
உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்
ஒரு பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்து இறக்குமதியாளரிடம் தெரிவித்து ஆர்டரைப் பெற்றபின், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை அதற்கான ஆவணங்களைத் தயார் செய்வதே.

ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஷிப்மென்டுக்குமுன் தேவையான ஆவணங்கள், ஷிப்மென்டுக்குப்பின் தேவையான ஆவணங்கள். இந்த இதழில் ஷிப்மென்டுக்குமுன் தேவையான ஆவணங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.
ஷிப்மென்டுக்குமுன் தேவையான ஆவணங்கள் (Pre-Shipment Documents)
ஷிப்மென்டுக்குமுன் எட்டு ஆவணங்களை நாம் தயார் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை இரண்டு பேர் தயார் செய்ய வேண்டும். ஒருவர், ஏற்றுமதியாளர்; மற்றொருவர், சி.ஹெச்.ஏ (Customs House Agent). தேவையான அந்த எட்டு ஆவணங்கள் இனி...
1. பெர்ஃபார்மா (Proforma) இன்வாய்ஸ்: இறக்குமதியாளர் உங்களிடம் பொருளை வாங்க விரும்புகிறார். அவருக்கு நீங்கள் உங்கள் பொருளின் விலையைத் தெரிவிக்க வேண்டும். அதற்காகத் தயார் செய்வதுதான் பெர்ஃபார்மா (Proforma). அதில் உங்கள் பொருள் பற்றிய விவரங்களும், உங்கள் முகவரி, தொடர்பு எண், இ-மெயில் போன்ற விவரங்களும் இருக்க வேண்டும்.
2. கன்ஃபர்மேஷன் லெட்டர் (Conformation letter): இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் குறித்து உறுதி பெறுவதுதான் கன்ஃபர்மேஷன் ஆவணம்.
3. சேல்ஸ் அக்ரிமென்ட் (Sales Agreement): இறக்குமதியாளரிடமிருந்து உங்கள் பொருளுக் கான ஆர்டருக்கு கன்ஃபர்மேஷன் கிடைத்தபிறகு இருவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் இந்த சேல்ஸ் அக்ரிமென்ட். ஏற்றுமதிக்கு இது மிகவும் முக்கியமான ஆவணம். இதில் ஏற்றுமதி ஆர்டர் குறித்த முழுமையான விவரங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதில்தான் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களும் இருக்க வேண்டும். இந்த ஒப்பந்த ஆவணத்தில் இரண்டு பேரின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

4. கமர்ஷியல் இன்வாய்ஸ்: அடுத்ததாக, உங்களுடைய ஆர்டருக்கான இன்வாய்ஸைத் தயார் செய்ய வேண்டும். அதில் இன்வாய்ஸ் எண், உங்கள் ஜி.எஸ்.டி எண், பொருளின் விலை, இறக்குமதியாளர் குறித்த விவரங்கள், ஷிப்மென்ட் செய்யப்படும் துறைமுகம், பேமென்ட் முறைகள் மற்றும் இன்கோடேர்ம்ஸ் (கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம்) போன்ற விவரங்கள் எல்லாம் இருக்க வேண்டும். இது, ஏற்றுமதி பிசினஸின் ‘மதர் டாக்குமென்ட்’ ஆகும்.
5. பேக்கிங் லிஸ்ட்: பின்னர் ஏற்றுமதி செய்யப் போகிற பொருள்களின் பேக்கிங் லிஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும்.
6. சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆரிஜின்: உங்கள் பொருளுக்கான பிறப்புச் சான்றிதழ். ஏற்றுமதி செய்ய இந்தச் சான்றிதழ் அவசியம். இதனை ஃபியோ (FIEO) அல்லது சேம்பர் ஆஃப் காமர்ஸ் தரப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
7. ஜி.எஸ்.பி (Generalized System of Preferences): ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், நாடுகளுக் கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தவும் சில திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், இந்த ஜி.எஸ்.பி. ஏற்றுமதி செய்யும்முன் இந்த ஆவணத்தையும் பெற்றிருப்பது அவசியம். இதை ‘எக்ஸ்போர்ட் இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சி’யிடமிருந்து பெறலாம்.
