
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: மைண்ட் ஷிஃப்ட் (Mindshift)
ஆசிரியர்: பார்பனா ஒக்லே
பதிப்பாளர்: TarcherPerigee
தடைகளைத் தாண்டி உங்களின் நிஜமான பலத்தினை உணர்ந்து வெற்றிகளைப் பெறுவது எப்படி என்பதைப் பற்றி விரிவாக அலசுகிறது பார்பனா ஒக்லே என்கிற பெண்மணி எழுதிய ‘மைண்ட் ஷிஃப்ட்’ என்னும் புத்தகம்.
கிரஹாம் கெய்ர் என்பவரின் கதையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். ஒரு சராசரிக்கும் குறைவான திறனுடைய பள்ளி மாணவர் அவர். இசையில் அளவுக்கதிகமான ஈடுபாடு அம்மாணவருக்கு உண்டு. கணக்கும், அறிவியலும் தனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்று தெளிவாகச் சொல்பவன். பள்ளிக் கல்வியை முடித்தபின் பெற்றோர்கள் விருப்பத்துக்கு மாறாக, ஜாஸ் இசைக்குழுவில் சேர்ந்து பல கச்சேரிகள் செய்து நல்லதொரு இசைக்கலைஞனாக மாறிவிட்டார்.
ஒரு நாள், புற்றுநோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவ மனையில், அவர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றார். அவருக்கு அங்கே ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று தோன்ற, மீண்டும் மீண்டும் அங்கே சென்றுகுழந்தைகளுக்காக இசை நிகழ்ச்சி நடத்தினார். ஒரு நாள், ‘என்ன பெரிய இசைக்கலைஞன் நான். இசை, நிகழ்ச்சி என ஊர் சுற்றுகிறேன். ஆனால், புற்றுநோய் கண்ட குழந்தைகளுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர்கள், தொடர்ந்து அவர்களுடன் இருந்து அவர்களுக்கு மருத்துவம் செய்து, அவர்கள் குண மடையப் படாதபாடுபடுகிறார்கள். நானும் இனி மேல்படிப்பு படித்து மருத்துவராகப் போகிறேன்’ என்று கிளம்பினார்.
குடும்பத்தினர் மட்டுமல்லாது உறவுக்காரர்கள் எல்லாரும்,‘‘தம்பி, மியூசிக் கரியர் நன்றாகப்போகும்வேளையில் உனக்கெதுக்கு இந்த விஷப்பரீட்சை? கொஞ்ச நாள் நீ பாடாமல் இருந்தால் மக்கள் உன்னை மறந்தேபோவார்கள்’’ என்று எச்சரித்தார்கள். நண்பர்களோ, ‘‘பள்ளிக்கூடத்திலயே உனக்குக் கணக்கும், அறிவியலும் வராதே’’ என்று சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால், கிரஹோம் அதையெல்லாம் கேட்கிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
ஏ கிரேடு வாங்கி, மெடிக்கல் அட்மிஷன் டெஸ்ட்டிலும் தேர்வாகி, இன்றைக்கு மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவராக இருக்கிறார் என்கிறார் ஆசிரியர்.ஆச்சர்யமாக இருக்கிறதுதானே!
எது அவரை மாற்றியது..? வராத கணக்கையும், அறிவியலையும் (முக்கியமாக, வேதியியல்) எது அவருக்குச் சுலபமாக்கியது என்று ஆராய்ந்தால், அவரே அவற்றை சுலபமாக்கிக்கொண்டார் என்கிறார் ஆசிரியர். எப்படி? இசையில் நிபுணர் நிலையில் இருக்கும் அவர் கணக்கிலும், அறிவியலிலும் ஆரம்பநிலை மாணவனாக இருப்பார். இந்த மன மாற்றத்துக்கு (Mind shift) அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்றாலும், த்ரில்லிங்கான விஷயம் அது. ஆனாலும், அதில் அவர் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இசையமைப்பதில் சின்னச் சின்ன சப்தங்களையெல்லாம் தெளிவாகக்கேட்டுப் பழகிய அவருக்கு, ஒரு டாக்டராக ஸ்டெத்தாஸ்கோப்பைப் பயன்படுத்தும்போது அற்புதமாக நோய்களைக் கண்டறிய முடிந்தது என்கிறார் ஆசிரியர்.
