நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?
பிரீமியம் ஸ்டோரி
News
ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?

கேள்வி பதில்

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?

வங்கியிலிருந்து நான் வாங்கிய வீட்டுக் கடன் ரூ.15 லட்சத்தில்  பாக்கி வைத்திருக்கிறேன். இந்தக் கடனைத் திரும்பக் கட்டவில்லை என்றால், என் அடுக்குமாடிக் குடியிருப்பை ஏலத்துக்கு விட்டுவிடுவதாக வங்கி அதிகாரிகள் சொல்கிறார்கள். இதனைத் தடுப்பது எப்படி?

எம்.வாசுதேவன், திருச்சி

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?என்.ரமேஷ், வழக்கறிஞர்

‘‘அடுக்குமாடிக் குடியிருப்பை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் பெற்றுள்ளீர்கள். கடன் தவணையைச் செலுத்தவில்லை. கடன் தொகையைத் திரும்பப் பெற, வங்கியானது கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

1. விதிமுறைகளின்படி, வாராக் கடனாக (NPA) முடிவுசெய்து, உங்கள் கடன் கணக்கு மூடப்பட்டதாகவும், உடனே மொத்தக் கடன் தொகையையும் செலுத்துமாறும் வங்கியானது தங்களுக்கு அறிவிப்பு அனுப்பலாம். கடன் தவணையைத் திரும்பச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்துக்கான காரணத்தை விளக்கி நீங்கள் பதில் அளிக்கலாம். அல்லது, கடனைத் திரும்பச் செலுத்த மேலும் கால அவகாசம் கேட்டுப் பதில் கொடுக்கலாம். தங்கள் பதில் ஏற்புடையதாக இருந்தால், வங்கி அதனையேற்று, கடன் கணக்கை மீண்டும் முறைப்படுத்தி வாய்ப்பு வழங்கலாம்.

2. அல்லது சர்ஃபாசி (SARFAESI) சட்டப்படி, கடன் தொகைக்காக, தாங்கள் அடமானம் வைத்த சொத்தை நேரடியாகக் கையகப் படுத்துவதற்கும், ஏல விற்பனைக்கும் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதைத் தடுக்க நீதிமன்றத்தை / கடன் வசூல் தீர்ப்பாயத்தை நாடலாம். கடனைத் திரும்ப செலுத்தக் கால அவகாசம் பெறலாம். ஆனால், வாங்கிய கடனைச் செலுத்தாமல், சொத்து ஏலத்துக்கு வருவதைத் தடுக்க முடியாது.”

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம், குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பங்குச் சந்தையில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ள விரும்புகிறேன். நல்ல பங்குகளைப் பரிந்துரைக்க முடியுமா?

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?

அருண்குமார் தியாகராஜன், சென்னை

பி.ராமசுவாமி, தலைமை நிர்வாகி, ஈஸி இன்வெஸ்ட்மென்ட்

“பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது என முடிவு செய்துவிட்டால், முதலில் பத்து ஆண்டுகள் நிலைத்து நிற்க வாய்ப்புள்ள தொழில்களை ஆராய்ந்து, அவற்றில் முதலீடு செய்ய நீங்கள் பரிசீலிக்கலாம்.

உதாரணத்துக்கு, வீட்டு கடன் வழங்கும் எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance), ஃபெவிகால் தயாரிக்கும் பிடிலைட் இண்டஸ்ட்ரிஸ் (Pidilite Industries), பெயின்ட் தயாரிக்கும் ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints), கட்டுமானத் துறையைச் சேர்ந்த எல் அண்ட் டி (L&T), வாகனங்கள் தயாரிக்கும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) அல்லது எம் அண்ட் எம் (M&M) போன்ற பங்குகளைப் பரிசீலிக்கலாம். இந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை உள்பட அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, முதலீட்டு முடிவை எடுங்கள்.’’

இ.டி.எஃப்-ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபங்கள் என்னென்ன?

நாகராஜன், கும்பகோணம்.

ஏலத்தில் வீடு... எப்படித் தடுப்பது?அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்.

``இ.டி.எஃப் என்பது பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் ஃபண்ட் (Exchange Traded Fund -ETF). எப்படி ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பல நிறுவனங்களின் பங்குகள் இணைந்திருக்கின்றனவோ, அதேபோல இ.டி.எஃப்-லும் வெவ்வேறு நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்க்கப் பட்டிருக்கும். இ.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, ஃபண்டை நிர்வகிப்பவர்களின் தலையீடு இருக்காது. ஒருதலைபட்சம் இல்லாமல் இருக்கும்.

முதலீட்டு முடிவை எடுப்பதற்கு பெரிய ஃபண்ட் மேனேஜர் எவரும் தேவையில்லை.   இ.டி.எஃப் வருமானம் அந்த இ.டி.எஃப்-ல் உள்ளடங்கிய நிறுவனங்களைப் பொறுத்தே இருக்கும்.

இ.டி.எஃப்-ஐ பொறுத்தவரை, அது நிஃப்டி 50, பிஎஸ்இ 100 அல்லது பேங்க் இண்டெக்ஸ்போன்ற பெரிய இண்டெக்ஸ் சார்ந்துதான் இ.டி.எஃப் முதலீடு இருக்கும் என்பதில்லை. ஃபண்ட் மேலாளர் பக்க சார்பு இல்லை. இடிஎஃப் உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட  இண்டெக்ஸின்  வருமானத்துக்கும் இ.டி.எஃப் வருமானத்துக்கும் உள்ள வித்தியாசம் குறைவாக இருக்க வேண்டும் (Low Tracking Error), உடனடியாக பணமாக்கும் சாத்தியம் இருக்க வேண்டும் (High Liquidity). இது போன்ற இடிஎஃப்-களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.