
BIZ பாக்ஸ்
புத்தாக்கம் படைத்தவர்களுக்கு கவின்கேர் விருது!
புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தாக்கம் செய்பவர்களுக்கு கவின்கேர் நிறுவனம், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனுடன் இணைந்து, ‘சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதை’ கடந்த ஆறாண்டுகளாக வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான இனோவேஷன் விருதுக்கு 125 விண்ணப்பங்கள் வந்தன. அதில் மூன்று சிறப்பான இனோவேஷன் முயற்சிக்கு விருது வழங்கப்பட்டது. குறைந்த எடையுடன் கூடிய, நிலையான உயிரி உரத்தை உருவாக்கிய டாக்டர் கவிதாவுக்கும், பிளாஸ்டிக் கழிவினைக் கொண்டு தயார் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த ஜி.வெங்கட சுப்ரமணியனுக்கும், ரத்தம் எடுக்கும் நரம்பினை எளிதில் கண்டுபிடித்த பொன்ராமுக்கும் ‘சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது’ வழங்கப்பட்டது.

திடீர் விலையிறக்கத்தைக் கண்ட பிட்காயின்!
ஆன்லைன் கரன்ஸியான பிட்காய்னின் விலை சமீப காலமாக கடும் ஏற்ற, இறக்கத்து டன் வர்த்தகமாவதைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறார்கள் அதில் முதலீடு செய்திருப்பவர்கள். கடந்த 2-ம் தேதி அன்று ஐந்தாயிரம் டாலருக்குக் கொஞ்சம் குறைவாக இருந்த பிட்காய்ன், 5-ம் தேதி அன்று 4,080 டாலருக்கு இறங்கியது. பிற்பாடு மீண்டும் விலை உயர்ந்தது.
இதற்கிடையே, ஐ.பி.ஓ போல, சீனாவில் பிட்காய்ன் சி.பி.ஓ (Initial Coin Offering) வெளியிடப்பட்டது. அரசின் அனுமதி பெறாமல் வந்திருக்கும் இந்த சி.பி.ஓ-வில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி கலந்துகொண்டால் தண்டனை நிச்சயம் என எச்சரித்தது சீன அரசாங்கம். நம் நாட்டில் பிட்காய்ன் வர்த்தகத்துக்கு அனுமதியில்லை என்றாலும், பல இணையதளங்கள் அந்த வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.

மோடி தந்த பரிசு!
கடந்த வாரத்தில் பிரதமர் மோடி மியான்மர், சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். மியன்மருக்குச் சென்றிருந்தபோது அந்த நாட்டு தலைவர் ஆன் சான் சூ கியைச் சந்தித்தார். இவர் 1986-ம் ஆண்டு சிம்லாவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடீஸ்’ நிறுவனத்தின் கீழ் டாக்டர் பட்டத்துக்கான ஆய்வைச் செய்தார். இந்த ஆய்வுக்காக அவர் அளித்த ரிசர்ச் புரபோசலின் ஒரிஜினல் காப்பியை ஆன் சூ கிக்குப் பரிசாக அளித்தார் மோடி. அதைப் பார்த்த ஆன் சூ கி பழைய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டார்!
முடங்கிய ஷெல் கம்பெனிகளின் கணக்கு!
பெயரளவில் இயங்கும் போலி நிறுவனங்களை (Shell companies) ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் குறியாக இருக்கிறது. ஏறக்குறைய இரண்டு லட்சம் எண்ணிக்கையிலான போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருக்கிறது மத்திய அரசாங்கம். ஒரே முகவரியில் ஏறக்குறைய 400 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இந்தியாவிலேயே அதிகமான அளவில் போலி நிறுவனங்கள் பதிவாகியிருப்பது மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில்தான். இந்த நிறுவனங்களுக்கு கடன் ஏதும் தருவதாக இருந்தால், வங்கிகள் உஷாராக ஆராய்ந்தறிந்து செயல்பட வேண்டும் என நிதிச் சேவைத் துறை வங்கிகளுக்கு எச்சரித்திருக்கிறது!

அரசியல் கட்சிகளின் ‘ரகசிய’ வருமானம்!
கடந்த 2015-16-ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,033 கோடி வருமானம் கிடைத்தது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்குக் கிடைத்த ரூ.832 கோடியில் ரூ.647 கோடி யார் தந்தது என்பது ‘ரகசிய’மாகவே இருக்கிறது. பா.ஜ.க-வுக்குக் கிடைத்த ரூ.438 கோடியில் ரூ.132 கோடியும், காங்கிரஸுக்குக் கிடைத்த ரூ.193 கோடியில் ரூ.68 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த ரூ.84 கோடியில் ரூ.22 கோடியும் செலவழிக்கப்படாமலேயே உள்ளன. பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் வரவைவிட அதிகம் செலவழித்துள்ளன!
உலக அளவில் 1,102 மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் முதல் 200 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 62 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. முதல் 30 இடங்களில் சீனாவின் இரண்டு உயர்கல்வி நிறுவனங்கள் பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்தப் பட்டியலில் 250 முதல் 800 இடங்களை நம் நாட்டிலுள்ள 10 உயர் கல்வி நிறுவனங்களே பெற்றுள்ளன.
1,50,785 - கடந்த 2016-ல் சாலை விபத்துகள் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை. ஒரு மணி நேரத்தில் 17 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனர்.
ரூ.8,000 - 10,000 கோடி - 2018 முதல் 2022 வரை ஐ.பி.எல் கிரிக்கெட் விளம்பரம் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படும் தொகை!