அதனால் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள நினைக்கும்போது நாம் ஆரம்பநிலையில் பயிலும் மாணவராக மாறவேண்டியிருக்கும் என்பதை மனதில்கொண்டு செயல்பட்டால், நம்மால் அதில் சுலபமாக வெற்றி பெற முடியும் என்கிறார் ஆசிரியர். இதுபோல, பல மனமாற்றத்துக்கு உதவும் விஷயங்களைப் பல்வேறு வாழும் உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
உதாரணத்துக்கு, கடுமையான மன அழுத்தத்தில் இருந்த ஒரு பெண்மணி உடற்பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தார் என்பதைச் சொல்கிறார் ஆசிரியர். உடற்பயிற்சி என்பது மன மாற்றத்துக்கு பெருமளவில் வழிவகுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். ஏனென்றால், உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்ய நம்மிடம் நிறையவே அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இந்த அர்ப்பணிப்புக்கு நாம் பழகிவிட்டால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் அதே அளவிலான அர்ப்பணிப்பை நம்மால் செலுத்த முடியும் என்கிறார் ஆசிரியர்.

மேலும், நாம் இவ்வளவுதான் என்று நம்மை நாமே ஒரு லெவலில் நம்மை உருவகப்படுத்தி வைத்திருப்போம். ஆனால், அதைவிட அதிகமான திறமைகள் நம்மிடத்தில் நிச்சயம் பொதிந்திருக்கும். அர்ப்பணிப்பு என்பது குறைவாக இருப்பதாலேயே நம் முழு பலத்தையும் நம்மால் அறிய முடியாமலேயே போகிறது என்கிறார் ஆசிரியர்.
சின்னச் சின்ன விஷயங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டே நாம் பல நாள்களைக் கடத்தும் போதுதான் பெரிய அளவிலான திறமை மாற்றம் என்பது நம் கண்ணுக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கும்போது சுலபத்தில் பல சின்னச் சின்ன விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொள்ளும் சில விஷயங்கள் கடுமையானதாக இருக்கும்போதும் மனம் துவளாது, நிறுத்தி நிதானமாக கற்றுக் கொள்வது அர்ப்பணிப்பினாலேயே சாத்தியமா கிறது. கடினமான விஷயங்களைக் கவனமாக கற்றுக்கொள்ளும் வேளையிலேயே நம் திறமை பளிச்சிட ஆரம்பிக்கிறது என்கிறார் ஆசிரியர்.
அதேபோல், மனமாற்றத்துக்கு (mind shift), விருப்பவேலைகள் (hobby) பெருமளவில் உதவும் என்கிறார் ஆசிரியர். விருப்ப வேலைகளில் கிடைக்கும் நுண்ணறிவு மற்றும் நெகிழ்வு உங்களை அறியாமலேயே உங்கள் பணியிலும், தொழிலிலும் தொடர்ந்துவரும் என்கிறார் ஆசிரியர்.
எனக்குப் பிடித்ததை நான் செய்கிறேன். நான் பேரார்வம் கொண்டு செய்கிற செயல் (passion) என்று சொல்லி எதையும் செய்ய முயலாதீர்கள். ஏனென்றால் செய்யும் தொழிலே நமக்கான அடையாளத்தை ஏற்படுத்துகிறது. நமக்குப் பிடித்ததைச் செய்ய நினைக்கும் அதேவேளையில், அதற்கான தேவையும், வாய்ப்பும் சந்தையில் இருக்கிறதா என்பதைத் தெளிவாக உணர்ந்து செய்ய வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
எதில் நீங்கள் வல்லுநராகத் திகழ வேண்டும் என்பதை முடிவு செய்து அதில் மட்டுமே வல்லுநராக திகழ்வதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் மூளைக்கு அபரிமிதமான சக்தி இருக்கிறது என்கிறபோதிலும், நேரம் என்பது நமக்குக் குறைவாகவே இருக்கிறது. அதனால் எதில் நாம் நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இல்லா விட்டால் ஒரு வல்லுநராக நம்மால் பரிமளிக்க முடியாது என்கிறார் ஆசிரியர்.
தொழில் செய்கிறோமோ அல்லது பணியில் இருக்கிறோமோ, எதுவானாலும் எப்போதுமே நம்பிக்கையான வழிகாட்டி ஒருவர் அனைவருக்குமே அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறார். ஆனால், அவர்தான் நமக்கு வழிகாட்டி என்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. மறைமுகமாகக்கூட நீங்கள் அவரின் வழிகாட்டுதலின் பெயரில் செயல்படலாம். உங்களுக்கு அவர் உதவுவதைப்போல் நீங்களும் அவருக்கு உதவியாக இருப்பதுபோல் சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டால் மட்டும் போதுமானது என்கிறார் ஆசிரியர்.
போட்டிகள் பல நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற மனத்திடம் மிகவும் அவசியம். அந்த மனத்திடத்தினை பெறுவதற்கான வழிகள் பலவற்றையும் உதாரணங் களுடன் எளிமையாகச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை நாம் அனைவரும் ஒருமுறை அவசியம் படிக்கலாம்.
- நாணயம் டீம்