
செல்லமுத்து குப்புசாமி
ஒரு கம்பெனியின் புக் வேல்யூ 100 ரூபாய். அதன் ஷேர்கள் ரூ.70-க்குக் கிடைக்கிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால், P/BV = 0.7 வருகிறது. இந்த ஷேரை வாங்குவீர்களா, இல்லையா?

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை என்பது அதன் தற்போதைய புக் வேல்யூவுக்கும், அந்த நிறுவனம் எதிர்காலத்தில் ஈட்டப்போகிற லாபங்கள் அனைத்துக்கும் சேர்த்து நாம் தருகிற விலை ஆகும். P/BV = 0.7 என்பது அதன் தற்போதைய உடைமைகள் 30% தள்ளுபடியில் கிடைப்பதாகவும், அதன் வருங்கால வருமானம் அனைத்தும் இலவச இணைப்பாக வருவதாகவும் கருதலாம். அப்படி ஒரு நிறுவனத்தை நீங்கள் கண்டறியும்போது வாங்குவீர்களா, இல்லையா? இந்த கேள்விக்கான விடையைக் கண்டறியும்முன் இன்னொரு கேள்வி.
நீங்கள் இருக்கும் நகரத்தில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மனை ஒரு சதுரஅடிக்கு ரூ.4.500 போகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட வீட்டை சதுரஅடி ரூ.2,500-க்கு விற்றால், நீங்கள் வாங்குவீர்களா, இல்லையா?
இந்தக் கேள்விக்குப் பதில், ஆம்/இல்லை என வெறும் எண்களை மட்டும் கருத்தில்கொண்டு பதில் கூறிவிட முடியாது. இலகுவான கணிதச் சமன்பாடு ஒன்றின் அடிப்படையில் மட்டுமே ஷேர்களில் முதலீடு செய்துவிட முடியாது.
ரூ.45 லட்சத்துக்கு விலைபோகிற வீட்டை எதற்காக ரூ.25 லட்சத்துக்குத் தர முன்வருகிறார், அந்த வீடு முறையாக அனுமதி வாங்கிக் கட்டப்பட்டதுதானா, பட்டா நிலத்தில் கட்டியதா அல்லது புறம்போக்கு நிலத்தில் கட்டியதா, நல்ல ஏரியாவா, வாடகைக்கு விட்டால் குடியிருக்க ஆட்கள் வருவார்களா, வீட்டை விற்பது யார், ஏதேனும் அவசரமான மருத்துவத் தேவையா?
இப்படியெல்லாம் ஆராய்வோம் அல்லவா... அப்படித்தான் புக் வேல்யூவைவிடக் குறைவாக விற்கிற நிறுவனங்களையும் அணுக வேண்டும். இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அதே துறையில் இயங்கும் மற்ற கம்பெனிகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. குறிப்பாக, மார்க்கெட் லீடர் எனக் குறிப்பிடக்கூடிய அந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக, எல்லா நிறுவனங்களும் சராசரியாக புக் வேல்யூவைக் காட்டிலும்
2.5 மடங்கு (P/BV) விலைக்கு விற்கின்றன. மார்க்கெட் லீடர் எனப்படும் டாப்-3 நிறுவனங்கள் 5 மடங்கு விலைக்கு விற்கின்றன. ஆனால், நாம் ஆராய்கிற நிறுவனம் மட்டும் 0.7 மடங்கு விலைக்குக் கிடைக்கிறது. ஏன்?

ஏன் என்பதற்கான விடை தேடும் பயணம், நம்மை நல்ல முதலீட்டாளராக்கும். ஒருவேளை மற்ற நிறுவனங்களைப்போல, இதன் பிசினஸ் சிறப்பாக நடைபெறவில்லையா, உற்பத்தி செய்த பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றனவா, நிறுவனம் தொடர்ச்சியாக லாபத்தைச் சந்தித்து வருகிறதா, அதன் நிர்வாகம் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறதா, அதன் புரமோட்டர்கள் யார், அவர்கள் சிறு முதலீட்டாளர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் அல்லது நடத்தினார்கள்?
ஒருவேளை நேர்மையான நிர்வாகம், திறமையான நிர்வாகிகள் என்றாலுமே யோசிக்க நிறைய உண்டு. திறமையான, நேர்மையான மாலுமியாக இருந்தாலும் கப்பல் ஓட்டையாக இருப்பின் என்ன செய்ய இயலும்? அப்படித்தான் வெறும் புக் வேல்யூவை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு ஷேர்களை வாங்க முயல்வது.
