நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?

பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?

ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

ராஜசேகர், மேட்டுப்பாளையம்.

நாங்கள் மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி நடத்தி வருகிறோம். எங்கள் பள்ளியில் விளையாட்டுக் கட்டணம் மற்றும் பள்ளி வாகனக் கட்டணத்தைத் தனியாக வசூல் செய்கிறோம். இத்தகைய கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை என்று அறிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் கட்டணங்களுக்கு நாங்கள் வரி செலுத்த வேண்டுமா?


‘‘நீங்கள் செலுத்தும் இத்தகைய கட்டணங்கள் கல்விக்கான கட்டணங்கள் வரிசையில் வருவதால், இதற்கு ஜி.எஸ்.டி பொருந்தாது. எனவே, நீங்கள் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.’’

பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?

மகேந்திரன், ஈரோடு.

ஸ்டாக்கில் உள்ள பொருள்களை அதிகாரிகள் சில தருணங்களில் பறிமுதல் செய்துவந்தனர். தற்போதைய ஜி.எஸ்.டி முறையில் இதற்கு எந்தெந்த சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் உள்ளது?


‘‘வரிதாரர் வரி ஏய்ப்பில் ஈடுபடும்போது, அதாவது, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி ஏய்ப்பில் ஈடுபடும்போது, பொருள்களைப் பறிமுதல் செய்வதற்கு அரசு அதிகாரிகளுக்கு உரிமையுள்ளது. பொருள்களை பதிவு செய்யாமல் ஜி.எஸ்.டி வரி வசூலித்தல், வரி வசூல் செய்து அரசுக்குக் கட்டாமல் இருத்தல், சரக்குகளின் கையிருப்பை மறைத்தல், உள்ளீட்டு வரி வரவை அதிகமாக எடுப்பது, பதிவுக்குட்பட்ட சரக்குகளைப் பதிவு பெறாமல் விநியோகித்தல் ஆகியவை குற்றமாகக் கருதப்பட்டு அத்தகைய தருணங்களில் பொருள்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.’’

பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?



கே.ராஜேந்திரன், பரமக்குடி.

வரி கட்டும்போது வரியை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தவறாகச் செலுத்திவிட்டால் அதைத் திரும்பப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?


‘‘பொதுவாக, நீங்கள் செலுத்த வேண்டிய தொகையில் தவறாக அதிகமாகச் செலுத்தி விட்டீர்கள் எனில், அது உங்களுடைய மின்னணுப் பதிவேட்டில் (Electronic Cash Ledger) உங்களது கணக்கில் வரவாக வைத்துக்கொள்ளப்படும். இதையடுத்த மாதங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய வரியிலிருந்து சரிசெய்துகொள்ளலாம். ஆனால், நீங்கள் குறைவாக வரி செலுத்தியிருந்தால், செலுத்த வேண்டிய மீதித் தொகையை நீங்கள் வரியாகச் செலுத்தியே ஆக வேண்டும்.’’

ரேவதி இரத்தினவேல், மதுரை.

ஒரே நாடு, ஒரே வரி என்று அடிக்கடி கூறப்பட்டாலும் பல வரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது நுகர்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தாதா?


‘‘ஒரே நாடு, ஒரே வரி என்பது வரி விகிதங்களைக் குறிப்பிடாமல் வரிவிதிப்பு முறையைக் குறிப்பிடுகிறது. ஜி.எஸ்.டி-க்கு முந்தைய வரிவிதிப்பு முறையில் பல மாநிலங்களில் பலவிதமான வரிகள் என 17 முக்கிய மறைமுக வரிகள் இருந்தன. ஆனால், ஜி.எஸ்.டி-யின்கீழ் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு நாடு முழுவதும், அதாவது 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசங்களிலும் ஒரே வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரியின் மேல் வரி விதிப்பது தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்குப் பொருள்களின் விலை அநாவசியமாக ஏற்றமடையாமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் இந்த ஜி.எஸ்.டி ஆகும். மேலும், இந்த ஜி.எஸ்.டி வரி வசூல் முறையால் பலவிதமான குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு, எந்தப் பொருளுக்கு என்ன வரி என அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரே சீரான வரி விதிப்பாக ஒரே நாடு, ஒரே வரி என்று ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.”

