நடப்பு
தொடர்கள்
Published:Updated:

புரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா?

புரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
புரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா?

சுமதி மோகன பிரபு

நிறுவனங்களின் நிர்வாகத்தைப் பொறுத்த வரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, நிறுவனத்தை நிறுவிய நிறுவனர்களே நிர்வாகத்தை நடத்தி வருவது. இந்தியாவில் 95 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின்  நிர்வாகமானது அதைத் தொடங்கியவரால் அல்லது அவரது வாரிசுகளால் நடத்தப்பட்டு வருகின்றன.     

புரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா?

இரண்டாவது, நிறுவனத்தைத் தொடங்கிய நிறுவனர்கள் கொஞ்சம் ஒதுங்கி நின்று, தொழில் முறையில் செயல்படும் நிபுணர்களால் (Prefessionals) நடத்தப்படுவது. உதாரணமாக, முருகப்பா குழுமம். இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை தொழில்முறை நிபுணர்களிடம் தந்துவிட்டு, இந்தக் குழுமத்தின் நிறுவனர்கள் தொழில் தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே செய்கின்றனர்.

மூன்றாவது, ஒரு சில நிறுவனங்கள் பல  ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டிருக்கும். காலப்போக்கில் இந்த நிறுவனங்களின் நிர்வாகம்  நிறுவனர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, இன்றைக்கு அவர்களின் தலையீடு என்பது அறவே இல்லாமல்போய், முழுக்க முழுக்க தொழில்முறை நிபுணர்களாலேயே நடத்தப்படும்.  உதாரணமாக, எல் அண்ட் டி, ஐ.டி.சி போன்றவை.

இந்த மூன்று வகை நிறுவனங்களில் முதல் வகை நிறுவனங்களை விட்டுவிடுவோம். இரண்டு மற்றும் மூன்றாவது வகை நிறுவனங்களில், அதாவது நிறுவனர்களால் நடத்தப்படாத, நிறுவனர்களே இல்லாத பங்கு நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா, அப்படி முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதே முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதிலைப் பார்ப்போம்.

மனிதர்களின் வாழ்க்கையை போலவே, நிறுவனங்களின் வாழ்வியல் சுழற்சியிலும் பல்வேறு நிலைகள் உள்ளன. ஒரு நிறுவனம் உருவாகி, வளர்ந்துவரும் நிலையில் நிறுவனர்களின் (Promoters) பங்கு அளப்பரியது. ஆனால், நன்கு வளர்ந்தபிறகு நிறுவனர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் அந்த நிறுவனத்தை மேலும் பெரிதாக வளர்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். 

உதாரணமாக, இன்ஃபோசிஸ் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்வதற்கு, நாராயண மூர்த்தி, நந்தன் நிலகேனி போன்ற ஆரம்ப நிறுவனர்களின் பங்களிப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஒருகட்டத்தில், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை முழுநேர தொழில்முறை நிபுணரிடம் ஒப்படைக்க விரும்பிய நாராயண மூர்த்தி, விஷால் சிக்காவை தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்தார். இந்த ஏற்பாடு  சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. விஷால் சிக்கா ராஜினாமாவுக்குப்பின், நந்தன் நிலகேனி மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார்.

வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள், முழுநேர தொழில்முறை நிபுணர் களால்தான் நிர்வகிக்கப்பட்டுத்தான் வருகின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பொதுவாக  நிறுவனர்கள் அல்லது அவர்களது வாரிசுகளா லேயே நிர்வகிக்கப்படுகின்றன. ஐ.டி.சி, எல் அண்ட் டி, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே விதிவிலக்காக முழுநேர தொழில்முறை நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான டாடாவின் தலைமைப் பொறுப்பு சமீபத்தில் சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  

பொதுநலத்தில் ஒரு சுயநலம்

மொத்தப் பங்குகளில் பெரும்பாலானவை தங்கள்வசம் இருப்பதால், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியானது அந்த நிறுவனத்தை நிறுவிய நிறுவனரின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சி யாகவே இருக்கிறது, எனவே, ஒப்பீட்டளவில் குறைந்த அளவு சம்பளம் மற்றும் ஊக்கத் தொகைக்காக மட்டுமே வேலை பார்க்கும் முழு நேர தொழில்முறை நிர்வாகிகளைவிட நிறுவனத்தை ஆரம்பித்த நிறுவனர்கள் அதிக ஈடுபாட்டுடன் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவார்கள். உதாரணமாக, விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி மற்றும் அவர் குடும்பத்தினர் அந்த நிறுவனத்தின் பங்குகளில் 70 சதவிகிதத்துக்கும்  அதிகமான வைத்துள்ளனர். விப்ரோவின் சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி அதிகரித்தால், அசீம் பிரேம்ஜி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி உயர்கிறது. அதே போல, விப்ரோவின் சந்தை மதிப்பு குறையும் பட்சத்தில் பிரேம்ஜியின் சொந்த சொத்து மதிப்பும் பெருமளவில் குறைகிறது. அதே சமயம், சத்யம் நிறுவனத்தின் லாபத்தை அந்த நிறுவனத்தைத் தொடங்கியவரே சொந்தக் காரணங்களால் சுரண்டிப் பெரும் சேதம் ஏற்படுத்தியதை நாம் கவனிக்க வேண்டும்.

குட்டிப் புலி 16 அடி பாயுமா?

