நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?

செல்லமுத்து குப்புசாமி

மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? தொடர்பில்லாத இரு விஷயங்களைப் பற்றி பேசும்போது சிலர் இப்படிச் சொல்வார்கள். அமாவாசைக்குக் கோயிலுக்குச் செல்வது, பிரதோஷத்துக்கு விரதமிருப்பது, உத்திரத்துக்குக் காவடியெடுப்பது என எல்லாமே அப்துல் காதருக்குத் தொடர்பில்லாத விஷயங்கள்.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?

ஒருவேளை கோயில் வாசலில் அப்துல் காதர் தேங்காய்க் கடை வைத்திருந்தால்? அமாவாசைக்கும் அவருக்கும் சம்பந்தம் வந்துவிடும் இல்லையா! அப்போது புரட்டாசி மாதத்தோடுகூட அவருக்கு சம்பந்தம் வந்துவிடும். ஓணம் பண்டிகை சமயத்தில் காய்கறி விலைகள் ஏறுமென்று எங்கள் ஊரில் குடியானவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அநேகமாக, பூ உற்பத்தி செய்கிறவர்களுக்கும் இது பொருந்தும்.

நம்மைச் சுற்றி நடக்கிற ஒவ்வொரு விஷயமும், நாம் கேள்விப்படுகிற ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் முதலீடு செய்திருக்கிற கம்பெனியின் பங்கு விலையை மட்டும் தினமும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தால் போதாது. சுற்றிலும் நடக்கிற சங்கதிகளையும் கவனிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ந்த தினம், இலங்கைத் தீவில் சர்வபலம் பொருந்தி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பிள்ளையார் சுழிபோட்ட தினம். உலகம், குறிப்பாக மேற்குலக நாடுகள், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை அணுகும் விதம் அதன் பின்னர் தலைகீழாக மாறிப் போனது.

மலைக் காடுகளை அழித்து காபித் தோட்டமும், தேயிலைத் தோட்டமும் அமைத்தபோது, பேராறுகளின் கரைகளில் நாம் ஃபில்டர் காபியைச் சுவைத்தபடி இருந்தோம். காபியா, கரை புரண்டோடும் காவிரியா? ஏதாவது ஒன்றைத்தானே இயற்கை அளிக்கும். காவிரியைக் கர்நாடகா தடுக்கிறது என்கிறோம். ஆனால், கரூருக்கு வராமல் அமராவதியை எது தடுக்கிறது?

சில செய்திகள், செயல்கள் உடனடியான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. அதனை நாம் நன்கு உணர முடியும். அப்படிப்பட்ட செய்திகள் பெரும் கவனத்தை ஈர்ப்பவை, விவாதத்தை உண்டுபண்ணக் கூடியவை. ஆனால், இன்னும் சில செய்திகளின் தாக்கத்தை உடனே உணர முடியாது என்றாலும் விளைவுகளைத்   தவிர்க்கவே முடியாது. அதனை முன்கூட்டியே அடையாளம் கண்டு நமது செயல்பாடுகளை அதற்கேற்ப மாற்றிக்கொள்வது அவசியம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?



எனினும், பெரும்பாலான நேரங்களில் நாம் அந்த மாதிரியான போக்குகளைக் கண்டுணரத் தவறுகிறோம். மெதுமெதுவாக சூடேறும் நீருக்குள்ளிருக்கும் தவளையைப்போல. கொதிக்கிற தண்ணீருக்குள் ஒரு தவளையைப் போட்டால் அது உடனே குதித்து வெளியேறிவிடும். ஆனால், உணர முடியாத அளவுக்கு மெதுவாக சூடேறும் நீரில் போட்டால் அது சொகுசாக உள்ளேயிருக்கும். கால் மணி நேரத்தில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏறுகிறதென்றால் சுகமாகத்தானே இருக்கும்! அதே வேகத்தில் சீராக சூடு அதிகரிக்கும்போது சில மணி நேரங்களில் தவளை இறந்துபோயிருக்கும்.

நமது வேலையைத் தவிர, எதுவுமே தெரியாத, வேறு திறமைகள் எதையுமே வளர்த்துக் கொள்ளாத நபர்களுக்கு இந்தத் தவளைக் கதையை உதாரணமாகச் சொல்வார்கள். நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் செட்டில் ஆகி விடலாம் என்ற கடந்த தலைமுறையின் சித்தாந்தம் இப்போது உதவாது. தொடர்ச்சியாக நமது திறமைகளைப் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் காலாவதியாகிறோம். பொதுவாகவே, நம் அத்தனை பேருக்கும் இது பொருந்துமென்றாலும் முதலீட்டாளருக்குக் கூடுதலாகப் பொருந்துகிறது.

