
BIZ பாக்ஸ்
ஜாக்சன் போல ஆடிய ஜாக் மா!

அலிபாபா நிறுவனத்தின் 18-ம் ஆண்டு கொண்டாட்டம், சில நாள்களுக்கு முன்பு ஹாங்ஷோவ் நகரில் நடந்தது. இந்தக் கொண்டாட்டத்தில் அலிபாபாவின் தலைவர் ஜாக் மா, மைக்கேல் ஜாக்சன் போல உடை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடியதைக் கண்டு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உற்சாகம் அடைந்தார்கள். மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற பாடலான ‘டேஞ்சரஸ்’, ‘பில்லி ஜான்’ ஆகிய பாடல்களுக்கு மைக்கேல் மாதிரியே உடை அணிந்துகொண்டு ஆடியதுதான் ஆச்சர்யம். ஜாக் மாவைப் பொறுத்தவரை, இப்படி ஆடுவது புதிய விஷயம் அல்ல. கடந்த 2009-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் 10-ம் ஆண்டு கூட்டத்திலும் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஷெல் கம்பெனி இயக்குநர்கள்!
வர்த்தக விவகாரத் துறை அமைச்சகம், சமீபத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்து முடக்கியது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தப் போலி நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்த 1,06,578 பேரைத் தகுதி நீக்கம் செய்திருக்கிறது இந்த அமைச்சகம். இந்த இயக்குநர்கள் இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த நிறுவனத்திலும் இயக்குநர்களாக இருக்க முடியாது என்பது முக்கியமான விஷயம். கம்பெனி பதிவு அலுவலகத்தில் இதுவரை 13 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. இதில் இரண்டு லட்சம் நிறுவனங்கள் போலி நிறுவனங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து 11 லட்சம் நிறுவனங்கள் பதிவுப் பட்டியலில் உள்ளன.
பணிக்கொடைக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு!
பணிக்கொடைக்கான உச்சவரம்பை, தற்போதுள்ள ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக மத்திய அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது. இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். பணவீக்கம் மற்றும் சம்பள உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் சொல்லி இருக்கிறது. இந்த அறிவிப்பைக் கேட்டு பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், நிறுவனங்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளன.

விப்ரோ பிரேம்ஜி செய்த ரூ.150 கோடி முதலீடு!
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி, தனிப்பட்ட முறையில் சில நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில், பெங்களூருவில் உள்ள வைல்ட்கிராஃப்ட் நிறுவனத்தில் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) முதலீடு செய்திருக்கிறார்.
இந்த நிறுவனம் சாகசப் பயணங்களுக்கான பொருள்களான காலணிகள், ஜாக்கெட்டுகள், தூங்கும் பைகள், டென்டுகள் என பலவற்றையும் விற்பனை செய்கிறது. ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை இந்த நிறுவனம் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறதாம்.

ஒலிம்பிக் போட்டியின் அடுத்த களம்!
2020-ல் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடக்கப்போகிறது. அதற்கடுத்து 2024-ல் பிரான்ஸிலும், 2028-ல் லாஸ் ஏஞ்சலிலும் நடக்க வாய்ப்பிருக்கிறதாம். பிரான்ஸின் லிமா நகரத்தில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டியில் மொத்தம் ரூ.50,500 கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

7,000 யூரோவுக்கு விலைபோன ஹாரி பாட்டர் கடிதம்!
ஹாரி பாட்டர் படத்தில் வரும் ஒரு கடிதம் அமெரிக்காவில் 7,000 யூரோவுக்கு விலை போயிருக்கிறது. ஹாரி பாட்டர் படத்தின் முதல் பகுதியில், மந்திர தந்திரங்களைக் கற்றுத்தரும் பள்ளியில் சேருவதற்கான அழைப்புக் கடிதமொன்று ஹாரி பாட்டருக்கு வரும். இந்தக் கடிதத்தை அமெரிக்காவில் உள்ள ப்ராப் ஸ்டோர் ஆக்ஷன் நிறுவனம் சமீபத்தில் ஏலத்துக்கு விட்டது. இந்தக் கடிதத்தை மட்டுமே 7,000 யூரோ தந்து வாங்கினார் ஹாரி பாட்டர் ரசிகர் ஒருவர்.
200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,80,000 லட்சம் கோடி) - இர்மா புயலினால் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலம் அடைந்த இழப்பின் தோராயமான மதிப்பு
ரூ.4,16,000 கோடி- பேசல் III விதிமுறைகளின்படி வங்கிகளுக்குத் தேவைப்படும் கூடுதல் மூலதனம்