நிறுவனத்தை ஆரம்பித்தவர்களின் நிர்வாகத் திறமையை அவர்களின் வாரிசுகளும் கொண்டிருப் பார்கள் என எந்த உறுதியும் இல்லை. திருபாய் அம்பானியின் வாரிசுகளில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பங்குகள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அவரது சகோதரரான அனில் அம்பானி நிறுவன பங்குகள் அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதில்லை. தாய் புலி எட்டடி பாய்ந்தால், வாரிசுப் புலி 16 அடி பாய வேண்டும் என்று சொல்ல முடியாது. இந்த நிலையில், நிறுவனத்தின் நிர்வாகத்தைத் தொழில்முறையில் செயல்படும் நிபுணர்களிடம் கொடுத்து நிர்வாகம் செய்யச் சொல்வது தவிர, வேறு வழியில்லை.    

புரமோட்டர்கள் நடத்தாத நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா?

இந்த நிலையில், தொழில்முறை நிபுணர்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

வெளிப்படையான செயல்பாடு

தொழில்முறை நிபுணர்கள் நிர்வகிக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு வெளிப்படைத்தன்மை இல்லாத நிறுவனங்களில் ஊழல், மோசடி மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற முறையற்ற செயல்கள் அதிகமாக நடந்திருப்பது வரலாறு. இன்ஃபோசிஸ்  நிறுவனத்தில் இருந்து விலகிய ராஜீவ் பன்சால் என்பவருக்கு அதிக தொகை தந்து செட்டில் செய்தது, வெளிநாட்டு நிறுவனத்தை அதிக விலை தந்து வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகள்  விஷால் சிக்காவின்மீது எழுந்ததற்குக் காரணம், போதிய அளவு வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால்தான். எனவே, தொழில்முறை நிபுணர்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களின் நிர்வாகம்  வெளிப்படைத்தன்மையுடன் செயல் படுகிறதா என்பதைப் பார்ப்பது அவசியம். 
 
ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை

2007-ல்  நிகழ்ந்த உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு அடிப்படையான காரணமாக அமைந்தது அளவுக்கு அதிகமான ஊக்கத் தொகைதான். அமெரிக்க வங்கிகளின் செயல் நிர்வாகிகள் அதிக ஊக்கத்தொகைக்கு ஆசைப்பட்டு அளவுக்கு மீறிய ரிஸ்க் எடுத்தனர். லாபத்தின் பெரும்பங்கு தனக்கு, நஷ்டத்தின் பெரும்பங்கு மற்றவர்களுக்கு  என்ற நேர்மையற்ற நோக்கத்தின் விளைவாகப் பெரும் தவறுகள் ஏற்பட்டு, நூறாண்டு காலமாக நடந்துவந்த பல வங்கிகள்கூட திடீரென மூடப்பட்டன.
ஒரு நிறுவனத்தின் செயல் நிர்வாகிகளின் ஊக்கத்தொகை எவ்வளவு, அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு கண்காணிக்கப்படு கின்றன, அதிகப்படியான ஊக்கத்தொகைக்காக, நிறுவன விதிகள் அல்லது சட்டதிட்டங்கள் மீறப்படுகின்றனவா மற்றும் நிறுவனங்களின் நீண்டகால நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றனவா என்பதையெல்லாம் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

சுறுசுறுப்பான இயக்குநர் குழு 

ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தின் மீதான கண்காணிப்பை இயக்குநர் குழும உறுப்பினர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் தலைமையில் இருந்து நடத்துபவர்கள் பங்குதாரர்களின் நலனுக்கு விரோதமாகச் செயல்படும்போது அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இயக்குநர் குழுவுக்கு இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்கள், அந்த நிறுவனத்தை நடத்தும் நிபுணர்களுடன்  தனிப்பட்ட முறையில் ‘ஆதாயம்’ தரும் வகையில் எந்தவொரு தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது.

நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்கள் சுதந்திரமாகவும், பங்குதாரர்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்து, முதலீட்டாளர்களின் நலனைக்  காப்பவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக, சுயநலத்துக்காக நிர்வாகத்தை நடத்தும் நிபுணர்களின் கைப்பாவைகளாக இருந்தால், அந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது. 

தலைமையின் நேர்மை

தொழில்முறை நிபுணர்களின் தலைமை மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர்களின் நேர்மையானது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். பங்குதாரர்கள் மற்றும் அரசுக்குத் தவறான தகவல்களைத் தருவது, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக நிறுவனத்தைச் சுரண்டுவது போன்ற பண்புகள் ஒரு நிறுவனத்தின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும்.  என்ரான் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், தவறான முறையில் கணக்குவழக்குகளில் ஈடுபட்டதே. சத்யம், வேர்ல்ட் காம், லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும்  காரணம் நேர்மையற்ற தலைமைதான். சமீபத்தில் சிறை சென்ற சாம்ஷங் நிறுவனரின் மகன் மற்றும் துணைத்தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தியது.

ஆக மொத்தத்தில், ஓரளவுக்கு வளர்ந்த  நிறுவனங்களில் தொழில்முறை நிபுணர்களின் தலைமையில் நிர்வாகம் அமைவது நல்லது  என்றாலும், தற்போது நிர்வாகம் செய்து வரும் தொழில்முறை நிபுணர்களின் நேர்மை மற்றும் இயக்குநர் மற்றும் உறுப்பினர்களின் முறையான செயல்பாடு ஆகியவற்றைக் கவனமாக ஆராய்ந்து முடிவெடுப்பதே நல்லது.