நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

டந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. `பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்பதுதான் அவர் செய்த அதிரடி அறிவிப்பு. கறுப்புப் பணத்தை முற்றிலும் நீக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என மத்திய அரசாங்கம் அதற்கு விளக்கம் அளித்தது. 

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

இந்த அறிவிப்பு வெளியாகி ஏறக்குறையப் பத்து மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில், கடந்த பத்து மாதங்களில் எவ்வளவு பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கை மூலம் எடுத்துச் சொல்லியிருக்கிறது. 

 `பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99%  திரும்ப வந்துவிட்டன. நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய். இதில் 15,28,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளது’ என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்த லாபம் ரூ.16,000 கோடி  (வங்கிக்குத் திரும்ப வராத தொகை). ஆனால், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடச் செலவிட்ட தொகையோ ரூ.21,000 கோடி. 99 சதவிகித ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாகவே மாற்றப்பட்டு விட்டன. அப்படியானால், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்கிற கேள்வி எழவே செய்கிறது. 

மத்திய அரசு சாதித்தது என்ன?

‘`கள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம்’’ என நரேந்திர மோடி அறிவித்தார். ‘`கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள். அதனால் சட்ட விரோதப் பணம் பெருமளவில் ஒழியும்’’ என்பதே அரசின் நம்பிக்கை. ‘‘பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு நல்ல திட்டமே. இந்தத் திட்டத்தினால், நாட்டில் ஊழல் பெருமளவு குறையும்; பணப் பதுக்கல், கறுப்புப் பணம், கள்ள நோட்டு போன்றவை மிக மிகக் குறையும்’’ என நாட்டு மக்கள் பலரும் பாராட்டினர், நம்பினர். ஆனால், இன்று பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99% திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது. இந்தத் திட்டத்தினால் மத்திய அரசாங்கம் சாதித்தது என்ன?   

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

இது குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்துடன் பேசினோம்.

தோல்வி அடைந்த திட்டம்

``பணமதிப்பு நீக்கத்தால் மத்திய அரசு ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதையே ரிசர்வ் வங்கி இப்போது உறுதி செய்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தையடுத்து ஐம்பது நாள்களுக்குள்ளேயே பெரும்பாலான பணம் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டது. இவ்வளவு நாள் மறைத்து வைத்ததை, இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

சென்ற ஆண்டு டிசம்பரில், ரிசர்வ் வங்கியானது பணமதிப்பு நீக்கம் குறித்து ஒரு டேட்டாவை வெளியிட்டது. ஆனால், நிதி அமைச்சகத்தின் செயலாளர் சக்தி கந்ததாஸ், அந்த டேட்டா தவறு என்றார். உடனே ஆர்.பி.ஐ, ‘‘பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணிவிட்டுச் சொல்கிறோம்’’ என்றது.

இது ஒரு பொய் நாடகம். ஏனெனில், ரிசர்வ் வங்கிக்கு எனப் பணத்தை வைத்திருக்க பல இடங்களில் கருவூலம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியும் பணத்தை அதிகமாக வைத்திருந்தால் கருவூலத்தில்தான் வைக்க வேண்டும் என்பது விதிமுறை. ரூபாய் நோட்டை முழுவதுமாக எண்ணிய பிறகே கருவூலத்தில் வைக்கப்படும். இவ்வாறு வைக்கப்படும் பணம், ரிசர்வ் வங்கியின் பார்வைக்கு உடனடியாகச் சென்றுவிடும். ஆகையால், ரூபாய் நோட்டுகளை மீண்டும் எண்ணத் தேவையில்லை. தவிர, அதைக் கையால் எண்ணும் நடைமுறையும் இப்போதில்லை.  ஆனால், நிதிச் செயலாளர் சொன்னார் என்பதற்காக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பணத்தை எண்ணுவோம் என்றது தேவையில்லாத விஷயம். 

பணமதிப்பு நீக்கம் அறிவித்த 40 நாள்களுக் குள்ளே 85 சதவிகிதத்துக்கும் அதிகமான பணம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி அதை வெளியே சொல்லாமல் மறைத்தது. இனியும் அதை மறைக்க விரும்பாமல், இப்போது ஆண்டறிக்கையில் சொல்லியிருக்கிறது. 

