மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

பிசினஸில் வெற்றியடைய, நுகர்வோர் சந்தையைப் பிடிக்க மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர உத்திகளைக் கையாள்வது அவசியம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், பிசினஸ் டீலிங் என்பது நுகர்வோர் சந்தையை அணுகும் விதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே, அதுபற்றிப் பார்ப்போம்.   

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை!

உங்கள் தொழிலுக்கு வெற்றியைத் தேடித்தரும் சந்திப்புகளை நிகழ்த்திக்காட்டுவது அவசியம். அத்தகைய சந்திப்புகளை நிகழ்த்துவது ஒரு கலை. சந்திப்புகளைத் திட்டமிடும்முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சந்திப்புகளுக்கு உகந்த நாள் எது?

பிசினஸில் சந்திப்புகள் என்பவை மிக முக்கியமானவை. ஆனால், முக்கியம் என்பதற்காக எல்லா நாள்களிலும் சந்திப்புகளைத் திட்டமிட்டுவிடக் கூடாது. தொழில் தொடர்பான சந்திப்புகளைத் திட்டமிடுவதற்கு உகந்த நாள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை எந்த நாள்கள்?

வாரத்தின் ஏழு நாள்களில் விடுமுறை நாள் என்று ஒன்று இருக்கிறது. அது பொதுவாக ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும். விடுமுறை நாள்களை ஓய்வுக்கும் குடும்பத்தோடு நேரத்தைப் பகிர்வதற்கும் பயன்படுத்தவே எல்லோரும் விரும்புவார்கள். அந்த நாள்களில் சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும். (நீங்கள் சந்திக்கும் நபருக்கு விடுமுறை வேறொரு நாள் எனில், அந்த நாளிலும் சந்திப்பைத் திட்டமிட வேண்டாம்)

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை!மேலும், சர்வதேச அளவில் Pay Day என்று ஒரு நாள் உள்ளது. அந்த நாளில்தான் எல்லோருக்கும் தலைக்கு மேல் டென்ஷன் இருக்கும். எனவே, சம்பள நாளன்றும் சந்திப்பைத் தவிர்ப்பதே சரி.  

யாருக்குமே பிடிக்காத ஒருநாள் இருக்கிறது. அது, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை. இந்த நாளில் பலருக்கும் உற்சாக மான மனநிலை இருக்காது. எனவே, திங்களன்றும் முக்கிய மான பிசினஸ் சந்திப்புகளைத் திட்டமிட வேண்டாம்.  

வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில்தான் எல்லோரும் உற்சாகமாகச் செயல்படுவார்கள். அந்த தினங்களில்தான் பிசினஸும் நன்றாக இருக்கும். எல்லோரும் பிசியாகவே இருக்கும் இந்த இரு தினங்களிலும் சந்திப்புகளைத் திட்டமிட வேண்டாம். அப்படியென்றால் எந்த நாள்கள்தான் சந்திப்புக்கு உகந்தவை? மீதமுள்ள செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாள்களும் சந்திப்புகளை நிகழ்த்த உகந்த நாள்களே. 

சந்திப்புகளுக்குமுன் செய்ய வேண்டியவை?

பிசினஸ் தொடர்பாக ஒருவரைச் சந்திக்கப் போகும்முன் அந்த நபரிடம் அவரைச் சந்திப்பதற்கான ஒப்புதல் (Appointment) பெற்றுவிட வேண்டும். சந்திக்கும் நாள், நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைத் தெளிவாகக் கேட்டறிந்துகொள்ள வேண்டும். இவற்றைத் தீர்மானிப்பவர்கள் நீங்களாக இருந்தால் சந்திக்கவிருக்கும் நபருக்கு ஏற்றவாறு இடத்தையும், நேரத்தையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

மேலும், உங்கள் பிசினஸ் தொடர்பான  விளக்கங்களை நீங்கள் அவருக்குக் கொடுக்கும் வகையில் உங்கள் பொருள்களின் புரோஷர்களையும், பிரசன்டேஷன் இருந்தால் பிரசன்டேஷன் ஃபைல் அடங்கிய கணினி, டேப்லெட் போன்ற சாதனங்களையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, ஏற்றுமதி செய்யவிருக்கும் உங்களுடைய பொருளின் சாம்பிள் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் சந்திக்கவிருக்கும் நபர் உங்களிடம் என்னவெல்லாம் கேட்க வாய்ப்புள்ளதோ, அவற்றையெல்லாம் தயாராக வைத்துக்கொள்வது அவசியம்.

வெற்றிகரமான சந்திப்புகளைச் சாத்தியமாக்குங்கள்

ஒருவரைச் சந்திக்கும்முன் அவருடைய கலாசாரத்தையும், மொழியையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவருடைய மொழியில் பேச முடிந்தால் வேலை சுலபம். இல்லாவிட்டால் இருவருக்கும் தெரிந்த ஒரு பொதுமொழியைப் பயன்படுத்த வேண்டும். அவர்களின் கலாசாரத்தை நீங்கள் அறிந்துவைத்திருந்தால் அவர்களை நீங்கள் கையாள்வது சுலபமாக இருக்கும். ஏனெனில், ஏற்றுமதி என்பது சர்வதேச பிசினஸ். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாசாரம் இருக்கும். அந்தக் கலாசார முறையில் அவர்களை வரவேற்பது, உபசரிப்பது அவர்களை மேலும் உங்களுடன் நெருக்கமாக்கும்.

நமது தோற்றமும் மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடன் அமர்ந்து நாம் பேசுவதை அவர்கள் கேட்டால்தான் நமக்கு பிசினஸ் கிடைக்கும். அது தோல்வியடைவதற்கு நம்முடைய தோற்றம் காரணமாகிவிடக் கூடாது. அதற்கு நம்முடைய ட்ரெஸ்கோடில் கவனம் தேவை. நம்முடைய உடலுக்கேற்ற உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது அவசியமாகும். உறுதியாகவும், தெளிவாகவும் மற்றும் துணிவுடனும் பேசுங்கள். அந்தச் சந்திப்பை வெற்றியடைய செய்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துங்கள். லாபத்தில் சற்று சமரசம் செய்துகொள்வதில்கூட தவறில்லை.

மேலும், வெளிநாடுகளுக்கு பிசினஸ் தொடர்பான சந்திப்புகளுக்குச் செல்லும்போது சந்திப்புகளுக்கு முன்னரும், பின்னரும் இருக்கும் நேரத்தில் அந்த நாட்டிலுள்ள முக்கியமான சந்தைகளுக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். அந்தச் சந்தைகள் புதிய பிசினஸுக்கான வாசலை உங்களுக்குத் திறந்துவிட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, சிங்கப்பூரில் அனைத்து பொருள்களுக்குமான பொது சந்தையாக விளங்கும் லிட்டில் இந்தியா, காய்கறி, பழங்கள் போன்ற அக்ரோ பொருள்களுக்கான சந்தை பாசிர் பஜாங் மற்றும் நறுமணப் பொருள்களுக்கான சந்தை ஹாங்காங் ஸ்ட்ரீட் ஆகியவை.

(ஜெயிப்போம்)