
எந்த முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க்?
முதலீட்டில் அதிக லாபம் பெற அதனைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இப்படி பிரித்து முதலீடு செய்யும்போது, எந்த முதலீட்டில் எந்த அளவுக்கு ரிஸ்க் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது மிக முக்கியம். நமது முதலீட்டில் ரிஸ்க் அதிகரிக்க அதிகரிக்க லாபமும் அதிகரிக்கும்.

மிகக் குறைந்த ரிஸ்க் என்கிறபோது, வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒரு காலத்தில், இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் குறைய வாய்ப்பே இல்லை என்று இருந்தது. ஆனால், அண்மையில் வங்கி சேமிப்புக் கணக்குக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக திடீரென பல வங்கிகளால் குறைக்கப்பட்டது. இதனை அடுத்து, நடுத்தர அளவு ரிஸ்க் என்கிறபோது, கம்பெனி டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இறுதியாக, அதிக ரிஸ்க் என்கிறபோது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை (முதலீடு, வர்த்தகம்), கமாடிட்டி டிரேடிங் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அதே நேரத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடுகளில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. மேலும், பங்கு முதலீடு என்கிறபோது முதலீட்டை பல பங்குகளில் பிரித்து முதலீடு செய்யும்போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் டைவர்சிஃபைடு / மல்டி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைகிறது.
அந்த வகையில், நீண்ட காலத்தில் இந்த முதலீடுகளால் பரவலாக்கப்பட்ட ரிஸ்க் மூலம் அதிக லாபம் பெற முடியும். கூடவே ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்துக்குப் பங்குகள், பங்கு சார்ந்த ஃபண்டுகளை வைத்திருக்கும் போது வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்பது கூடுதல் சலுகையாகும்.
- சேனா சரவணன்