
கேள்வி பதில்

80சி பிரிவுகளில், மற்ற அனைத்து வரி சேமிப்புத் திட்டங்களைவிட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுதான் சிறந்தது என்பது சரியா?

முத்துகுமார், விழுப்புரம்
ரவிக்குமார், நிதி ஆலோசகர்
``80சி-யின்கீழ் வரிச் சலுகை பெறும் பெரும்பாலான முதலீட்டு திட்டங்களில் ஐந்து வருடங்கள் முடிந்த பிறகே முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியும். அதில் சில திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி (10, 20, 30 சதவிகிதம்) கட்ட வேண்டியிருக்கும்.
ஆனால், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மூன்று வருடங்கள் முடிந்தபின் முதலீட்டை எடுத்துக் கொள்ளலாம். லாபத்துக்கு வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதில் முதலீடு செய்யப்படும் பணம், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதால், சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப லாபம் இருக்கும்.
மேலும், இந்தத் திட்டத்திலிருந்து வரும் டிவிடெண்ட்டுக்கு வரி கிடையாது. அதிலிருந்து வரும் வளர்ச்சி வருமானத்துக்கும் வரி செலுத்தத் தேவையில்லை. இதுபோன்ற வரிச் சலுகைகள் வேறெந்த முதலீட்டுத் திட்டத்திலும் இல்லை. ஆகையால், 80சி பிரிவுகளில் மற்ற வரி சேமிப்புத் திட்டங்களைவிட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு திட்டங்களே சிறந்தவை.”
என் வயது 33. நான்கு வயதுடைய என் மகளின் எதிர்காலப் பணத் தேவைக்காகக் காப்பீடு எடுக்கலாமா?

சித்ரா, திருப்பூர்
நாகராஜன் சாந்தன், நிறுவனர், SNP wealth.com
``நான்கு வயதுடைய உங்கள் மகளின் எதிர்காலத் தேவை களான உயர் கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றுக்காக எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கென அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் காப்பீட்டுத் திட்டங்களை வைத்துள்ளன.
இந்த வகை காப்பீடுகளில் பெரும்பாலானவை யூலிப் வகையைச் சார்ந்தவையாகவே உள்ளன. அதாவது, காப்பீட்டுடன்கூடிய சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள். இந்த வகைத் திட்டங்களில் காப்பீடு மற்றும் சந்தை சார்ந்த வளர்ச்சியும் கிடைக்கும். ஆனால், குழந்தைகளுக் கான நீண்டகால முதலீடு என வரும்போது, அதைக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்வதைவிட, `பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு’ என அழைக்கக்கூடிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதே சிறந்தது. சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், குழந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் சைல்டு கேர் பிளான் போன்றவற்றில் உங்கள் மகளுக்கான முதலீடுகளைச் செய்யலாம். இவை மட்டுமல்லாமல், இதர பங்கு சார்ந்த திட்டங் களிலும் உங்கள் மகளுக்கான முதலீடுகளைச் செய்யலாம். உங்கள் மகள் 18 வயது அடையும் வரைதான், நீங்கள் இந்த ஃபண்டுகளில் காப்பாளராக இருக்க முடியும்.”
என் சம்பளம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம். 2015-ம் ஆண்டில் சில பங்குகளை வாங்கினேன். அதன் மதிப்பு தற்போது ரூ.3.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தப் பங்குகளைத் தற்போது விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?
சங்கர், ஈரோடு

ஜி.வி.ரவிக்குமார், ஆடிட்டர்
``பங்குப் பரிவர்த்தனை வரி (STT - Security Transaction Tax) செலுத்திய வகையில், எந்தவொரு பரிவர்த்தனையாக இருந்தாலும் நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களிடம் ஒரு வருடத்துக்கு மேல் இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது.
நீங்கள் 2015-ம் ஆண்டிலேயே பங்களை வாங்கி வைத்திருக்கிறீர்கள். இது ஒரு வருடத்துக்குமேல் ஆகிவிட்டது. ஆகையால், இந்தப் பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு, மூலதன ஆதாய வரி செலுத்தத் தேவையில்லை. நீண்டகால மூலதன லாபத்துக்கு வரிவிலக்கு உள்ளதால், நீங்கள் மாத ஊதியத்துக்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.