
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொழிலாளர்கள் என்பவர்கள் வேறு, தொழில்முனைவோர்கள் என்பவர்கள் வேறு என்றே பலரும் சிந்தித்து வந்தனர். இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்ததால், இருவரும் வெவ்வேறு விதமாக யோசித்து வந்தார்கள். அந்த இடைவெளி இப்போது வெகுவேகமாகக் குறைந்து வருகிறது. இப்போது எல்லா தொழிலாளர்களுக்குள்ளும் ஒரு தொழில் முனைவோர் இருக்கிறார். ஒவ்வொரு தொழில்முனைவோருக்குள்ளும் ஒரு தொழிலாளர் இருக்கிறார்.

இப்போது ஒரு தொழில்முனைவோர் வெற்றி பெற வேண்டுமெனில், அவரது தொழிலாளர்களும் தொழில்முனை வோரைப்போல யோசிக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியைக் பெரிய அளவில் எடுத்துக்கொண்டு செல்ல முடியும்.
இந்த விஷயத்தில், என் சிந்தனையானது இன்னும் ஒருபடி அதிகமாகவே இருக்கிறது. ஒரு தொழில் நிறுவனம் வெற்றியடைய வேண்டுமெனில், தொழில்முனைவோர் களைவிட தொழிலாளர்கள் அதிக ஈடுபாட்டுடனும், சிந்தனைத் திறனுடனும் செயல்பட வேண்டும். இது தொழில் முனைவோர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இன்றைய கார்ப்பரேட் உலகில், தொழிலாளர்களை திடீர் திடீரென வேலையிலிருந்து நீக்குகிறார்கள். தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் இல்லாமல் இருக்கும் இந்த நிலையில், ‘இது என் தொழில். நான்தான் இதைச் செய்ய வேண்டும்’ என்று தொழில்முனைவோர்களைவிட அதிகமாக யோசித்து வேலை செய்யும்போதுதான் அவர்கள் தவிர்க்க முடியாத நபராக மாறுகிறார்கள். நான் என் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களிடம் எப்போதும் இதைச் சொல்வேன். ‘உங்களுடைய சம்பள செக்கில் கையெழுத்து மட்டும்தான் நான் போடுவேன். அதில் என்ன தொகை எழுத வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்கள்’ என்று சொல்வேன்.

எனக்கு சீனத் தொழிலாளர்களிடம் மூன்று விஷயங்கள் பிடிக்கும். ரோபோக்களுக்கு இணையாகக் கடவுள் படைத்தது சீனர்களைத்தான் என அவர்களின் உழைப்பைப் பற்றி பல நாட்டவர்களும் சொல்வார்கள். அவர்கள் தேவை இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். 10 மணி வேலை நேரம் என்றால், சரியாக 10 மணிக்கு சீட்டில் இருப்பார்கள். மதியம் அரை மணி நேரம் சாப்பாட்டு இடைவேளை என்றால், சரியாக அரை மணி நேரமே எடுத்துக்கொள்வார்கள். ஆறு மணிக்கு வேலை நேரம் முடிகிறது என்றால், சரியாக ஆறு மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். காபி குடிக்க அரை மணி நேரம் வெளியே போவது, நண்பர்களுடன் தேவை இல்லாத விஷயங்களைப் பற்றி பேசுவது என எந்தக் கவனச் சிதறல்களுக்கும் இடம்தரமாட்டார்கள்.
அதேபோல், பெரும்பாலும் குண்டான சீனக்காரர்களையும் பார்க்க முடியாது. எறும்பைப் போல, அதிக சுறுசுறுப்புடனும், ஓட்டத்துடனும் இருப்பார்கள். அதனாலேயே சீனர்கள் உடல் மெலிந்தே இருப்பார்கள். குண்டாக இருந்தால் சோம்பேறிகள் என்றே சீனர்கள் கருதுகிறார்கள். தன்னை யாரும் சோம்பேறி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே அதிகமாக உழைத்து, உடலை மெலிதாக வைத்திருப்பார்கள். ஆனால், நம் ஊரில் குண்டாக இருந்தால், அவரை சோம்பேறி என்று சொல்வதைவிட, போஷாக்காக இருக்கிறான் என்றே சொல்வார்கள்.
சீனாவில் ஒரு அளவுக்கு மேல் சம்பாதித்தால் வரி கட்ட வேண்டும். தவறான வழிகளில் சென்று லாபம் ஈட்டக்கூடாது என்பதற்காகவே இந்தச் சட்டம். ஆனால், நம் நாட்டில் எவ்வளவு வேண்டு மானாலும் சம்பாதிக்கலாம் என்று இருப்பதால் தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. நம் தேவைக்கு மேல் சம்பாதிக்கும்போதுதான் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இதை சீனர்கள் சரியான முறையில் கையாண்டு வருகிறார்கள்.
நமது நாட்டின் தொழிலாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற விரும்பாததற்குக் காரணம், நமக்கு நிலையான வருமானம் தேவை; அதிக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று நினைப்பதே. அதுமட்டுமில்லாமல், பொறுப்புகளை நாம் ஏன் தேடிப்போய் எடுக்க வேண்டும்; நமக்குத் தரும்போது அதைப் பெறுவோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. பொறுப்புகள் எப்போது நம்மைத் தேடி வரும் என்று காத்திருக்கக் கூடாது. 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், யுவராஜ் இறங்கவேண்டிய இடத்தில் தோனி இறங்கி, இந்தியாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற பொறுப்பைக் கையில் எடுத்தார். இந்த மாதிரி அவரவராக முன்வந்துதான் பொறுப்பை எடுத்துக்கொண்டு நிறுவனத்தை வெற்றியை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். பொறுப்பேற்கும் எண்ணம் நம் தொழிலாளர்களுக்கு இல்லை. அந்த எண்ணம் வந்துவிட்டால், நம் தொழிலாளர்களும் தொழில்முனைவோர்களே!
தொகுப்பு: மா.பாண்டியராஜன்
(மாத்தி யோசிப்போம்)