நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

ப.முகைதீன் சேக்தாவூது

முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெகுதூரக் கனவாக இருந்த ‘சொந்த வீடு’ தற்போது அருகில் காத்திருக்கும் அழகிய நிஜமாகிவிட்டது. காரணம், வீட்டுக் கடன் என்ற ஒன்று வங்கிகளில் இருப்பதையே அறியாமல் இருந்த காலம் போய், கடன் தரும் வங்கிகளே தங்களது வீட்டுக் கடன் நடைமுறையை விளம்பரம் செய்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் போன்ற தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என எங்கெங்கு காணினும் வீட்டுக் கடன் விளம்பரம். அதிலும், மாத ஊதியம் பெறுவோர் மற்றும் நிரந்தர வருமானமுடையோர் வீட்டுக் கடன் பெறுவது இன்றைக்கு மிக எளிதான விஷயமாகிவிட்டது.ஏனெனில், இ.எம்.ஐ எனப்படும் மாத சம தவணை முறைக்கு மாத ஊதியம் அனுகூலமானது என்பதுதான்.    

சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

மாத ஊதியம் மற்றும் நிரந்தர வருமானம் ஆகிய இரண்டு அம்சங்களும் அரசு ஊழியர் களுக்குப் பொருந்தும் என்றாலும், வங்கிகளோ, வங்கியல்லாத வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங் களோ வழங்கமுடியாத வட்டிச் சலுகையைத் தமிழக அரசு தனது ஊழியர்களுக்குக் கடந்த 57 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதாவது, அரசு ஊழியர்களை அரவணைத்துச்செல்வதில் முன்னிலை வகிக்கும் தமிழக அரசு, வட்டியில்லா குறுகிய காலக் கடன் மற்றும் வட்டியுடன் கூடிய நீண்ட காலக் கடன் என இருவகை கடன்களை ஊழியர்களுக்குத் தருகிறது.

கடன் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், அட்வான்ஸ் (Advance) என்றே இவை பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள், நீண்ட காலக் கடனான வீடு கட்டும் முன்பணத்துக்கு (House Building Advance) வியக்கத்தகு வட்டிச் சலுகையை வழங்கி வருகிறது தமிழக அரசு.

வீடு கட்டவும், கட்டிமுடித்துப் பயன்படுத்தத் தயாராக உள்ள வீட்டை (Ready Built House) வாங்கவும், மனை வாங்கி வீடு கட்டிக் கொள்வதுமான பல்வேறு நோக்கங்களுக்குத் தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்பணம் தருகிறது. அதிகபட்ச முன்பணமாக ரூ.25 லட்சம் அல்லது முன்பணம் கோருபவரின் 75 மாத ஊதியம், இவற்றுள் எது குறைவோ, அதைக் கணக்கிட்டு வழங்குகிறது அரசு. இங்கு ஊதியம் என்பது அடிப்படை சம்பளம் + தர ஊதியம் + அகவிலைப்படி ஆகியவை அடங்கியதாகும்.

அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த 180 மாதங்களும், அதன்பின் வட்டியைக் கட்டி முடிக்க 60 மாதங்களுமாக 20 வருடங்கள் என  240 தவணைகள் இதற்கான அதிகபட்ச காலக்கெடுவாகும்.

பொதுவாக, வீட்டுக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதமாக வங்கிகள் அறிவிப்பு செய்துள்ள வட்டி விகிதம் 8.40% ஆகும். இத்துடன் பரிசீலனைக் கட்டணம் முதலானவையும் வங்கிகள் வசூலிக்கின்றன.

சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!இந்த 8.40% வட்டி விகிதத்தில் ரூ.25 லட்சம் வீட்டுக் கடனை வங்கிமூலம் பெறும் ஒருவர், மாதம் ரூ.24,470 வீதம் 180 மாதங்களுக்குச் செலுத்தும் மொத்தத் தொகை ரூ.44,04,990 ஆக இருக்கும். அசல் ரூ.25 லட்சம்போக இவர் வட்டியாகச் செலுத்தும் தொகை ரூ.19,04,990 ஆகும்.

இதே ரூ.25 லட்சத்தை அரசு வழங்கும் வீடு கட்டும் முன்பணமாகப் பெறும் அரசு ஊழியர் ஒருவர், மாதம் ரூ.25,000 வீதம் 100 மாதங்கள் செலுத்துவதன் மூலம் அசல் தொகையை எளிதாகத் திரும்பச் செலுத்திவிட முடியும்.

வட்டி எவ்வளவு?

தமிழக அரசு வழங்கும் வீடு கட்டும் முன்பணத்துக்கான வட்டி விகிதம் எவ்வளவு என்று கேட்கிறீர்களா?

மிகக் குறைவுதான். ரூ.50,000 வரை 5.5%.

ரூ.50,001 முதல் 1,50,000 வரை 7.0%.

