
பங்குச் சந்தை முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!
1. டிப்ஸை நம்பி மட்டுமே முதலீடு வேண்டாம்
யாரோ சொல்லும் ‘டிப்ஸ் அடிப்படையில் பங்குச் சந்தையில் சிலர் முதலீடு செய்கிறார்கள். இது தவறு. யார் டிப்ஸ் தந்தாலும், அதனை அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பது நல்லது.

2. கடன் வாங்கி முதலீடு வேண்டாம்
பங்குச் சந்தை வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது. இப்போது முதலீடு செய்தால், நல்ல லாபம் பார்க்கலாம் என யாராவது சொன்னால், கடன் வாங்கிக்கூட முதலீடு செய்யத் தயாராகிவிடு கிறார்கள். இது மகா தவறு. கடன் வாங்கி முதலீடு செய்தால், லாபம்தான் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நஷ்டமும் வரலாம். அப்படி நஷ்டம் வந்தால் ஒரே நேரத்தில் இரு நஷ்டத்தை நாம் சந்தித்தாக வேண்டியதாகிவிடும்.
3. மொத்த முதலீடு சந்தையில் வேண்டாம்
கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தை நல்ல லாபம் தந்திருக்கிறது என்பதற்காக சிலர், ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தை எடுத்துப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிடுகிறார்கள். இப்படி செய்வதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். உடனே எடுத்துப் பயன்படுத்தத் தகுந்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. நம் எல்லா தேவைகளும் போக எஞ்சியுள்ள பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.
4. தொடர்ந்து ஆவரேஜ் செய்ய வேண்டாம்
நல்ல நிறுவனப் பங்கு என நினைத்து முதலீடு செய்த ஒரு பங்கின் விலை இறங்குகிறது. என்ன காரணத்துக்காக இந்த விலையிறக்கம் என்பதைக் கண்டறிந்து, அந்தப் பங்கில் மேற்கொண்டு முதலீடு செய்யலாமா என முடிவு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் விலை உயர்ந்துவிடும் எனக் கண்மூடித்தனமாக நம்பி, மீண்டும் மீண்டும் வாங்கி ஆவரேஜ் செய்யக்கூடாது.
5. நல்ல லாபத்தை வெளியே எடுத்துவிடுங்கள்
முதலீடு செய்த பங்கின் மூலம் 20-30% லாபம் கிடைத்தால், அதிலிருந்து பகுதி லாபத்தையோ அல்லது முழு லாபத்தையுமோ எடுத்து, வேறு பங்கை வாங்கிவிடுவது நல்லது. நீண்ட கால முதலீடு என்று நினைத்து, பங்கை விற்காமலே இருக்கத் தேவையில்லை.
- சேனா சரவணன்