நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!

பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன்...

பாஜக ஆட்சியில் அதிரடி அறிவிப்புகளுக்கும், மாற்றங்களுக்கும் பஞ்சமில்லை. மத்திய அரசு தற்போது அமைச்சரவையில் கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கிறது. இந்த அமைச்சரவை மாற்றங்களால் என்னென்ன பங்குகள் பலனடையும் என்று பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.   

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!

“அமைச்சரவை மாற்றத்தில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், யாரெல்லாம் செயல்திறனுடன் செயலாற்றவில்லையோ  அவர்களெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில வருடங்களே இருக்கும் நிலையில்,  இந்த நடவடிக்கையைப் பிரதமர் மோடி எடுத்திருந்தாலும், மிக முக்கியமான துறைகளில் அமைச்சர்கள் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய  விஷயம். அதிலும் பாதுகாப்புத் துறையிலும், ரயில்வே துறையிலும் அமைச்சர்கள் மாற்றப்பட்டிருப்பதை மிக முக்கியமான மாற்றமாகவே பார்க்க வேண்டும்.

நம்முடைய பாதுகாப்புத் துறைக்கு இதுவரை சரியானவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. மேலும், தற்போது நம்முடைய இந்திய எல்லைகளில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. ஒருபக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா எனத் தொடர்ந்து ஊடுருவல்களும், அச்சுறுத்தல்களும், அவ்வப்போது தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. சமீபத்தில்கூட சீனாவுடன் டோக்லாம் பிரச்னை உருவெடுத்துள்ளது. ஒருபக்கம் பாகிஸ்தானுடன் எல்லைப் பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடந்துவரும் நிலையில், சீனாவும் நம்முடன் சண்டைக்கு வந்தால், அதைச் சமாளிக்க முடியாதபடி இருந்துவிடக் கூடாது. தென் சீனக் கடல் எல்லையும் பிரச்னையில்தான் இருக்கிறது. எனவே, இன்றைய நிலையில், பாதுகாப்புத் துறை என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், உபகரணங்கள் போன்றவற்றை முடிந்தவரை ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் செயல்படுத்தினால்தான் அந்தத் துறை முன்னேற்றம் அடைய முடியும். ஏனெனில், உலகின் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 13% ஆகும். மக்களவையில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, 2013 - 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் நமது நாடு ரூ.82,496 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. எனவே, பாதுகாப்புத் துறையில் பெரிய அளவிலான உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!



மேலும், கடந்த 20 வருடங்களாகவே பாதுகாப்புத் துறைக்காகப் பெரிய அளவில் மத்திய அரசு முதலீடு செய்யவில்லை. கடந்த காலத்தில் இருந்த எந்தவொரு அமைச்சரும் அதைப் பெரிதாக முன்னெடுக்கவும் இல்லை. இதுவரை பாதுகாப்புத் துறையில் நடந்த டீல்களில்கூட ஊழல்கள் நடந்து சர்ச்சைகளைக் கிளப்பின. எனவே, இதன் அமைச்சர் நேர்மையானவராக இருக்க வேண்டும், அதேசமயம், இப்போதைய தேவைக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளுக்குத் திட்டமிட வேண்டும். அதற்குச் சரியானவராக நிர்மலா சீதாராமன் இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்திருக்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிக்கு மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா, இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்குப்பின், முழுநேரப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுவரை நிதி அமைச்சர் அருண்  ஜெட்லி கூடுதலாகக் கவனித்துவந்த இந்தத் துறைக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், நிர்மலா சீதாராமன் இதுவரை வகித்துவந்த வணிகத் துறை அமைச்சர் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் நமக்குத் தேவையான முதலீடு களை, தொழில்களைச் சிறப்பாக இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுவரை அவர் சிறப்பாகச் செயல்பட்டதால், இந்தத் துறையிலும் அவர் சிறப்பாகச் செயல்படுவார் எனலாம்.   

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!

பாதுகாப்புத் துறையில் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கள மேலாண்மை உபகரணங்கள், ஆர்டிலரி துப்பாக்கிகள் மற்றும் டாக்டிக்கல் கம்யூனிகேஷன் உபகரணங்கள் போன்றவை மிகவும் அவசியமாக உள்ளன. இவற்றை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்க முடிந்தால், அவற்றுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.

அடுத்த பத்து வருடங்களில் இந்தியப் பாதுகாப்பு துறையின் சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலராக இருக்குமென்று கூறப்படுகிறது. அவற்றில் 30 சதவிகித ஆர்டர்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. 

மேக் இன் இந்தியா திட்டத்தில் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த தனியார் நிறுவனங்கள் இதுவரை எந்தவொரு ஆர்டரையும் பெறவில்லை.  இனி அதற்கான வாய்ப்புகள் உருவாக உள்ளன. அதன்படி பார்த்தால், இதனால் பலனடையும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பாரத் எர்த் மூவர்ஸ், ஆக்சிஸ்கேட்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜீஸ், எல் அண்ட் டி, பாரத் ஃபோர்ஜ், கொச்சின் ஷிப்யார்ட் ஆகியவற்றைச் சொல்லலாம்.    

