
செல்லமுத்து குப்புசாமி
எப்போதுமே எனக்கு இந்த ஒப்பீடு பிடிக்கும். இந்த இரு நிறுவனங்களின் ஷேர்களை வாங்கி, வைத்திருந்து, விற்று, மீண்டும் வாங்கிய அனுபவம் உண்டு. இந்த இரு நிறுவனங்களின் சேவையை நீண்ட காலமாகப் பயன்படுத்தியும் வருகிறேன். அதன் வாயிலாகப் பெற்ற அனுபவம் வேறு. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும், எஸ்.பி.ஐ வங்கியுமே அந்த இரு நிறுவனங்கள்.

இப்போது (4.9.17) ஐ.சி.ஐ.சி.ஐ பங்கின் இ.பி.எஸ் (Earnings per share) ரூ.16.77. ஒரு பங்கின் விலை (Price) ரூ.297.15. அப்படியானால் அதன் பி.இ (PE) விகிதம் = 297.15 / 16.77 = 17.72.
இதே கணக்கை ஸ்டேட் பேங்குக்குப் போட்டுப் பார்ப்போம்.
இபிஎஸ் ரூ.13.43; பங்கு விலை ரூ.277.80. அப்படியானால் பி.இ விகிதம் = 277.80 / 13.43 = 20.69.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகள் எஸ்.பி.ஐ. பங்குகளைவிட மலிவாகக் கிடைக்கின்றன. ஆனால், பி.இ விகிதம் மட்டுமே பங்குகளை வாங்குவதற்கான அளவுகோல் கிடையாது. ஒரு மருத்துவர் பயன்படுத்தும் தெர்மோ மீட்டரைப் போன்றது அது. தெர்மோமீட்டர் காட்டும் உஷ்ணத்துக்கான காரணங்களை அடுத்து ஆராயலாம்.
ஏற்கெனவே நாம் கவனித்த புக் வேல்யூ அடிப்படையில் இந்த இரண்டு பங்குகளின் பி.இ-யையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். எஸ்.பி.ஐ-க்கான பிரைஸ் டு புக் வேல்யூ (Price To Book Value) விகிதமானது 1.49 என வருகிறது. இதுவே ஐ.சி.ஐ.சி.ஐ-க்கு 1.67.
ஆக, இந்த அடிப்படையில் எஸ்.பி.ஐ பங்கு விலை மலிவாக (அதாவது, ஒரு ரூபாய் புக் வேல்யூ உள்ள பங்கு ரூ.1.49-க்கு) கிடைக்கிறது. ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ-ல் ஒரு ரூபாய் புக் வேல்யூ உள்ள பங்கை வாங்க ரூ.1.67 செலுத்த வேண்டியிருக்கிறது.
வங்கி பிசினஸை அளவிட இது மட்டும் போதுமா? வங்கிகளின் பிரதானமான தொழிலே கடன் கொடுத்து அந்த வட்டியில் வருமானம் ஈட்டுவதுதான். அந்த வகையில் இவையிரண்டும் எவ்வாறு உள்ளன?

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சராசரியாக கிளை யொன்றுக்கு ரூ.11,16,62,431.55 வட்டி மூலம் வருமானம் ஈட்டுகிறது. செலவுகள் போக நிகர லாபம் என்று பார்த்தால், கிளையொன்றுக்கு 2,02,08,434.23 ரூபாயை ஆண்டுக்கு சம்பாதிக்கிறது.
இதே கணக்கு எஸ்.பி.ஐ-க்கு எப்படிப் பொருந்து கின்றன என்று பார்த்தால், வட்டி மூலம் ஈட்டுகிற வருமானம் கிளையொன்றுக்கு ரூ.10,22,23,785.91. நிகர லாபம் ரூ.61,06,058.59.
இது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சங்கதி. தனது ஒரு கிளையின் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ 11.17 கோடி வட்டியாகச் சம்பாதிக்கிறது. ஏனைய வருமானங்களையும், செலவுகளையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அந்த 11.17 கோடியில் நிகர லாபமாக ரூ.2.02 கோடியை மிச்சப்படுத்துகிறது.
எஸ்.பி.ஐ நிறுவனமும் ஒரு கிளையின் மூலம் ரூ.10.22 கோடி வட்டி வருமானம் ஈட்டுகிறது. இது ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தை விட கொஞ்சம்தான் குறைவு என்றாலும், நிகர லாபம் இடிக்கிறது. ரூ.10.22 கோடியில் கடைசியாக வெறும் ரூ.61.06 லட்சம் மட்டுமே மிச்சமாகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஒரு கிளை, தனது வட்டி வருமானத்தில் 18.10 சதவிகித்தை நிகர லாபமாகத் தக்கவைக்க முயலுகிறது. ஆனால், எஸ்.பி.ஐ வெறும் 5.97% மட்டுமே தக்கவைக்கிறது.