ரூ.1,50,001 முதல் 5 லட்சம் வரை 9.0%.

ரூ.5 லட்சத்துக்கும் மேல் 10.0%.

வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.40% என இருக்கும்போது, 10% வரை வட்டி தர வேண்டிய அரசு வீட்டுக் கடனை ஏன் நாம் வாங்க வேண்டும்? வங்கியைவிட அதிகமான வட்டியை அல்லவா கட்ட வேண்டியிருக்கும் என நீங்கள் கேட்கலாம். இங்கே அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.

மேற்கண்ட வட்டி விகிதத்தில் வங்கியில் பெற்ற அதே ரூ.25 லட்சத்தை அரசு தரும் வீட்டுக் கடனாகப் பெற்றவர், 139 தவணைகளில் ரூ.25,000  வீதம் 140-வது தவணையாக ரூ.8,780-ம் செலுத்தினாலே போதும். அசலும், வட்டியும் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஆக, மொத்தம் செலுத்துவது ரூ.34,83,780. இந்த ரூ.34,83,780-ல் அசல் ரூ.25 லட்சம் போக வட்டியாகக் கட்ட வேண்டிய தொகை ரூ.9,83,780 மட்டுமே.

அதெப்படி? அரசு வழங்கும் வீட்டுக் கடனுக்கு தனி வட்டிதான் (Simple interest) கணக்கிடப்படு கிறது. அது மட்டுமன்றி, ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்த அசல் தொகை போக, மீதமுள்ள தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. எனவேதான், இந்தளவு வட்டி. இது மட்டுமல்ல, இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும்.

* அரசு தரும் வீடு கட்டும் முன்பணத்துக்கு, வங்கியில் வசூலிக்கப்படும் பரிசீலனைக் கட்டணம் (Processing Fees) கிடையாது.

* கடன் வாங்கும்போது என்ன வட்டி விகிதமோ, அதே வட்டி விகிதம்தான் கடனைக் கட்டிமுடிக்கும் வரைக்கும் இருக்கும். இடைப்பட்ட காலத்தில் வட்டி விகிதம் மாறாது.

வங்கிக் கடனுக்கான வட்டி     = ரூ.19,04,990

அரசு முன்பணத்துக்கான வட்டி = ரூ.9,83,780

மிச்சமாகும் தொகை          = ரூ.9,21,210

மாத ஊதியமாக ரூ.50,000 பெறும் ஓர் ஊழியரே, ரூ.25 லட்சம் வீடு கட்டும் முன்பணமாகப் பெற முடியும். தவிர, ஆறு வருடங்கள் அரசுப் பணியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். இப்படி மிச்சமாகும் வட்டிச் சலுகையானது 50,000 ரூபாயுடன் ஓய்வுபெறும் ஊழியர் ஒருவர் பெறும் பணிக்கொடையைக்காட்டிலும் அதிகம்.

50,000 ரூபாயைக் கடைசி ஊதியமாகப் பெறும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச (Death cum Retirement Gratuity) பணிக்கொடை ரூ.8,25,000. ஆனால், வீடு கட்டும் முன்பணத்தில் இதே ஊதியக்காரருக்குக் கிடைக்கும் வட்டிச் சலுகை ரூ.9,21,209. இது பணிக்கொடையை விடவும் அதிகம்.

இது மட்டுமல்ல, முன்பணத் தொகையைத் திருப்பிச்செலுத்தும் ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையில் 1% காப்பீட்டுக்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது (Special Family Benefit Fund) பணியிடைக் காலத்தில் ஊழியர் இறக்கநேரிட்டால் கடன் மற்றும் வட்டி இதன் மூலம் ஈடு கட்டப்படும்.

நிதி நிர்வாக அடிப்படையில் பார்க்கும்போது, ஆறு வருட பணி நிறைவு பெற்றதும், எத்தனை விரைவாக வீடு கட்டும் முன்பணத்துக்கு விண்ணப்பிக்க இயலுமோ, அத்தனை சீக்கிரம் அரசு ஊழியர் ஒருவர் விண்ணப்பிப்பது  கூடுதல் பலன் தரும். இந்தத் திட்டத்தின்மூலம் சொந்த வீடு, வட்டிச் சுமை இல்லாமல் நிறைவேறுவதுடன் மிச்சமாகும் பணத்தை எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளுக்கும் பதிவு அவசியம்!

ரி
யல் எஸ்டேட் துறையில் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக அரசு, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை (TNRERA) அமைத்துள்ளது. இதில் பில்டர்கள், புரமோட்டர்கள், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் இந்த அமைப்பில் பதிவு செய்ய ரூ.25,000 கட்டணம் ஆகும். இதில் ஏஜென்டுகளிடம் உள்ள பான் கார்டு அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறார்கள். இதற்கான இணையதளம் http://tnrera.in