
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
ஜெ.அமல்ராஜ், சென்னை.
நான் கீழ்கண்ட ஃபண்டுகளில் மாதம் ரூ.11,000 டைரக்ட் முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீடு செய்துவரும் இந்த ஃபண்டுகளெல்லாம் சரியானவைதானா?
எஸ்பி.ஐ மேக்னம் காமா ஃபண்ட் - ரூ.1,000, ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் பிஇ ரேஷியோ (ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) - ரூ.1,000, ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (குரோத்) - ரூ.2,000, ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (டிவிடெண்ட்) - ரூ.2,000, ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஃபண்ட் - ரூ.4,000, டி.எஸ்.பி. பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்ட் (ரெகுலர் பிளான் - குரோத்) - ரூ.1,000

‘‘நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடவில்லை. உங்களின் முதலீட்டிற்கு ஒரு நோக்கம் இருக்கும்போது, அந்த முதலீட்டுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது. ஓய்வுக்காலம், குழந்தைகள் நலன், சொத்து சேர்ப்பு என ஏதாவதொரு நோக்கத்துக்காகத்தான் முதலீடு செய்வீர்கள். அது எதற்காக என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். நோக்கத்தைச் சார்ந்து முதலீடு செய்யும்போது முதலீட்டின்மீதான பிடிப்பும், நீங்கள் செலுத்தக்கூடிய கவனமும் இன்னும் அதிகரிக்கும். நோக்கம் சாராத முதலீட்டுத் தொகையை வீண் செலவுகளுக்குப் பயன்படுத்த நேரிடலாம் என்பதை முதலீட்டாளர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் மொத்தம் ஆறு ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளீர்கள். எஸ்.பி.ஐ மேக்னம் கமா ஃபண்ட், கமாடிட்டி துறையில் ஈடுபட்டு வரும் தொழில்களில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்டாகும். அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் பிஇ ரேஷியோ ஒரு ஃபண்ட் ஆஃப் ஃபண்டாகும். இதுபோன்ற ஃபண்டுகளில் ஏன் முதலீடு செய்தீர்கள் எனத் தெரியவில்லை. அதேபோல், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஒரு இ.எல்.எஸ்.எஸ் திட்டமாகும். உங்களுக்கு 80சி பிரிவின் கீழ் வரிவிலக்குத் தேவையா என்பதையும் குறிப்பிடவில்லை. அவ்வாறு தேவையில்லை எனில் அதுபோன்ற ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்டில், குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன்களில் முதலீடு செய்துவருகிறீர்கள். என்ன காரணம் என்று புரியவில்லை.
பொதுவாக, முதலீட்டாளர்கள் டைவர்ஸிபைஃடு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. நீங்கள் உங்களின் ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்கிறீர்கள் என எடுத்துக்கொள்கிறேன். அதற்கு, குறைந்தது இன்னும் பத்து வருடங்கள் உள்ளன எனவும் எடுத்துக்கொள்கிறேன். உங்கள் எஸ்.ஐ.பி அனைத்தையும் நிறுத்திவிட்டு, கீழ்காணுமாறு உங்களின் முதலீட்டை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் முதலீடு செய்யும் பருவத்தில் இருப்பதால், இரண்டு ஃபண்ட்களிலும் குரோத் ஆப்ஷனிலேயே செல்லுங்கள்.

1. பிரின்சிபல் குரோத் ஃபண்ட் – மாதத்துக்கு ரூ.5,500 2. ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் – மாதத்துக்கு ரூ.5,500.
சிவா, சென்னை.
நான் கடந்த ஒரு வருடமாக கீழ்காணும் ஃபண்டுகளில் மாதம் ரூ.36,000 செலுத்தி வருகிறேன். நீண்ட காலத்துக்கு (7-10 ஆண்டுகளில்) இந்த ஃபண்டுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்குமா?
ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ வேல்யூ டிஸ்கவர் ஃபண்ட் - ரூ.5,000, குவாண்டம் லாங்க் டேர்ம் ஈக்விட்டி - ரூ.8,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் - ரூ.5,000, டி.எஸ்.பி. பி.ஆர் மைக்ரோ கேப் - ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளுசிப் - ரூ.5,000, ரிலையன்ஸ் ஸ்மால் கேப் - ரூ.8,000.
‘‘நீங்கள் வைத்திருக்கும் ஃபண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ வேல்யூ டிஸ்கவரி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், குவாண்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி மற்றும் டி.எஸ்.பி-பி.ஆர் மைக்ரோகேப் ஆகிய நான்கு ஃபண்டுகளும் தத்தமது கேட்டகிரியில் சற்று மெதுவாகத்தான் செயல்படுகின்றன. மிரே எமர்ஜிங் புளூசிப் மற்றும் ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஆகிய இரு ஃபண்டுகளும் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, அந்த இரண்டு ஃபண்டுகளிலும் முதலீட்டைத் தொடர்ந்து கொள்ளவும். டி.எஸ்.பி மைக்ரோகேப் ஃபண்டுக்குப் பதிலாக எல் அண்ட் டி இந்தியா எமர்ஜிங் பிஸினஸஸ் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்கிக்கொள்ளவும். மீதி மூன்று ஃபண்டுகளுக்குப் பதிலாக மிரே இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.18,000-க்கு முதலீட்டைத் தொடங்கவும்.
