலைந்து கொண்டிருந்தால், உங்கள் வேலை போய்விடும். எனவே, உங்கள் கனவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? “நீங்கள் தூங்கும்போதும் சம்பாதிக்கும் படி ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியமே’’ என்கிறார் ஆசிரியர்.

தொழிலுக்குத் தேவையான நெட் வொர்க்கிங், தொழில் ஆரம்பித்த பின்னர் வளர்ச்சிக்கான திட்டமிடல் எனப் பல்வேறு விஷயங்களையும் பல்வேறு உதாரணங்களுடன் சொல்லியுள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்