
நாணயம் புக் செல்ஃப்
புத்தகத்தின் பெயர்: பார்க்கிங் அப் த ராங் ட்ரீ (Barking Up the Wrong Tree)
ஆசிரியர்: எரிக் பார்க்கர் (Eric Barker)
பதிப்பாளர்: ஹார்ப்பர்காலின்ஸ்
வெற்றிக்கான தாரக மந்திரம் எது, வெற்றியை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதுமே நமக்கு உண்டு. எரிக் பார்க்கர் எழுதிய ‘பார்க்கிங் ஆஃப் அ ராங் ட்ரி’ என்கிற புத்தகத்தில் அதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

வெற்றி பெற்றவர்களிடமிருந்து அறிவியல் ரீதியாக எது நம்மைப் பிரிக்கிறது, வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை மிக ஆவலுடன் படித்தும், நம்மைச் சுற்றியிருக்கும் வெற்றி பெற்றவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்தும், அவர்களைப் போலவே நம் செயல்பாடுகளைப் வடிவமைத்துக்கொண்டு முயன்றாலுமே ஏன் அவர்களைப் போல் நமக்கு வெற்றி கிடைக்க மாட்டேன் என்கிறது எனப் பலமுறை ஆச்சர்யப்பட்டிருப்போம்.
‘அவுட் சைட்’ என்னும் பத்திரிகை, அமெரிக்காவை சைக்கிளில் சுற்றிவரும் ‘ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா’ என்னும் ஒரு போட்டிக்கு வருடா வருடம் ஏற்பாடு செய்கிறது. இந்தப் போட்டியின் போது தொடர்ந்து சைக்கிள் ஓட்ட வேண்டும். பங்கேற்கும் நபர்கள் அதிக பட்சமாக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தூங்கினால் அது பெரிய விஷயம்.
போட்டியின் நான்காவது நாளில் முன்னணியில் இருக்கும் போட்டி யாளர்கள் மத்தியில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரையே வித்தியாசம் இருக்கும். ஓய்வு, தூக்கம் போன்றவற்றை ஒதுக்க ஆரம்பித்தால், அதிக சோர்வும், உற்சாக மின்மையும் வந்து தாக்க ஆரம்பிக்கும்.
முன்னணியில் இருக்கிறோம்; நமக்கும், மற்றவர்களுக்கும் குறைந்த வித்தியாசமே இருக்கிறது என நினைத்து பயந்து, ஓய்வையும், தூக்கத்தையும் தள்ளிப் போடுபவர்களுக்குப் பின்வரும் நாள்களில் நரகவேதனைதான். இதுபோல் செய்தவர்கள் இருவர் மரணம்கூட அடைந்துள்ளனர்.
2009-ம் ஆண்டு நடந்த போட்டியில் ஜூர் ராபிக் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு இதுவரை நாம் பார்த்த எந்த விஷயமும் ஒரு பொருட்டாக இல்லை. ஏனைய போட்டியாளர் களைவிட அரை நாள் முன்னணியில் இருந்து வெற்றி பெற்றார். ஒருமுறை அல்ல, ஐந்துமுறை அவர் அப்படி வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டில் 11 மணி நேர முன்னணியில் வெற்றி பெற்றார். ஏதாவது ஒரு போட்டியில் முதலாமவர் வெற்றி பெற்றபின், அரை நாள் கழித்து இரண்டாம் இடத்துக்கான போட்டியாளர் எல்லையைத் தொடுவதைப் பார்த்திருக்கிறீர் களா? அது எப்படி ராபிக்குக்கு மட்டும் சாத்தியமானது..?