புக் வேல்யூ என்பது இன்றைக்கு கம்பெனியை இழுத்து மூடிவிட்டு இருப்பதைப் பங்குதாரர்கள் பிரித்து எடுத்துக்கொண்டால் நமக்குக் கிடைப்பது. ஆனால், இழுத்து மூடிவிட்டு இருப்பதைப் பிரித்துக்கொடுப்பது நிறுவனங்களின் நோக்கமல்ல. பிசினஸ் சிறப்பாக நடக்காமல், ஆண்டுதோறும் வளர்ச்சி ஏற்படாமல் போனால் அதன் பங்கு விலை தொடர்ச்சியாகக் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தற்போது P/BV = 0.7-க்குக் கிடைக்கிற நிறுவனத்தின் ஷேர்களை ரூ.70-க்கு வாங்குகிறீர்கள். ஐந்து ஆண்டுகள் கழித்து அதன் புக் வேல்யூ ரூ.100-லிருந்து ரூ.50-க்கு இறங்கிவிடுகிறது. ஷேர் விலை ரூ.70-லிருந்து ரூ.30-க்கு சரிகிறது. P/BV = 30/50 = 0.6. அதாவது, ரூ.100 மதிப்புள்ள ஷேர் (புக் வேல்யூ) ரூ.60-க்குக் கிடைக்கும். இப்போது ரூ.100-ஐ வாங்க ரூ.70-ஐ செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ரூ.100 வாங்க ரூ.60 ரூபாய் செலவழித்தால் போதும் என மனதைத் திடப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இப்போதைய 100 ரூபாயை ரூ.50-ஆக சுருங்கி விடுகிறது என்பதும், நமது ரூ.70 முதலீடு ரூ.30-ஆகக் குறைந்துவிடுகிறது என்பதும் சுடுகிற உண்மைகள். ஆக, வெறும் புக் வேல்யூவை மட்டும் நம்பி முதலீடு செய்வது அறிவார்ந்த செயலாகாது.
ஒரு சில அசாதாரணச் சூழ்நிலைகளில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் ஷேர் விலைகள் தாறுமாறாகக் குறைந்துபோயிருக்கும். அப்போது அவற்றின் P/BV மதிப்பும் குறையும். அந்த தற்காலிக நெகட்டிவ் காரணிகள் மாறும்போது விலைகள் மீண்டும் மேலேறி P/BV மதிப்பையும் கூட்டும். நம் முதலீடு வெகுவான லாபத்தை ஈட்டித்தரும். ஆனால், அந்தக் காரணிகள் தற்காலிக மானவையா அல்லது நிரந்தர மானவையா எனக் கணிக்கிற திறம் அவசியம்.
P/BV பற்றி பேசும்போது நாம் ஹோல்டிங் கம்பெனி களைப் பற்றி பேசியாக வேண்டும். ஹோல்டிங் கம்பெனிகள் தமது குரூப் கம்பெனிகளில் முதலீடு செய்து வைத்திருப்பவை. உதாரணத்துக்கு, A என்கிற கம்பெனியின்
30% ஷேர்களை X என்கிற நிறுவனம் வைத்திருக்கும். அதேபோல, B என்கிற நிறுவனத்தின் 25% ஷேர்களையும் வைத்திருக்கும். A மற்றும் B ஆகிய குரூப் கம்பெனிகளின் ஷேர்களை வைத்திருக்கும் ஹோல்டிங் கம்பெனி X.
கம்பெனி A-யின் சந்தை மதிப்பு ரூ 1,000 கோடி என்க. அதில் 30% வைத்திருக்கும் X-ன் முதலீட்டு மதிப்பு ரூ.300 கோடி. அதாவது, கம்பெனி A-ல் உள்ள தனது 30% பங்குகளை கம்பெனி X மார்க்கெட் விலைக்கு விற்றால் அதனால் ரூ.300 கோடி ஈட்ட முடியும். கம்பெனி B-ன் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி என்க. அதில் 25% வைத்திருக்கும் X-ன் முதலீட்டு மதிப்பு ரூ.500 கோடி.
ஒட்டுமொத்தமாக X முதலீடுகளின் சந்தை மதிப்பு ரூ.800 கோடி. அதற்கு ஒரு கோடி ஷேர்கள் உள்ளன என்று கருதுவோம். அப்படியானால் ஒரு ஷேரின் மதிப்பு ரூ.800. ஆனால், பங்குச் சந்தையில் X-ன் பங்கு விலை ரூ.500-க்கு விற்பனையாகிறது.
ரூ.500-க்கு ஷேர் வாங்கினால், அந்த ஷேர் வைத்திருக்கிற ரூ.800 மதிப்புள்ள ஷேர்கள் நமது அக்கவுன்ட்டில் நாளைக்கே வந்து சேர்ந்துவிடாது. அதேபோல, X-ன் பங்கு விலை ரூ.800-ஐ எட்டிப் பிடித்துவிடும் என்று நினைக்க முடியாது. இந்த 500-800 விகிதாச்சாரம் காலத்துக்கும் தொடரக் கூடும். ஏனென்றால், ஹோல்டிங் கம்பெனிகளின் நோக்கம் அவற்றைத் தொடர்ந்து வைத்திருப்பது தானே தவிர, இருப்பதை விற்று எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பதல்ல.
(லாபம் சம்பாதிப்போம்)