நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆப்ஷன்ஸ் டிரேடிங்... எஸ்.டி.டி இழப்பிலிருந்து தப்பிக்கும் வழி!

ஆப்ஷன்ஸ் டிரேடிங்... எஸ்.டி.டி இழப்பிலிருந்து தப்பிக்கும் வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்ஷன்ஸ் டிரேடிங்... எஸ்.டி.டி இழப்பிலிருந்து தப்பிக்கும் வழி!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

ப்ஷன்ஸ் டிரேடிங் செய்யும்போது    எஸ்.டி.டி வரி கட்ட வேண்டிய காரணத்தினால் ஏற்படும் இழப்பிலிருந்து ஓரளவுக்குத் தப்பிக்க பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ புதிய வழிமுறையைக் கொண்டுவந்துள்ளது. இது, ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபகரமாக உள்ளது.   

ஆப்ஷன்ஸ் டிரேடிங்... எஸ்.டி.டி இழப்பிலிருந்து தப்பிக்கும் வழி!

பொதுவாக, நாம் ஆப்ஷன் வர்த்தகத்தில் வியாபாரம் செய்யும்போது, நாம் வாங்கிய ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட் எக்ஸ்பைரி முடிவின் போது சிறிது லாபத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எக்ஸ்பைரி முடிவு நாளன்று அதிலிருந்து வெளியேற இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1.  வாங்கிய ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட்டை விற்று வெளியேறலாம்.

2. வாங்கிய கான்ட்ராக்ட்டை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால், சந்தை முடிந்தபிறகு, எக்ஸ்சேஞ்ச் தானாகவே, லாபத்தில் இருக்கும் கான்ட்ராக்ட் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, எஸ்.டி.டி வரி போக உள்ள லாபத்தை நம் கணக்கில் வரவு வைக்கும்.

இந்த நடைமுறையில், நாம் கட்ட வேண்டிய எஸ்.டி.டி (STT-செக்யூரிட்டி டிரான்ஷாக் ஷன் டாக்ஸ்) வரியானது, நம் சிறிய லாபத்தைத் தாண்டி நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் அபாயம் இருப்பதைப் பலர் அறியாமலே  இருக்கிறார்கள்.

இந்த மாதிரி நாம் வாங்கி வைத்திருக்கும் ஒரு ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட்டை, எக்ஸ்பைரி முடிவின்போது சிறிய லாபம் இருக்கும்போதே விற்று முடிவுக்குக் கொண்டுவந்தால், 0.05 சதவிகித எஸ்.டி.டி வரியை ஆப்ஷன்ஸ் பிரீமியத்தின் மதிப்பில் கட்ட வேண்டும். ஆனால், கான்ட்ராக்ட்டை விற்காமல்  அப்படியே விட்டுவிட்டால், வர்த்தகம் முடிந்த பின், பங்குச் சந்தையானது அந்தக் கான்ட்ராக்ட்டை விற்று, அதன் மதிப்பில் 0.125% எஸ்.டி.டி வரியாக எடுத்துக்கொள்ளும். 

இந்தச் சூழலில், சிறிய அளவில் லாபம் இருக்கும்போது, எஸ்.டி.டி இழப்பிலிருந்து ஓரளவுக்குத் தப்பிக்க பங்குச் சந்தைகளான       என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ புதிய வழிமுறையைக் கொண்டுவந்துள்ளது.
    
பொதுவாக, ஒவ்வொரு எக்ஸ்பைரி நாளன்றும் பங்குச் சந்தை வர்த்தகம்  முடிந்தபிறகு, எந்தெந்த கான்ட்ராக்ட்கள் எல்லாம், ஸ்பாட் விலைக்கு சற்று அருகாமையில் (சிறிய லாபத்தில்) இருக்கிறதோ, அதன் விவரங்களைப் பங்குச் சந்தைகள் புரோக்கர்களுக்கு அனுப்பும்.

பங்கு புரோக்கர்கள் அந்த கான்ட்ராக்ட்களை அவர்களின் வாடிக்கையாளர்கள் வைத்திருந்தால், அவற்றை விற்க வேண்டுமானால், Y  (YES) என்றும், விற்க வேண்டாம் என்றால் N (NO) என்றும் குறிப்பிட வேண்டும். அதன்பின், மாலை 4.30 முதல் 5.00 மணிக்குள்ளாக, அந்தத் தகவலை  புரோக்கர்கள் பங்குச் சந்தைகளுக்கு  அனுப்பிவிட வேண்டும். இப்படிச் செய்வதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?

நாம் நிஃப்டி 9900 கால் ஆப்ஷனை ரூ.30 என்ற விலைக்கு (லாட் அளவு 75) வாங்கியதாக வைத்துக் கொள்வோம். இப்போது எக்ஸ்பயரி நாளன்று மணி, மாலை 3.25. நிஃப்டி ஸ்பாட் 9905-ல் உள்ளது.  இந்த நிலையில், நாம் வாங்கிய நிஃப்டி கான்ட்ராக்ட் 9900 ரூ.5-ல் பிரீமியாக இருக்கும். நாம் இந்த கான்ட்ராக்ட்டை விற்றால் 5 X 75 = ரூ.375 கிடைக்கும். இந்த ரூ.375-க்கு எஸ்.டி.டி 0.05% வரி விதிக்கப்பட்டால், ரூ.18.75 வரி கட்டுவதுடன் முடிந்துவிடும். (இப்படி விற்கும்போது கூடவே புரோக்கரேஜ், மற்ற வரிகளும் வரும்.)

இப்போது மணி மாலை 3.30 ஆகிவிட்டது. இந்த நிலையில், எக்ஸ்சேஞ்ச் நம் கான்ட்ராக்ட்டை 9905 என்ற விலைக்கு விற்காமல் விட்டால்,        நமக்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு தெரியுமா? 

(ஸ்ட்ரைக் பிரைஸ் + பிரீமியம் X லாட் அளவு) X எஸ்.டி.டி, அதாவது, (9900 + 5 X 75) X 0.125%  = ரூ.928. நம் லாபமே ரூ.375-ஆக இருக்கும்போது, அதை விற்காமல்விடுவதினால் ஏற்படும் நஷ்டமானது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று பார்த்தீர்களா?

ஆப்ஷன் டிரேடிங்கில் நஷ்டத்தைத் தவிர்க்க உதவும் இந்தப் புதிய நடைமுறையானது கடந்த 31.08.2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.