8. எஸ்.டி.எஃப் (Statuatory Declaration Form): இந்த எஸ்.டி.எஃப் ஆவணமானது ரிசர்வ் வங்கி யிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் உங்களுடைய ஷிப்பிங் பில் நம்பரைக் குறிப்பிட்டு, இந்தப் பொருளை, நான் இந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறேன்; இதற்கான பணம் இவ்வளவு நாளில் வந்துவிடும் என்று தெரிவிக்க வேண்டும்.
பிறகு ஷிப்பிங் பில் மற்றும் தேவையான பிற ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய இன்வாய்ஸ் ஆவணங்கள், பேக்கிங் லிஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை சி.ஹெச்.ஏ தரப்பிடம் கொடுத்தால், அவர் ஷிப்பிங் பில் உள்படத் தேவையான பிற ஆவணங்களையும் தயார் செய்வார். இந்தச் சமயத்தில், இன்வாய்ஸ்களின் வகைகள் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஏற்றுமதி பிசினஸில் நான்கு இன்வாய்ஸ் வகைகள் உள்ளன. 1. பெர்ஃபார்மா இன்வாய்ஸ், 2. கமர்ஷியல் இன்வாய்ஸ், 3. கன்சுலர் இன்வாய்ஸ், 4. டாக்ஸ் இன்வாய்ஸ்.
பெர்ஃபார்மா இன்வாய்ஸ் தயார் செய்யும் போது உங்கள் ஸ்டாக்கில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், கமர்ஷியல் இன்வாய்ஸ் தயார் செய்யும்போது உங்களுடைய ஸ்டாக்கில் மாற்றம் இருக்கும். சில நாடுகளில் கமர்ஷியல் இன்வாய்ஸ் வேண்டும் என்பார்கள். சில நாடுகளில் ஒரிஜினல் இன்வாய்ஸ் வேண்டும் என்பார்கள். அனைத்துமே ஒரிஜினல் இன்வாய்ஸ் தான். ஆனால், இங்கு குறிப்பிடப்படுவது, இன்வாய்ஸ் ஆவணத்தில் ஒரிஜினல் என்ற சீல் வைத்துத் தயார் செய்வதுதான் ஒரிஜினல் இன்வாய்ஸ் ஆகும். இந்த இன்வாய்ஸ்கள் அனைத்துமே டாலர் மதிப்பில்தான் குறிப்பிடப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி நடைமுறையில், நீங்கள் அனுப்பும் பொருளுக்கு டாக்ஸ் இன்வாய்ஸ் தயார் செய்ய வேண்டும். நீங்கள் அனுப்பும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லையெனில், டாக்ஸ் இன்வாய்ஸில் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், நீங்கள் அனுப்பும் பத்து பொருள்களில் ஒரு பொருளுக்கு வரி இருந்தாலும், அதற்கு ‘டாக்ஸ் இன்வாய்ஸ்’ தயார் செய்ய வேண்டும். டாக்ஸ் இன்வாய்ஸில், இன்வாய்ஸ் நம்பர், போர்ட் டூ போர்ட், ஹெச்.எஸ் கோட், டாக்ஸ் பர்சென்டேஜ், ஐ.ஜி.எஸ்.டி (விரிவாகப் பிறகு பார்ப்போம்), பேங்க் விவரங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும்.
கன்சுலர் இன்வாய்ஸ் என்பது நீங்கள் அனுப்பும் பொருளுக்கு அந்த நாட்டு அனுமதி பெறும் இன்வாய்ஸ் ஆகும். ஒரு பொருளை ஒரு நாட்டுக்கு அனுப்பப் போகிறோம் எனில், அந்தப் பொருளை அந்த நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதி உண்டா என்பதை உறுதி செய்வதற்கு, அந்த நாட்டின் கன்சுலேட் அலுவலகத்தில் அந்த நாட்டுப் பிரதிநிதியிடமிருந்து அட்டெஸ்டெட் வாங்கி அனுப்ப வேண்டும். இந்த கன்சுலர் இன்வாய்ஸ் தேவையா என்று இறக்குமதியாளரிடம் கேட்டுத் தயார் செய்யவும்.
ஏற்றுமதி பிசினஸில் தேவையான ஆவணங்களைக் கொடுக்கத் தவறினால், உங்கள் எல்.சி (LC-Ltter of Credit) பாஸ் ஆகாது. எனவே, ஆவணங்களைத் தயார் செய்து, சமர்ப்பிப்பது அவசியம்.
(ஜெயிப்போம்)