நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?

ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் கோவிந்தராஜ். சொந்த ஊர் ஏற்காடு. ஈரோட்டில் டெக்ஸ்டைல் பேக்டரி ஒன்றில் உதவி மேலாளர். மாத வருமானம் ரூ.36 ஆயிரம். என் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகனுக்கு 12 வயது; 7-ம் வகுப்பு படிக்கிறான். மகளுக்கு 8 வயது; 3-ம் வகுப்புப் படிக்கிறாள்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?

வீட்டுச் செலவுகள் மாதம் ரூ.12,000 வரை ஆகிறது.  கம்பெனி வீடு தந்துள்ளதால், தற்போது வீட்டு வாடகை இல்லை. நான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். அதற்காக நான் மாதம் ரூ.10,000 சீட்டுக் கட்டி வருகிறேன். ரூ.2 லட்சம் சீட்டு முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. ஆனால், மனை வாங்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே ரூ.40 ஆயிரம் தள்ளிச் சீட்டுப் பணத்தை எடுத்துவிட்டேன்.

எனக்குத் தீபாவளி போனஸாக இரண்டு மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் வரை கிடைக்கும். இந்தப் பணத்துடன் நகைகளை ரூ.2.5 லட்சத்துக்கு அடமானம் வைத்து மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பில் மனை வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அடுத்த இரு  வருடங்களில் நகைக் கடனை முடித்துவிட்டு, வீட்டுக் கடன் வாங்கி ரூ.20 லட்சம் மதிப்பில் வீடு கட்டலாம் என்றும் திட்டம் உள்ளது. சொந்த வீடு குறித்த என் திட்டம் சரியா?

மகனுடைய மேற்படிப்புக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்றைய மதிப்பில் ரூ.5 லட்சம் தேவை. மகள்  மேற்படிப்புக்கு அடுத்த எட்டு வருடங்களில் இன்றைய மதிப்பில் ரூ.8 லட்சம் தேவை. மகன் திருமணத்துக்கு அடுத்த 13 வருடங்களில் ரூ.6 லட்சம் தேவை. மகள்  திருமணத்துக்கு அடுத்த 14 வருடங்களில் இன்றைய மதிப்பில் ரூ.14 லட்சம் தேவை. தவிர, என் ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும்?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?என் மைத்துனர் ஒருவர் பிசினஸ் செய்கிறார். அவருடைய பிசினஸில் நான் ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளேன். இன்னும் இரு ஆண்டுகளில் பிசினஸ் நன்றாகப் போகும் என்கிற நம்பிக்கை உள்ளது. எனக்கு வருடத்துக்கு ரூ.5,000 வரை சம்பள உயர்வு இருக்கலாம்” என்றவர், வரவு செலவு விவரங்களைக் குறிப்பிட்டார்.

“மாத வருமானம்: ரூ.36,000, குடும்பச் செலவுகள்: ரூ.12,000, பள்ளிக் கட்டணம்: ரூ.5,000, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.5,000, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம்: ரூ.800, இன்ஷூரன்ஸ் பாலிசி: ரூ.1,000 (16 வருடங்களில் முதிர்வுத் தொகை ரூ.4 லட்சம் வரும்), சீட்டு: ரூ.10,000 (இன்னும் 10 மாதங்கள் செலுத்த வேண்டும்), மீதம்: ரூ.2,200.”

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“சொந்த வீடு என்பது நம் எல்லோருடைய கனவு. அதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால், குழந்தைகளின் படிப்பு, திருமணம், உங்களின் ஓய்வுக்காலம் போன்ற மற்ற அதிமுக்கியமான இலக்குகளுக்கு முதலீடு செய்தபிறகு, வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொந்த வீடு என்ற இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.

நீங்கள் வீட்டுக் கடனாக ரூ.20  லட்சம் வாங்கும்பட்சத்தில், ரூ.17,300 இ.எம்.ஐ  செலுத்த வேண்டிவரும். மாத சம்பளத்தில் பாதிக்கு மேலாக இ.எம்.ஐ செலுத்தும்பட்சத்தில் உங்கள் மற்ற அனைத்து முக்கியமான இலக்கு களுக்கும் முதலீடு செய்ய இயலாத சிக்கல் உருவாகும். எனவே,  உங்களுக்கு கம்பெனியே வீடு தந்திருக்கும் நிலையில், வீடு கட்டும் திட்டத்தைத் தள்ளி வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?