சோமசுந்தரம், கும்பகோணம்.

ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி கிடையாது என்ற நிலையில் பதிவு செய்தல் அவசியமா? மேலும், என்  ஆண்டு விற்பனை ரூ.60 லட்சத்துக்கு மேல் உள்ளது.


‘‘ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்பது உண்மைதான். என்றாலும், உங்களுடைய ஏற்றுமதியானது வெளிமாநில விநியோகமாகவே  கருதப்படும். இதன்மூலம், நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெற முடியும். இதைப் பெறுவதற்காக நீங்கள் ஜி.எஸ்.டி-யின்கீழ் பதிவுபெற்று வரித் தாக்கல் செய்வதன்மூலம் உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக அமையும். எனவே, நீங்கள் ஏற்றுமதி செய்பவராக இருந்தாலும்,                       ஜி.எஸ்.டி-யின்கீழ் பதிவு செய்வது அவசியம்.’’ 

பிரதீப், உடுமலைப்பேட்டை

தேங்காய் நாரிலிருந்து உற்பத்திப் பொருள்கள் சிலவற்றை செய்கிறோம். இது பலவிதமான உற்பத்திக்குப் பிறகு முழுமை பெற்ற பொருள்களாக மாறுகின்றன. இந்த உற்பத்தியின்போது பெறப்படும் பொருளுக்கும் சேவைக்கும் பொதுவாக
18%  உள்ளீட்டு வரி செலுத்துகிறோம். ஆனால், நாங்கள் விற்பனை செய்யும்போது அதற்கான வரி 5%. எனவே, நாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரி எப்போதும் அதிகமாக இருந்துவருகிறது. இந்த உள்ளீட்டு வரியை நாங்கள் திரும்பப் பெற முடியுமா?


‘‘அதிகமான உள்ளீட்டு வரியை நீங்கள் திரும்பப் பெறவேண்டியிருந்தால், அதை தற்போதைய முறையில் திரும்பப் பெற முடியாது. ஆனால், அதை அடுத்துவரும் மாதங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து கழித்துக் கொள்ளலாம். பொதுவாக, ஏற்றுமதியின்போது ஏற்படும் உள்ளீட்டு வரியை மட்டும்தான் திரும்பப் பெற தற்போது வழி உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையானது கண்காணிக்கப்படுவதாக   மத்திய அரசின் அமைச்சர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.’’ 

எஸ்.பாலாஜி, திருச்சி

ஒரு சேவையை ஏற்றுமதி சேவை என்று எப்போது கருத முடியும்?


‘‘ஒரு சேவையை ஏற்றுமதி சேவை என்று கருதுவதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

1. சேவையை விநியோகம் செய்பவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

2. சேவையைப் பெறுபவர் இந்தியாவுக்கு  வெளியே இருப்பவராக இருக்க வேண்டும்.

3. சேவையானது இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

4. சேவைக்கான கட்டணத்தை ஏற்றுமதி விற்று வரவை மாற்றம் செய்யக்கூடிய அந்நிய செலாவணித் (Convertable Foreign Exchange) தொகையை இந்தியாவில் பெற்றிருக்க வேண்டும்.  

5. சேவை வழங்குபவர் மற்றும் சேவையைப் பெறுபவர் IGST சட்டத்தின் பிரிவு 8-ல் உள்ள விளக்கம் 1-ன்படி கிளை நிறுவனத்துக்கு வழங்கிய சேவையாக இருத்தல் கூடாது.’’ 

பள்ளி வாகனக் கட்டணம்... ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டுமா?