நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா

‘‘என் பெயர் கதிரேசன். சேலம் அருகில் உள்ளது என் சொந்த ஊர். எனக்கு 60 வயது. ரயில்வே துறையில் வேலை பார்த்தேன். மூன்று ஆண்டுகளுக்குமுன் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டேன். ஓய்வு பெற்றபோது எனக்கு ரூ.15 லட்சம் கிடைத்தது. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனப் பல வருடங்களாகவே எனக்கு ஆசை. அதற்கான வாய்ப்பு அமையாததால், இப்போது பணம் கிடைத்ததும் மொத்தத் தொகையையும் செலவு செய்து வீடு கட்டிவிட்டேன். பற்றாக்குறைக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?

எனக்கு மாதம் ரூ.24,000 பென்ஷன் கிடைக்கிறது. ஹோமியோபதி மருத்துவம் எனக்குத் தெரியும் என்பதால் அதன் மூலம் மாதம் ரூ.2,000 வருமானம் வருகிறது. தற்போது என் குடும்பச் செலவு சுமார் ரூ.18 ஆயிரம் வரை ஆகிறது. உறவினர் வீட்டு விழாக்கள் வரும்போது மாதம் ரூ.20 ஆயிரம்கூட ஆகும். இப்படி செலவு வந்தபோது ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.15,000 கடன் வாங்கினேன். அதற்கு மாதம் ரூ.2,000 செலுத்தி வருகிறேன். பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் கடன் வாங்கியதால், ரூ.1 லட்சம் வரை கடன் வந்துவிட்டது. தற்போது மொத்தமாக ரூ.3 லட்சம் கடன் உள்ளது. கடன் கட்டவே மாதம் ரூ.13,000 வரை போய் விடுகிறது. மீதமுள்ள தொகையில் குடும்பம் நடத்துவது கஷ்டமாக உள்ளது.

எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் 10-ம் வகுப்பு ஃபெயிலானதால் தொடர்ந்து படிக்கவில்லை. சமீபத்தில் அவன் பைக்கில் சென்றபோது திடீர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததால், தலையில் அடிபட்டதுடன், தோள்பட்டையும் ஒரு பக்கம் கீழே இறங்கிவிட்டது. அதன் காரணமாகச் சில சமயங்களில் அவனுக்கு வலிப்பும் வருகிறது. எனவே, அவனை வேலைக்கு  அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இப்போது அவனுக்கு 30 வயதாகிவிட்டது. சொந்தத் தொழில் வைத்துத் தர முயற்சி செய்து வருகிறேன். டீ கடை, பேக்கரியை நடத்துவதில் அவனுக்கு ஆர்வம். அரசுக் கடன் கிடைக்குமா என முயற்சி செய்து வருகிறேன். குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் அளவுக்காவது டீ கடை வைக்க ஏதாவது வழி இருக்கிறதா என்பதைச் சொல்லுங்கள்.

எந்தச் சேமிப்பும் என்னால் செய்ய  முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குடும்பத்தின் மீதான அக்கறையும், பொறுப்பும் என் மனைவிக்குச் சிறிதும் இல்லாததால், சேமிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?



நான் பணியில் இருந்தபோது கடன் வாங்கி, இரண்டு மகள்களையும் படிக்க வைத்தேன். ஒருவர், ஹோமியோ மருத்துவர். இன்னொருவர், பி.ஹெச்.டி முடித்துவிட்டு, அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். இரண்டு மகள்களுமே காதல் திருமணம் செய்துகொண்டதால், எனக்கும், அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களிடமிருந்து பண உதவி எதையும் நான் எதிர் பார்க்கவில்லை.

எனது வீட்டை விற்று, அந்தப் பணத்தை வைத்து கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்த முடியுமா என்று யோசித்து வருகிறேன். வீடு ரூ.16 லட்சம் வரை விலை போகும் என நினைக்கிறேன். எனக்கு நீங்கள்தான் நல்ல வழியைக் காட்ட வேண்டும்’’ என்றபடி முடித்தார் கதிரேசன்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நடுத்தர வருமானம் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிதித் திட்டமிடல் செய்யாமல் விட்டால் எந்த அளவுக்குக் கஷ்டங்கள் வரும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் நீங்கள். இப்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலானது இப்போது உருவானதல்ல. உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே பணத்தைக் கையாள்வதில் உங்களுக்குச் சரியான அணுகு முறை இல்லாமல் இருந்ததுதான், இப்போது நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்குக் காரணம். சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே  ஓய்வுக் காலத்துக்கான முதலீடு குறித்து சிந்திக்கத் தொடங்குபவர்களுக்கு, இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்தில் நிச்சயம் வராது.

இன்னொரு முக்கியமான விஷயம், இரண்டு மகள்களும் காதல் திருமணம் செய்துகொண்டதால், நீங்கள் அவர்களை ஒதுக்கி வைக்கத் தேவை யில்லை. அவர்களிடமிருந்து நீங்கள் பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், குழந்தைகளுடன் சீரான உறவு இருப்பதே பெரும் நிம்மதி. அந்த உறவை அவர்கள் விரும்பவில்லை என்றால் விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம்.    

