நடப்பு
தொடர்கள்
Published:Updated:

உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?

உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

டந்த எட்டு மாதங்களில் அடிப்படை உலோகங்கள் நல்ல விலையேற்றம் கண்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில், காப்பர் 45%, அலுமினியம் 25%, ஜிங்க் 30%, நிக்கல் 15 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப்பின் உலோகங்களின் விலை அதிகரித்து உள்ளது. இந்த ஏற்றம் தற்காலிகமானதா அல்லது தொடர்ந்து நீடிக்குமா?  

உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?

மூன்று காரணங்கள்

பொதுவாக, உலோகங்களின் விலை மூன்று விஷயங்களால் உயர வாய்ப்பு உண்டு. முதலாவது, தேவை என்று சொல்லக்கூடிய பயன்பாட்டின் அடிப்படையில் விலை ஏறுவதும், உற்பத்தி அதிகரித்து தேவை குறையும்போது  விலை இறங்குவதுமாகும். இரண்டாவது, உலோகப் பயன்பாட்டில் சீனாவின் பங்களிப்பு எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்தது.  மூன்றாவது, சர்வதேச அளவில் உலோகங்களின் வர்த்தகம் நடைபெறுவது அமெரிக்க டாலரில்.இதன் மதிப்பு சரிவது அல்லது அதிகரிப்பதன் அடிப்படையில் உலோகங்களின் விலைபோக்கு அமைகின்றன. பொதுவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு சரியும்போதெல்லாம், உலோகங்களின் விலை அதிகரிக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன், முக்கியமான பல கமாடிட்டிகளின் விலை யானது இறக்கம் கண்டதற்குச் சொல்லப்பட்ட காரணம், சீனாவின் பொருளாதாரத் தேக்கநிலை. சீனாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளான போது அதன் மிதமிஞ்சிய இறக்குமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டுமே உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒருகட்டத்தில் சீனா இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு, ஏற்றுமதியை அதிகரித்தது. தனது நாணயத்தை அமெரிக்க டாலருக்கு நிகராக மதிப்பிறக்கம் செய்தது.

உலோகங்களின் விலைச் சரிவினால் கமாடிட்டிகளை உற்பத்தி செய்கிற  நாடுகளான ஆஸ்திரேலியா (இரும்புத்தாது), இந்தோனேஷியா (நிக்கல்), சிலி (காப்பர்) போன்ற நாடுகள்  பாதிப்படைந்தன. சமீபத்திய விலை உயர்வால், கடந்த இரண்டரை மாதங்களில் மேற்சொன்ன நாடுகளின் நாணய மதிப்புகள் அமெரிக்க டாலருக்கு நிகராக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், சில முக்கியமான மாற்றங்கள் நடந்துள்ளன. 

உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?


 
1) உலோகங்களின் தொடர் இறக்கத்துக்கு  முடிவு கட்டும் விதமாக சீனா தனது உள்நாட்டு உற்பத்தியைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. மாசுக் கட்டுப்பாடு குறித்த சட்டங்களைக் கடுமையாக்கியதன் விளைவு, சந்தை வரத்தை குறைக்கச் செய்துள்ளது.

2) ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பாண்டில் 3.5 சதவிகிதமாக இருக்கக்கூடும் எனச் சர்வதேச நிதி ஆணையம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது உலோக சந்தைக்குச் சாதகமான செய்தியாகப் பார்க்கப் படுகிறது. ஐரோப்பிய பிராந்தியத்தில் அரசியல் ரீதியான பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்கிற கணிப்பும் சந்தைகளை உற்சாகப்படுத்தி உள்ளன.

3) அமெரிக்க டாலரின்  மதிப்பு, முக்கியமான 16 நாடுகளின் நாணயத்தோடு ஒப்பிடுகையில், 2017-ம் ஆண்டு மட்டும் 7% இறக்கமடைந்துள்ளது. பெரும்பாலான உலோகங்களுக்கு டாலரில் வர்த்தகம் நடைபெறுவதால், மற்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் உலோகம் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கத் துவங்குகின்றன. 

4 ) சர்வதேச அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் தங்களது கையிருப்பைக் குறைப்பதற்காக சில சுரங்கங்களை மூடியுள்ளன. இதனால் எதிர்காலத் தேவையில் மாற்றம் இல்லை என்றாலும், கையிருப்புக் குறைவது சாதகமான செய்தி என்று சொல்லலாம்.  

உலோகப் பங்குகளின் ஏற்றம் நீடிக்குமா?

இந்திய நிலைமை எப்படி? 
 
இந்திய நிறுவனங்களின் மீதான அழுத்தம் அதாவது, கடன் சுமை ஒருபக்கம், அதிகப்படியான கையிருப்பு, அதாவது ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு தேவை குறைந்ததின் அடிப்படையில் சந்தைக்கு அனுப்ப முடியாமல் கையிருப்பாக வைத்திருப்பது (ஸ்டாக்காக) மறுபக்கம், விலை ஏற்ற, இறக்கங்களுடன் வர்த்தக மாகக்கூடிய தாதுப் பொருள்கள், வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் இந்தியத் தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி இருக்கின்றன. அதனால் நிலைமை முற்றிலும் மாறிவிடவில்லை. அதேசமயத்தில், நம் உள்நாட்டு கட்டுமானத் தேவைகள் ஓரளவுக்கு அதிகரித்துள்ளன.

அதிகரிக்கும் பங்கு விலை

உலோகத் துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் தேக்கம் காணப்பட்டாலும், அவற்றின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காரணம், பங்குச் சந்தைகள்  காளையின் பிடியில் இருக்கும்போது, இந்தத் துறைப் பங்குகள் அடிமட்ட விலைக்கு வர்த்தகமாவதால், இந்தப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே ஈர்ப்பு இருந்து வருகிறது. இந்தப் பங்குகள் நீண்டகால முதலீட்டுக்கு உகந்தது என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது. மேலும், மத்திய அரசு நம் நாட்டின்  உள்நாட்டுக் கட்டுமானத்தில் கவனம் செலுத்தலாம் என்கிற எதிர்பார்ப்பும் காரணம். 

ஏற்றம் எவ்வளவு?


ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஆறு மாதங்களில் 30 சதவிகிதமும், ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்கு 30 சதவிகிதமும், ஜே.எஸ்.டபிள்யூ பங்கு விலை 40 சதவிகிதமும், நேஷனல் அலுமினியம் பங்கு விலை 25 சதவிகிதமும், டாடா ஸ்டீல் பங்கு விலை 40 சதவிகிதமும், வேதாந்தா பங்கு விலை ரூ.50 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. செயில் பங்கு விலை, கடந்த ஒரு மாதத்தில் 15%-க்கு மேல் உயர்ந்துள்ளது. 

ஏற்றம் நீடிக்குமா?


குறுகிய காலத்தில் பங்கு விலைகள் இரண்டு மடங்குகளாகி உள்ளன. சீனாவின் கட்டுமானத் துறை சார்ந்த வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பில் காணப்படுகிற ஏற்ற இறக்கங்கள், நிறுவனங்களின் கடன் சுமை குறைதல் போன்றவை பங்கு விலை களைத் தீர்மானிக்க இருக்கின்றன.