ஏன் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி குறைவாகச் செலவு செய்கிறது (அல்லது வட்டி அல்லாத கூடுதல் வருவாய்களை ஈட்டுகிறது), ஸ்டேட் பேங்க் கூடுதலாகச் செலவழிக்கிறது, ஒருவேளை, அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்துக் கொண்டு, எஸ்.பி.ஐ செய்யும் வேலையை ஐ.சி.ஐ.சி.ஐ குறைவான ஆள்கள் மூலம் செய்ய முடிகிறதா அல்லது எஸ்.பி.ஐ-ல் நிறைய சம்பளம், போனஸ், இதர சலுகைகளைத் தருகிறார்களா?
ஐ.சி.ஐ.சி.ஐ-ல் சராசரியாக ஓர் ஊழியருக்கான வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ.66,75,329.33. இதுவே எஸ்.பி.ஐ-ல் ஒரு ஊழியருக்கான சராசரி வட்டி வருமானம் ரூ.83,75,280.48. ஆக, எஸ்.ஐ.பி நிறையக் கடன்களைத் தந்திருக்கிறது. அல்லது மக்களே தேடிச் சென்று கடன் பெறுகிறார்கள். வாடிக்கையாளர் சேவையை, ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பலரும் குறை கூறினாலும், அரசு வங்கியில் கடன் பெறுவதையே பலரும் விரும்புகிறார்கள். ஆபிஸுக்கு லீவு போட்டு, அலைந்தாலும், எஸ்.பி.ஐ-ல் கடன் வாங்கிவிட்டால் ஒரு திருப்தி.
ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடன் வாங்குவது ஓரளவுக்கு எளிது. நாம் பெரிதாக அலைய வேண்டியிருக்காது. வங்கி ஆள்கள்தான் மெனக்கெடுவார்கள். ஆனாலும், ஊழியர் ஒருவருக்கான வட்டி வருமானம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியைவிட (ரூ.66.7 லட்சம்) எஸ்.பி.ஐ (ரூ.83.75) வங்கிக்கு 25% கூடுதலாக உள்ளது. ஆனால், சராசரியாக ஒரு ஊழியருக்கான நிகர வருமானம் ஐ.சி.ஐ.சி.ஐ-ல் ரூ.12.08 லட்சமாகவும், எஸ்.பி.ஐ-ல் ரூ5.00 லட்சமாக வும் உள்ளது. குறைவாக வட்டி வருமானம் ஈட்டினாலும், ஐ.சி.ஐ.சி.ஐ அதிகமான நிகர லாபம் ஈட்டுகிறது.
எப்படி இது சாத்தியம்? ஒருவேளை ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனம் தனது ஊழியர்களின் பெரும்பகுதி நேரத்தை புது பிசினஸை (புதிய கணக்குகள், லோன்கள்) பிடிப்பதற்கே செலவழிக்கலாம். தினசரி வேலைகளையெல்லாம் கணினிமயமாக்கல் மூலம் எளிமைப்படுத்தியிருக்கலாம். எஸ்.பி.ஐ. வங்கிக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். மேலும், இந்த இரு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சன்மானம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, போனஸ், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் அல்லது நிரந்தரமின்மை, பணி உயர்வை எந்தக் காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள், யார் தீர்மானிக்கிறார்கள் என உள்ளே சென்று பார்த்தால் இன்னும் நிறைய விஷயங்கள் புலப்படும். இவை தவிர, கம்பெனிகளின் ஆண்டறிக்கை, காலாண்டு அறிக்கை, பேலன்ஸ்ஷீட், லாபநஷ்டக் கணக்குகள், அவற்றின் போக்குகள் என எல்லாவற்றையும் படித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்.
டாக்டரும் அதைத்தான் செய்கிறார். தெர்மோ மீட்டர், ஸ்டெத்தஸ்கோப், ரத்தப் பரிசோதனை எண்கள், ஈசிசி சார்ட்கள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் இறுதி முடிவுக்கு வருவார். ஏதோ ஒன்றை மட்டும் கொண்டு, இதுதான் பிரச்னை என்கிற முடிவுக்கு வந்துவிட மாட்டார்.
மனிதர்கள் பொய்யான நம்பரைச் சொல்வார்களே தவிர, நம்பர்கள் ஒருபோதும் பொய் சொல்லாது. ஆகையால், எண்களைப் படிக்கப் பழகுவோம். அதுதான் நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!
(லாபம் சம்பாதிப்போம்)