சமீபத்தில் வட கொரியா அணு ஆயுத பரிசோதனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. அதனையடுத்து, உலகலாவிய அளவில் பங்குச் சந்தைகள் ஓரளவு சரிவைச் சந்தித்ததாகவும், தங்கத்துக்கான கிராக்கி கூடி அதன் விலை அதிகரித்ததாகவும் நாம் அறிந்தோம்.

அதற்கு வட கொரியாவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அங்கு நடைபெறும் ஆட்சியைப் பற்றி, அதன் ஆட்சியாளரைப் பற்றி, தென் கொரியா வுடன் அதற்கிருக்கும் பிரச்னைகள் பற்றி, தென் கொரியாவுக்கும் மற்ற முன்னேறிய நாடுகளுக்கு முள்ள உறவு பற்றி, தென் கொரியாவில் சாம்சங், ஹுண்டாய் உள்ளிட்ட கம்பெனிகள் உலக அளவில் வெற்றிகரமாக இயங்குவதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தச் செய்தியைக் கண்டதும் அதன் பின்னணிகளைத் தேடிப் படித்து அறிய வேண்டும். மிக முக்கியமாக, அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் என்ன வாய்க்கால் தகறாறு (அந்த வாய்க்கால் யாருடையது?) என்பது பற்றிய புரிதலை உருவாக்க முனைய வேண்டும்.   

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்?

அது ஒரு பக்கமிருக்க, அணுஆயுத பரிசோதனை நடத்தினால் எதற்காக ஷேர் மார்க்கெட் சரிய வேண்டும்? எதற்காக தங்கத்தின் தேவை அதிகரிக்க வேண்டும்? வட கொரியா தென் கொரியாவின் மீதோ, அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேச நாடுகள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடும் என்கிற அச்சம். அப்படி நடத்தினால் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் உருவாகும். ஷேர் மார்க்கெட் கடுமையாக அதலபாதாளத்துக்குச் சரியும். அதனால் தங்கத்தை வாங்கி வைத்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கும்.

எப்போதெல்லாம் உலக அரங்கில் நிச்சயமற்ற தன்மையும், பதற்றமும் நிலவுகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும். ஷேர்கள் அவ்வளவு ஈர்ப்புடையதாக தோன்றாது. இது இயல்பு.

ஆனால், நாளைக்கே வட கொரியா தென் கொரியாவின்மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை. (அதற்கான சாத்தியங்களை முற்றாக நிராகரிக்க முடியாது என்றாலும்கூட) “நான் உங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்ட வருகிறேன்” என உலக நாட்டாமை அமெரிக்கா மூக்கை நுழைக்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகக்கூட வட கொரியா இதனைச் செய்திருக்கலாம்.

போர் நடக்க வேண்டுமென்றால் அமெரிக்காவே முன்னெடுத்தால்தான் உண்டு எனக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்ப்  பெட்ரோலிய பொருள்கள் மீதும், உலக ஜனநாயகம் மீதும் கொண்டிருக்கும் ஆர்வத்தைவிட மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கிறாரோ என்னவோ!

இது ஒருபக்கம் இருக்கட்டும்.  உலகச் செய்திகள், நாட்டு நடப்புகள் அரசியலை எவ்வாறு பாதிக்கின்றன, பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன, குறிப்பிட்ட துறைகளை எவ்வாறு பாதிக்கின்றன, அதில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கும், அது தற்காலிகமானதா அல்லது கடுமையான நீண்ட கால விளைவுகளை உள்ளடக்கியதா, அதன் தாக்கம் அதன் பங்கு விலையில் எதிரொலிக்குமா?

கட்டாயமாக ஆராய வேண்டிய விஷயங்கள் இவை. உதாரணத்துக்கு, இந்த வருடம் கடுமையான வறட்சி. அதனால் விவசாய இடுபொருள்கள் (உரம், பூச்சி மருந்து, விதைகள்) தயாரிக்கும் நிறுவனங்களின் பிசினஸ் மந்தமாக இருக்கும். டிராக்டர் விற்பனை சென்ற ஆண்டைவிட சரியும். கிராமப்புறங்களில் பணப்புழக்கம் மந்தமாகும். அதனால் நுகர்பொருள்களின் விற்பனைகூட குறிப்பிட்டுச் சொல்லுமளவு இருக்காது. இருசக்கர வாகனங்களின் விற்பனையும் அப்படித்தான் என்பதாக நீங்கள் கணிக்கலாம்.

இதெல்லாம் கொதிக்கும் நீரிலிருந்து உடனே தாவிக் குதிக்கும் தவளையின் அணுகுமுறைகள். படிப்படியாக சூடேறும் நீரைக் கண்டு உணர்ந்து அதிலிருந்து வெளியேறவும் பழக வேண்டும்.

(லாபம் சம்பாதிப்போம்)