அவரை ஆராய்ந்து பார்த்தால், சாதாரணமாக விளையாட்டு வீரர் ஒருவரின் உடலமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியேதான் இருந்தது. அவர் பெரிய அதிர்ஷ்டக்காரர் என்றும் சொல்லிவிட முடியாது. தலை சிறந்த பயிற்சி தரும் ஆசிரியரிடம் பயின்றாரா என்றால், அதுவும் கிடையாது. ஆனால், ஜெயிக்க வேண்டும் என்கிற பைத்தியம் (சித்தப்பிரமை) பிடித்தவர் அவர். போட்டியின் பாதியில் சைக்கிளைத் தூக்கி எறிந்துவிட்டு, பின்னால் வரும் காரை நோக்கி நடந்து ஏறிக் கொள்ள முயற்சி செய்வாராம். என்னை யாரோ துப்பாக்கியை வைத்துக்கொண்டு துரத்துகிறார்கள் எனப் பிதற்றுவாராம். பிறகு எப்படி ஜெயித்தார்?
ஒரு செயல்பாட்டில் வெற்றி குறித்த மனத்தோற்றத்தை உண்டாக்கிக்கொள்ளுதல், சித்தப்பிரமை பிடித்தல் போன்றவை வெற்றிக்கான மிகப்பெரும் காரணிகளாக மாறிவிடுகின்றன. அதுவும் இதுபோன்ற உடல் செயல்பாடுகளால் செய்து வெல்லவேண்டிய போட்டிகளின் பாதையில் இருக்கும் வலிகள் தெரிவதில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வெறி பிடித்து எனப் பிரமை பிடித்தவர்கள் செய்யும் குணாதிசயங்கள், போட்டியாளர்களின் உடலின் சாதாரண திறனை சூப்பர்திறனாக மாற்றி வெற்றி பெறச் செய்கிறது என்று சொல்கின்றன ஆய்வுகள் என்கிறார் ஆசிரியர்.
எந்தவொரு காரியத்தையும் பாதுகாப்பாகவும், நமக்குச் சொன்னதை மட்டும் செய்வோம் என்றும், செய்யும் போது பெரிய வெற்றி பெற வாய்ப்பில்லை. அமெரிக்காவில் பள்ளிகளில் பட்டமளிப்பின் போது, அந்த வகுப்பில் இரண்டாவது நிலையில் இருக்கும் மாணவன் அந்த பட்டமளிப்பு நிகழ்வில் ஆரம்ப உரையையும், முதல் நிலையில் இருக்கும் மாணவன் அந்த நிகழ்வின் நன்றி நவிழலையும் செய்வார்களாம்.
பாஸ்டனில் ஒரு கல்லூரியில் இருக்கும் ஆராய்ச்சியாளர் 81 ஆரம்ப உரை மற்றும் நன்றி நவிழல் பணியைச் செய்த முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வந்த மாணவர்களை ஆராய்ச்சி செய்தாராம். இதில் 60% பேர் கல்லூரிப் படிப்பை நல்ல மதிப்பெண்களோடு முடித்தார்கள். 90% பேர் வேலைக்குச் சென்றார்கள். அதில் 40% பேர் உயர்ந்த பதவியையும் அடைந்தார்கள். அவர்கள் அனைவருமே தொடர் உறுதி கொண்டவர்களாகவும், நம்பகத்தன்மைக்குப் பெயர் பெற்றவர்களாகவும், மற்றவர் களுடன்அனுசரித்து நடந்துகொள்பவர்களாகவும், நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகவும் இருந்தார்களாம்.
சரி, இவர்களில் எத்தனை பேர் தாங்கள் இருக்கும் துறையைப் புரட்டிப்போடும் அளவுக்கான செயலையும், உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கான சாதனையையும் செய்தார்கள் என்று பார்த்தால், ஒருவருமே இல்லை. மேம்போக்கான பார்வையில் பார்த்தால், அவர்கள் செய்யும் பணியில் அவர்கள் தேவை யான அளவுக்கு வெற்றியை அடைந்திருந்தார்கள்.