கவனிக்க வேண்டிய ராணுவத் துறை பங்குகள்!

எல் அண்ட் டி நிறுவனம் ஏற்கெனவே 700 மில்லியன் டாலருக்கான ஆர்டரைப் பெற்றிருக்கிறது. எல் அண்ட் டி இன்ஃபான்ட்ரி காம்பேட், வாகனங்களுக்கான தகுதியை முன்கூட்டியே பெற்றிருப்பதால், அதிக கான்ட்ராக்ட்டுகள் இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. 

மேலும், ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால், எலெக்ட்ரிஃபிகேஷன் என்பது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை அதன் புதிய அமைச்சர் பியூஷ் கோயல் செயல்படுத்தினால் சீமன்ஸ், ஏபிபி, டெக்ஸ் மேக்கோ போன்ற ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்கள் பலன் அடையும் வாய்ப்புள்ளது. கங்கையைச் சுத்தப்படுத்தும் க்ளீன் கங்கா திட்டத்துக்கு நிதின் கட்கரி நியமிக்கப்பட்டி ருப்பதும் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தத் திட்டத்தினால் வாப்டெக், எல் அண்ட் டி உள்ளிட்டவை நல்ல பலனை அடையும். வாப்டெக் பங்கு மதிப்பு 20% வரை உயர வாய்ப்புள்ளது.

பாதுகாப்புத் துறையினால் பலன்பெறும் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ்

இந்த நிறுவனம் ரேடார் உபகரணங்கள், நைட் விஷன் டிவைஸ், இன்டக்ரேட்டட் எலெக்ட்ரானிக் வார்ஃபேர் சிஸ்டம், ஆகாஸ் ஏவுகணை சிஸ்டம், கோஸ்டல் சர்வைலன்ஸ் சிஸ்டம், துப்பாக்கிச் சுடுதல் கன்ட்ரோல் சிஸ்டம் எனப் பல்வேறு வகையான பாதுகாப்புத் துறை உபகரணங்களை உற்பத்தி செய்துவருகிறது. தற்போது பி.இ.எல் நிறுவனத்துக்கு ரூ.41,000 கோடி மதிப்பிலான ஆர்டர் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் ரூ.8,800 கோடி மதிப்பிலான ஆர்டரை நிறைவு செய்திருக்கிறது.  ஆர்டர்களை நிறைவு செய்ய நிச்சயம் மூன்று வருடங்களாகலாம். இந்த மூன்றாண்டு காலத்தில் இந்தப் பங்கு சுமார் 50% வரை உயர வாய்ப்புண்டு. ஆந்திராவில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் ஏற்றுமதியும் நன்றாகவே இருக்கிறது.

எல் அண்ட் டி

இந்த நிறுவனத்துக்குப் பாதுகாப்புத் துறை தொடர்பான ஆர்டர்கள் பெரிய அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் க்ளீன் கங்கா, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களிலும் இந்த நிறுவனத்துக்கு ஆர்டர்கள் கிடைக்கலாம். உட்கட்டமைப்பு மற்றும் இன்ஜினீயரிங்கில் ஆரம்பித்து பாதுகாப்புத் துறை, ரோபாட்டிக்ஸ் வரை பல விஷயங்களில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனம், இந்த அமைச்சரவை மாற்றத்தினால் பல வகையிலும் நன்மை அடையும். 

கொச்சின் ஷிப்யார்ட்


இந்த  நிறுவனம், மேக் இன் இந்தியா திட்டத்தினால்  நிச்சயம் நன்கு பலனடையும். சமீபத்தில் ஐ.பி.ஓ வந்து அமோக வரவேற்பைப் பெற்ற இந்த நிறுவனத்துக்கு நல்ல வாய்ப்புகள், பாதுகாப்புத் துறையில் எடுக்கப்படும் முடிவுகளால் கிடைக்கலாம். 

பாரத் ஃபோர்ஜ்

இந்த நிறுவனம் பவர், ஆயில் மற்றும் கேஸ், ஏரோ ஸ்பேஸ், மரைன், ரயில்வே, கட்டமைப்பு மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தீவிரமாக பிசினஸ் செய்து வருகிறது. இந்தத் துறைகள் சார்ந்து அரசு எடுக்கும் எந்தவொரு திட்டங்களிலும் நிச்சயம் இதன் பங்கு இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

ஆக்சிஸ்கேட்ஸ் இன்ஜினீயரிங் டெக்னாலஜீஸ்


இந்த நிறுவனம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை, ஆட்டோமோட்டிவ் உள்ளிட்ட துறைகளில் தனது தொழில்களைச் செய்துவருகிறது. முக்கியமாக, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஏர்க்ராஃப்ட் ரெகக்னிஷன் சிஸ்டம் மற்றும் ரேடார் ஆகியவற்றை உற்பத்தி செய்துவருகிறது. பாதுகாப்புத் துறையில் எடுக்கப்படும் மேக் இன் இந்தியா திட்டங்களினால் இந்நிறுவனமும் பலனடையும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், நிச்சயம் இந்த நிறுவனப் பங்குகள் நன்கு செயல்பட்டு, நல்ல லாபம் தரும்!

ஜெ.சரவணன்