இன்னொரு முக்கியமான விஷயம்,  நீங்கள் ஏலச்சீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வருவதன் மூலம் 12%  வருமானமே கிடைக்க வாய்ப்புண்டு. அதையும்  நீங்கள் 20% தள்ளி எடுத்தால் பெரிய லாபம் எதுவும் இல்லாமல் போய்விடும்.  அதுவும் மனை அமைந்தவுடன் நகைக் கடன் வாங்கி அட்வான்ஸ் தந்துவிட்டு, பிறகு சீட்டுப் பணத்தை எடுத்திருக்கலாம். நகைச் சீட்டு பணத்தை எடுத்தும் மனை வாங்காமல் கையில் வைத்திருப்பது  சரியான முதலீட்டு அணுகுமுறையல்ல.
மகனுடைய மேற்படிப்புக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.7 லட்சம் தேவைப்படும். அதற்கு ரூ.8,800 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.8,100 முதலீட்டில் தொடங்கி, ஆண்டுக்கு
5% அதிகரித்துக்கொள்ளலாம்.

மகளுடைய படிப்புக்கு அடுத்த எட்டு ஆண்டுகளில் ரூ.13,75,000 தேவை. அதற்கு மாதம் ரூ.9,000 முதலீடு செய்ய வேண்டும். அல்லது ரூ.6,150 முதலீட்டில் ஆரம்பித்து, ஆண்டுக்கு 5% அதிகரித்துக் கொள்ளலாம்.

முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், மகனின் திருமணத்துக்கு இப்போது  முதலீட்டைத் தொடங்க வேண்டாம். அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்றதற்குப் பிறகு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் அவரது சம்பளத்தை முதலீடு செய்துவைத்து அதன்மூலம் திருமணம் செய்யத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

மகனின் மேற்படிப்பு, மகளின் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்ற மூன்று இலக்குகளுக்கு மட்டுமே ரூ.21,650 தேவை. ஆனால்,  முதலீட்டுக் கான வாய்ப்பாக உங்களிடம் ரூ.18 ஆயிரம் மட்டுமே உள்ளது. எனவே, மகளின் திருமணத்துக் கான முதலீட்டை அடுத்த சம்பள உயர்விலிருந்து தொடங்குங்கள்.

உங்களுக்கு பி.எஃப் பிடித்தம் இல்லாத காரணத்தினால், நீங்கள் ஓய்வுக்காலத்துக்கென   முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அடுத்த 22 வருடங்களில் நீங்கள் ஓய்வுபெறும்போது உங்களுக்கு மாதம் ரூ.53,400 தேவைப்படும். அதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.1.5 கோடி வேண்டும். அதற்கு மாதம் ரூ.13,600 சேர்க்க வேண்டும்.    

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?

உங்களுக்கு போனஸ் தொகையாக வருடத்துக்கு இரண்டு மாத சம்பளம் கிடைக்கும் என்கிறீர்கள். அதில் வருடத்துக்கு ரூ.50 ஆயிரத்தை 22 வருடங் களுக்கு முதலீடு செய்தால், ரூ.40.6 லட்சம் கிடைக்கும். பற்றாக்குறை ரூ.1.09 கோடி. இதற்கு மாதம் ரூ.9,900 முதலீடு செய்ய வேண்டும்.  எதிர்காலத்தில் சம்பளம் பெரிதாக உயரும்போது மட்டுமே ஓய்வுக்கால முதலீட்டுக்கு முழுமையாக முதலீடு செய்ய இயலும்.

நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூ.1.60 லட்சத்தை அவசர கால நிதியாக முதலீடு செய்யவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றப் பணம் தேவையெனில் இதைப் பயன்படுத்தலாம். 

16 ஆண்டுகளுக்குப் பின்பு கிடைக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை ரூ.4 லட்சத்தை மறுமுதலீடு செய்து, அதன் மூலம்  11% வருமானம் கிடைக்கும் என்றாலும் உங்கள் ஓய்வுக்காலத்தில்  ரூ.7.5 லட்சம் கிடைக்கக்கூடும். இதை மருத்துவச் செலவுகளுக்கான அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளலாம்.

ரூ.25 லட்சத்துக்காவது டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அதற்கு போனஸ் பணத்திலிருந்து பிரீமியம் செலுத்தலாம். 

மைத்துனரின் பிசினஸ் நன்றாக வளரும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் ஒவ்வொரு படியையும் கவனமாக எடுத்து வைப்பதன்மூலம் உங்கள் இலக்குகளில் பெரும்பகுதியை அடைய முடியும்.
ஏலச்சீட்டு முடிந்தவுடன் முதலீடு செய்ய வேண்டியவை... செல்வமகள் திட்டம் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. போகஸ்டு புளுசிப் ரூ.2,000, கோட்டக் செலக்ட் போகஸ் ரூ.3,000, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்ட் மிட் கேப் ரூ.2,000.”
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878 

- கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 12 - இரண்டு ஆண்டுகளில் சொந்த வீடு சாத்தியமா?