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் கறுப்புப் பணம் என்பது சொத்தாக, தங்கமாக மாறியிருக்கிறது. 1978-லும் இதுதான் நடந்தது; இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால், மத்திய அரசாங்கமோ, நம் நாட்டில் பல லட்சம் கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் இ்ருப்பதாகச்  சொல்லி அனைவரையும் நம்பவைத்துப் பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது.

இப்போது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்தது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந் துள்ளனர்; பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?” என்றார் ஜோதி சிவஞானம்.

டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பப்ளிக் ஃபைனான்ஸ் அண்டு பாலிசி நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியர்     என்.ஆர். பானுமூர்த்தியுடன் பேசினோம்.

``மத்திய அரசே பணமதிப்பு நீக்கத்தால், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும்; குறுகிய காலத்தில் தொழில், வேலைவாய்ப்பு பாதிக்கும்’ எனச் சொன்னது. அதேசமயம், ஊழல், கறுப்புப் பணம் குறையும். நடுத்தர முதல் நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும் எனச் சொன்னது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 125 கோடி மக்களில் வெறும் மூன்று சதவிகிதத்தினர் மட்டுமே வரி செலுத்திவருகின்றனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்கத்தின் மூலம் வரி வருவாய் உயரும் என அரசு நம்புகிறது.   

பணமதிப்பு நீக்கம்... மத்திய அரசு சாதித்தது என்ன?

இந்தியாவில் வரி வருவாய் மிக மிகக் குறைவு. வேறெந்த நாட்டிலும் இதுபோல் இல்லை. முந்தைய காங்கிரஸ் அரசுகூட பணமதிப்பு நீக்கத்துக்கு முயற்சி செய்தது. என்றாலும், செய்ய வில்லை. இப்போது பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி மற்றும் ஆதார் போன்ற நடவடிக்கை களினால் வரி வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆகையால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தைத் தெரிந்துகொள்ள இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99%  திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது. இதில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதே பெரிய சாதனை எனச் சொல்லலாம். ஏனெனில், கறுப்புப் பணத்தால் பணவீக்கம்தான் அதிகரிக்கும்.  உதாரணத்துக்கு, கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கிக்கொண்டே இருந்தால், வீட்டின் விலை அதிகரிக்கும். இதன்மூலம் பணவீக்கமும் அதிகரிக்கும்.

இப்போது பணமதிப்பு நீக்கத்தை அடுத்து பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை, 100 சதவிகிதத்துக்கு மேல்கூட பணம் திரும்ப வந்திருக்கலாம். ஏனெனில், கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தன. பணம் அதிக அளவில் டெபாசிட் ஆனபோது கள்ள ரூபாய் நோட்டுகளும் வங்கிக்கு வந்திருக்கலாம். 

இதுமட்டுமன்றி, இந்திய ரூபாயானது  இந்தியா தவிர, நேபாளம், பூட்டான் என வேறு சில நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தப் படுகிறது. அந்த நாடுகளிலிருந்து கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வந்ததா என்பது தெரியவில்லை.  எனவே, ரிசர்வ் வங்கிமீது தவறு சொல்ல முடியாது. கறுப்புப் பணம் என்பது பணமாக மட்டுமல்ல, தங்கம், ரியல் எஸ்டேட், அந்நியச் செலாவணி எனப் பலவாறாகக் கலந்துள்ளது.

பணமதிப்பு நீக்கத்தினால் குறுகிய காலத்தில் நெகட்டிவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வரி வருவாய் உயரும்; ஜி.டி.பி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்” என முடித்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால்  கறுப்புப் பணம் என்பது முழுமையாக ஒழிந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. இது நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவதற்கான அடிப்படைத் தேவை. இதனால் குறுகிய காலத்தில் நம் பொருளாதாரம் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும், எதிர்கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இது எந்த அளவுக்கு உதவும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.” 

-சோ.கார்த்திகேயன்