நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா

ற்போது 50 வயதான பிறகுதான் நம்மில் பலரும் நிதித் திட்டமிடல் குறித்து யோசிக்கத் தொடங்கினோம். ஆனால், இந்தக் காலத்து இளைஞர்கள், திருமணத்துக்கு முன்பே அது குறித்து யோசித்து, முதலீடு செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இதற்கொரு உதாரணமாக இருக்கிறார் ஆம்பூரைச் சேர்ந்த பாலாஜி.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?

“எனக்கு நான்கு அக்காக்கள். அவர்கள் எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. வீட்டில் நான்தான் கடைசிப் பையன். என் வயது 28. சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன். சென்னையில் பேச்சுலர் அறையில் தங்கியுள்ளேன். சம்பளம் ரூ.50,000 வாங்குகிறேன். ஒரு வருடத்துக்குள் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். என் மனைவி வேலைக்குச் செல்ல வேண்டுமென நிர்பந்திக்க மாட்டேன். எனவே, என் வருமான அடிப்படையில் ஆலோசனை சொன்னால் போதும்.

என் பெற்றோர் என் சொந்த ஊரில் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.13,000 தருகிறேன். அதில் மாதம் ரூ.5,000-த்தை என் அம்மா சீட்டு கட்டி வருகிறார். இதற்குமுன்பு செலுத்திய சீட்டில் எடுத்த ரூ.1 லட்சத்தில் ரூ.35,000 கடன் அடைத்துவிட்டு, மீதி ரூ.65,000 வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ளது. ரூ.2 லட்சம் ரூபாய் சில நண்பர்களுக்குக் கடன் கொடுத்துள்ளேன். மியூச்சுவல் ஃபண்டில் ரூ.75,000 இந்த மாதம் மொத்த முதலீடு செய்துவைத்துள்ளேன்.

மியூச்சுவல் ஃபண்டில் தற்போது எஸ்.ஐ.பி முறையில் ரூ.6,500 முதலீடு செய்து வருகிறேன். பி.பி.எஃப்-ல் மாதம் ரூ.1,000 செலுத்தி வருகிறேன். இ.பி.எஃப்-ல் எனக்கு மாதம் ரூ.2,500 பிடித்தம் செய்கிறார்கள். இதுவரை ரூ.2 லட்சம் உள்ளது. ரூ.5 லட்சம் முதிர்வுத் தொகைக்கு மணிபேக் பாலிசி ஒன்றை எடுத்துள்ளேன். அதற்கு பிரீமியம் மாதம் ரூ.3,100. நண்பர் ஒருவருக்கு 6 லட்சம் ரூபாய் பர்சனல் லோன் எடுத்துக் கொடுத்துள்ளேன். அது முடிய இன்னும் நான்கு வருடங்கள் உள்ளன. எனவே தற்போது என்னால் வங்கியில் இன்னொரு கடன் வாங்க முடியாது. ஆனால், என் திருமணத்துக்கு ரூ.3 லட்சம் தேவை.

பெற்றோருக்கு 60 வயதைக் கடந்துவிட்டதால் மருத்துவச் செலவுக்கு அவசர கால நிதியாக ரூ.5 லட்சம் தேவை. திருமணத்துக்குப் பிறகு எனக்கு இரண்டு குழந்தைகள் என்ற அடிப்படையில் நிதித் திட்டமிடலைச் செய்ய வேண்டும். 20 வருடங்களில் இரு குழந்தைகளுக்கும் படிப்புச் செலவுக்கு தலா ரூ.25 லட்சம் தேவை. 25 வருடங்களில் இரு பெண் குழந்தைகளுக்குத் திருமணச் செலவுகளுக்கு தலா ரூ.10 லட்சம் தேவை. 

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?



ஓய்வுபெற்ற பிறகு, ஏழை மாணவர் ஒருவரின் கல்விக்கு ரூ.10 லட்சம் உதவ விரும்புகிறேன். அதற்கும் திட்டம் தேவை. எல்லாச் செலவுகளும் போக மீதமுள்ள ரூ.16,500-லிருந்துதான் நண்பர்களுக்குக் கடன் உதவி செய்துவருகிறேன். என் ஓய்வுக்காலத்துக்கும் திட்டம் தேவை.

மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள் ஒரு கார் வாங்க வேண்டும் என்பதும் என் ஆசை” எனத் தன் எதிர்காலக் கனவுகளுடன் பேசியவர், செலவு மற்றும் முதலீட்டு விவரங்களை நமக்கு அனுப்பி வைத்தார். (இலக்குகளுக்குத் தேவையான தொகைகள் தற்போதைய மதிப்பில்)