நல்ல மார்க் எடுத்தவர்கள், நம்பர் ஒன் மற்றும் நம்பர் டூ மாணவர்கள் ஏன் சாதிக்கவில்லை என்கிற கேள்விக்குப் பதில் தேடினால் கிடைப்பது இரண்டு காரணங்கள். பள்ளிகள் கிரேடுகளை வழங்க உபயோகப்படுத்தும் அளவுகோல்கள் என்னென்ன?
தொடர்ந்து நன்றாக படிக்க வேண்டும் (மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரியான தேர்வுகள்), நல்லொழுக்கமும், பணிவும், சட்டதிட்டங்களை மதித்தும் நடக்க வேண்டும் என்பது போன்ற காரணிகளை வைத்துத்தான்.
இவை எதைக் காட்டுகிறது?
நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனோ அல்லது மாணவியோ ஒரு சிஸ்டத்தை நல்லபடியாக அனுசரித்து நடப்பார்கள் என்பதையே. கடின உழைப்பாளியாக இருக்கும் மாணவர்களே இந்தப் பட்டியலில் வருவார்களே தவிர, ஸ்மார்ட்டான மாணவர்கள் இந்தப் பட்டியலில் வருவதற்கான வாய்ப்பே இல்லை.
ஆசிரியர் எதிர்பார்ப்பதைக் கொடுத்து நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்வதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். நன்கு பிழைக்கத் தெரிந்தவர்களாகவே இவர்களை வகைப்படுத்த முடியுமே தவிர, சாதனையாளர்களாக வகைப்படுத்த முடியாது இல்லையா? பிழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக்கொள்வானே தவிர, சாதனை செய்ய மாட்டான்.
இரண்டாவது காரணம், பள்ளிகள் முதலாவது மற்றும் இரண்டாவது என வகைப்படுத்தும் மாணவர்கள், பள்ளிகள் எதிர்பார்க்கும் பொதுவான குணாதிசயங்களை ஒருமித்து கொண்டிருக்கும் மாணவர்களையேயாகும். உதாரணத்துக்கு, கணக்குப் பாடத்திலும், சரித்திரத் திலும் ஒரே மாதிரியான மதிப்பெண்ணைப் பெற வேண்டும்.
எனக்கு கணக்கு மட்டும் நல்லா வரும் என்றால், ‘செல்லாது... செல்லாது’ என்பதுதான் பள்ளியின் பதிலாக இருக்கும். எல்லா நல்ல பண்பும் கொண்டிருக்கும் ஒருவர், எதிலும் எல்லை மீற மாட்டார். வெற்றியைக் குவிக்க முக்கியமான தேவை எல்லையைத் தாண்டி செல்வது. அதையும் அவரால் செய்ய முடியாது என்பதைத்தான்.
700 அமெரிக்க மில்லியனர்களின் பள்ளிப் படிப்பின் மதிப்பெண்களை ஆராய்ந்ததில், அவர்களுடைய ஜி.பி.ஏ மதிப்பெண் சராசரியாக 2.9 என்ற அளவிலேயே இருந்தது என்பதைக் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக இங்கே சொல்கிறார் ஆசிரியர்.
எடுத்த காரியத்தினை, கொடுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முடிப்பவர்கள் காரியத்தை முடிப்பார்கள். சட்டத்தை மீறுபவர்களே எடுத்த காரியத்தில் சாதிப்பார்கள் என்கிறார் ஆசிரியர்.
ஒரு வெற்றி என்பது பல வெற்றிகளுக்கு வழிவகை செய்யக்கூடியது. ஒரு வெற்றி நமக்கு கைகூடியபின்னரே நாம் அதிக உழைப்பு தேவைப்படுகிற, அடுத்த வெற்றி பெறக்கூடிய காரியத்தைக் கையில் எடுக்கிறோம்.
வெற்றி பெறுவதன் சூட்சுமத்தைக் கற்றறிந்துகொள்வதுதான் இன்றைய தேதியில் தேடிச் செல்லும் விஷயமாக இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சாரம்சத்துடன், மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.
- நாணயம் டீம்