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?

சொந்த வீடு என்பது எல்லோரது கனவு.  அதற்காக எந்தப் பிடிப்பும் இல்லாத நிலையில் ஓய்வுக் காலத்தில் கிடைத்த பணத்தை வீடு கட்ட பயன்படுத்தியது தவறு. அதுவும் ரூ.17 லட்சத்தை  செலவு செய்து கட்டிய வீட்டை, மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.16 லட்சத்துக்கு விற்கத் தயாராகிவிட்டீர்கள் என்றால், நீங்கள் செய்த தவறு எத்தகையது என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ரூ.16 லட்சத்தை வங்கியிலேயே போட்டு வைத்திருந்தால்கூட இன்று ரூ.19 லட்சமாகக் கிடைத்திருக்கக்கூடும். சரி, முடிந்தது முடிந்தபடி இருக்கட்டும்.

அடுத்து, நீங்கள் நினைக்கிறபடி வீட்டை விற்பனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. உங்கள் கிராமத்தில் 1,000 முதல் 2,000 ரூபாய்க்குள் வாடகை வீடு கிடைக்கக்கூடும் என்பதால், வீட்டை விற்பனை செய்துவிடுங்கள். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து முதலில் உங்களுக்கு இருக்கும் ரூ.3 லட்சம் கடனைத் திரும்பச் செலுத்திவிடுங்கள்.

மீதியுள்ள ரூ.13 லட்சத்தில் ரூ.8 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வையுங்கள். ரூ.5 லட்சத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகளில்   எஸ்.ட்பிள்யூ.பி (சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான்) முறையில் முதலீடு செய்யுங்கள். பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்பவை 65% பங்கு சார்ந்த திட்டங்களிலும், 35% கடன் சார்ந்த திட்டங்களிலும் செய்யப்படும் முதலீடு என்பதைத் புரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் 7% வருமானம் என்றால், ஆண்டுக்கு ரூ.56 ஆயிரம் கிடைக்கும். பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 10% வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொண்டால்,  ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். அப்படி யானால் மாதத்துக்கு ரூ8,900 கிடைக்கக்கூடும். உங்கள் பென்ஷன் தொகை ரூ24,000 மற்றும் முதலீட்டு வருமானத்துடன் நீங்கள் பற்றாக்குறை இல்லாமல் வாழ முடியும்.

ஆனால், வீட்டை விற்ற பிறகு கிடைக்கும் பணத்தில் பிசினஸ் ஆரம்பிக்கிறேன் என்றோ, வேறு ஆடம்பரச் செலவுகளோ செய்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். நீங்கள் கடந்த காலத்தில் செயல்பட்டதுபோல இல்லாமல், கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்க முடியும்.

மகனுக்குக் கடை வைக்க ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து ரூ.50 ஆயிரம் கடன் வாங்குங்கள். கடை வருமானத்திலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்க வேண்டும் என்ற பொறுப்பை மகனுக்குக் கொடுத்துவிடுங்கள். நீங்களும் கடையில் மகனுக்கு உதவியாக இருப்பதன் மூலம்  கடை வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

அடுத்து நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, செலவைக் கட்டுப்படுத்துவதுதான். மூன்று பேருக்கு நீங்கள் செய்யும் குடும்பச் செலவு அதிகம் என்றே சொல்ல வேண்டும். நிலைமைக்கு ஏற்ப கொஞ்சம் சிக்கனமாக இருக்கும்பட்சத்தில், உங்கள் பென்ஷன் தொகைக்குள்ளாகவே செலவுகளை அடக்க முடியும். இப்படிச் செய்தால் முதலீடு செய்து வைத்துள்ள தொகையை உங்கள் எதிர்காலத்துக்கும், உங்கள் மகனது எதிர்காலத்துக்கும் வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் மனைவியிடம் நிதிநிலை தொடர்பாக மனம்விட்டுப் பேசுங்கள். அவருக்கு மாதம் ரூ.5,000 கொடுத்து அதற்குள் அவருக்கான தனிப்பட்ட செலவுகளை அடக்கச் சொல்லுங்கள். இங்கே குறிப்பிட்டுள்ளவாறு நீங்கள் கவனமாகச் செயல் படாவிட்டால் 75 வயதுக்குப்பிறகு கஷ்டம் இன்னும் அதிகமாகிவிடும். உஷாராகச் செயல்படுங்கள்.

பரிந்துரைகள்:
ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.2 லட்சம், எல் அண்ட் டி புரூடென்ஸ் ஃபண்டில் ரூ.2 லட்சம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ.பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் ரூ.1 லட்சம்.”
   
குறிப்பு: பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com)  is SEBI Registered Investment advisor - Reg. no - INA200000878 


- கா.முத்துசூரியா 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 13 - கடன் சுமை... கைவிட்ட பிள்ளைகள்... எதிர்காலத்துக்கு என்ன வழி?