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“திருமணத்துக்கு முன்பே எதிர்காலத் திட்டமிடல் குறித்துச் சிந்திக்கும் உங்களுக்கு என் பாராட்டுகள். உதவும் குணம் இருப்பது நல்லது தான். ஆனால், உங்கள் தேவைகளுக்கு முதலீடுகளைச் செய்ய ஆரம்பிக்கும் நிலையில், நீங்கள் பிறருக்குக் கடன் கொடுத்து உதவுவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். திருமணத்துக்குப் பிறகான உங்கள் செலவுகள் பின்வருமாறு இருக்கக்கூடும். பெற்றோருக்கு தற்போது நீங்கள் கொடுத்துவரும் ரூ.13,000-ல் ரூ.5,000 சீட்டுக் கட்டப் பயன்படுத்துவதால், அவர்களுக்கான செலவுத் தொகை ரூ.8,000 என எடுத்துக்கொண்டுள்ளேன். உங்கள் குடும்பச் செலவுக்கு ரூ.20,000 ஒதுக்கியுள்ளேன். இதன் மூலம் உங்கள் குடும்பச் செலவுகள் மொத்தம் ரூ.38,600. மிச்சமாகும் தொகை ரூ.11,400. ஆனால், திருமணத்துக்குப் பின் முதலீட்டை ஆரம்பிக்கும் நிலையில் உங்கள் சம்பளம் 5% உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில் முதலீட்டு ஆலோசனை களை வழங்குகிறேன். 

முதலில் கடனாகக் கொடுத்த ரூ.2 லட்சத்தைக் கேட்டு வாங்குங்கள். அதனுடன் வங்கியில் இருக்கும் ரூ.65 ஆயிரத்தையும் சேர்த்து  திருமணச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்து, திருமணத்துக்குப் பின் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நீங்கள் திட்டமிடுவது மகிழ்ச்சி. இப்போதைக்குக் குழந்தைகளின் கல்விக்கு மட்டும் முதலீட்டைத் தொடங்குங்கள். குழந்தைகளின் திருமணத்துக்குச் சூழல்கள் மாறும்போது ஆரம்பிக்கலாம்.  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?

குழந்தைகள் மேற்படிப்புக்கு இன்றைய நிலையில், ரூ.25 லட்சம் என்பது நடுத்தர பொருளாதாரச் சூழலில் வாழ்கிறவர் களுக்கு அதிகம். எனவே, ரூ.10 லட்சம் என வைத்துக்கொள்வதே சரி. ரூ.10 லட்சம் என்றாலே முதல் குழந்தைக்கு 20 ஆண்டுகள் கழித்து ரூ.38.7 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.4,470 முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 22 ஆண்டுகள் கழித்து ரூ.44 லட்சம் தேவையாக இருக்கும். அதற்கு மாதம் ரூ.4,000 முதலீடு செய்ய வேண்டும்.

அடுத்து, இன்றைக்குக் குடும்பச் செலவுகள் ரூ.20 ஆயிரம் எனக் கொண்டால் ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.1,52,000 தேவை. அப்படியானால் கார்ப்பஸ் தொகை ரூ.4.31 கோடி சேர்க்க வேண்டும். பி.எஃப் தொகை ரூ.1.45 கோடி போக ரூ.2.86 கோடி சேர்க்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10,200 முதலீடு செய்ய வேண்டும். ஆக மூன்று இலக்குகளுக்கும் சேர்த்து ரூ.18,700 தேவையாக இருக்கும். ஆனால், முதலீட்டுக்குப் பற்றாக்குறை இருப்பதால், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு முதலீட்டை ஆரம்பித்துவிட்டு, ஆண்டுக்கு 5% படிப்படியாக முதலீட்டை அதிகரித்துக்கொள்வதன் மூலம் இலக்கை அடையலாம்.

பத்து ஆண்டுகளில் கார் வாங்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் தேவை. தற்போது எஸ்.ஐ.பி முதலீட்டில் ரூ.6,500 முதலீடு செய்துவருகிறீர்கள். அதில் ரூ.4,500-ஐ கார் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். மீதி ரூ.1,000-ஐ குழந்தை பிறந்தவுடன் வரக்கூடிய செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களுக்குத் திருமணமானவுடன் ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். அதற்கு பிரீமியம் செலுத்த, மீதியுள்ள எஸ்.ஐ.பி தொகை ரூ.1,000-ஐ பயன்படுத்திக்கொள்ளுங்கள்.   

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?

தற்போது செலுத்தும் சீட்டுத் தொகை முதிர்வானவுடன் அதை, பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்கு அவசர கால நிதியாக வைத்துக்கொள்ளவும். அவர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்துக்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. மொத்த முதலீடாக உள்ள ரூ.75 ஆயிரம் தொகையை உங்களுக்கு அவசர கால நிதியாக வைத்துக் கொள்ளவும். பி.பி.எஃப் தொகை, இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை களை குழந்தைகளின் திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கே சொல்லப்பட்டுள்ள ஆலோசனையின்படி, இப்போது நீங்கள் முதலீட்டை ஆரம்பிக்கவும். உங்கள் சம்பளம் உயரும்போதும், மனைவி வேலைக்குப் போகும்பட்சத்திலும் முதலீட்டை மாற்றியமைத்துக்கொள்ளலாம். அப்போது நீங்கள் ஏழை மாணவருக்கு உதவும் திட்டத்துக்கான முதலீட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பரிந்துரை: ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன்- ரூ.2,300, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ்- ரூ.2,300, டி.எஸ்.பி. பி.ஆர் ஸ்மால் அண்ட் மிட்கேப்- ரூ.2,300, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் -ரூ.3,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லாங் டேர்ம் ஃபண்ட் -2,200. தற்போது செய்து வரும் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யவும்.”

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878

- கா.முத்துசூரியா  

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 14 - ஒரு பேச்சுலரின் எதிர்காலக் கனவுகள்... நிறைவேற என்ன வழி?