நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

ல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கான அங்கீகாரம் ஓரளவுக்குக் கிடைத்தி ருந்தாலும், பொருளாதார விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே இன்றைய யதார்த்தம். குடும்பப் பொருளாதார முடிவுகளை எடுப்பதில் பெண்கள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நிதி நிபுணர்களாக இருக்கும் சில பெண்களைச் சந்தித்தோம். நாம் முதலில் சந்தித்தது நிதித் திட்டமிடல் நிபுணரான செளமியா ராமலிங்கம்.  

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்

‘‘வீட்டுப் பொறுப்பைப் பார்த்துக் கொள்ளும் பெண்களிடம், பணம் தொடர்பான பொறுப்புகளை  ஒப்படைக்க ஆண்கள் பலர் முன்வருவதில்லை. ‘பெண்களால் சரியாகச் செயல்பட முடியுமா?’ என்ற தயக்கமே அதற்குக் காரணம். சில நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகளால் பெண்கள் பண விஷயத்தில் சில பிழைகளைச் செய்யும்போது, ‘அப்பவே தெரியும் நீ இப்படித்தான் பண்ணுவேனு’ என்று ஆண்கள் சுமத்தத் தயாராக வைத்திருக்கும் பழிக்குப் பயந்தும் பெண்கள் பலர் முதலீடு
சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதில்லை.

பெண்கள், தங்கள் கையில் ஒரு வேலையை எடுக்கும்போது அதைச் செய்து முடிப்பதற்கான முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் இயல்புடையவர்கள். அதிலும் நிதி தொடர்பான விஷயம் என்பதால், ஆண்களைவிட குடும்ப முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள் பெண்கள். என்றாலும், குடும்ப நிதித் திட்டமிடல் என்று வரும்போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வந்தாலும், இறுதி முடிவு எப்போதும் கணவர் கையில்தான் இருக்கும். ஆனால், என்னிடம் நிதி ஆலோசனைக்காக வரும் பெண்களைக் கவனித்தவரையில், ஆண்களைவிடப் பெண்கள் முதலீடு சார்ந்த விஷயங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள். என் நீண்டகால கனவே, இல்லத்தரசிகளுக்கு நிதி மேலாண்மைக் கல்வி கொடுத்து அவர்களை முதலீட்டில் பிரகாசிக்க வைக்க வேண்டும் என்பதே. எவ்வளவு தொகையில் வீடு கட்டுவது, என்ன விலையில் கார் வாங்குவது எனக் கணவருக்கு ஆலோசனை சொல்ல முடிந்த மனைவி, ‘நம்மால் நிதிப் பொறுப்புகளைக் கையாள முடியும்’ என்ற நம்பிக்கையும் கொள்ள வேண்டும். 

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?



என் வாடிக்கையாளர் ஒருவர், லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஒரு பிசினஸ் ஆரம்பிக்க நினைத்தார். லண்டனில் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு மாற்றுவதில் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அதையெல்லாம் சரி செய்யவே எங்களுக்கு ஐந்து ஆண்டு காலம் ஆனது. ஆனால், உடனே மாற்ற முடிந்த குறைந்த தொகையை வைத்து தொழிலைத் தொடங்கி, மூன்று ஆண்டுகளில் அந்தத் தொழிலை பெரிய அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார். அதற்குக் காரணம், அவருக்கு அருமையான யோசனை களைச் சொன்ன அவரது மனைவி. எனவே, ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களைத் தங்களின் பொருளாதாரம் தொடர்பான திட்டமிடுதலில் இணைத்துக்கொள்வது, வளர்ச்சியை இரட்டிப்பாக்கும்’’ என்றார்.

முதலீட்டை நோக்கி பெண்கள் வரவேண்டும்

அடுத்து நாம் சித்ரா நாகப்பனைச் சந்தித்தோம். இன்றைய பெண்கள் சேமிப்பு என்பதுடன் நின்றுவிடாமல், முதலீட்டை நோக்கி வரவேண்டும் என்று ஆரம்பித்தார். 

‘‘நம் பெண்களுக்கு முதலில் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லித் தரவேண்டும். பீரோவில் சேலைக்கடியில் பணத்தை மறைத்து வைத்து சேர்ப்பது, வங்கி, போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி., எஃப்.டி போன்றவற்றைத்தான் இதுவரை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அசலைச் சிறிது லாபத்துடன் திரும்பத் தரும் இந்தத் திட்டங்களில் பணத்தைப் போடுவதில் தவறில்லை. ஆனால், இதை மட்டுமே நம்பியிருந்தால், நம்மால் பெரிய லாபம் எதையும் பார்க்க முடியாது.  முதலீடு செய்வதன் மூலமே நல்ல லாபம் கிடைக்கும்.

தங்கம் வாங்குவதும், நிலம் வாங்குவதும் முதலீடுதான். ஆனால், தங்கம் வாங்குவதினால் நாம் அடையும் நன்மையைவிட நகைக்கடைக்காரர்கள் அடையும் நன்மை அதிகம். நிலம் வாங்க வேண்டுமெனில், நிறைய பணம் வேண்டும். விலை எப்போது, எப்படி உயரும் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இந்த நிலையில், குறைந்த முதலீட்டில் நீண்ட காலத்தில் ஓரளவு நல்ல லாபம் பார்க்க வேண்டுமெனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சிறந்தவை என்பதே என் அனுபவம். 15 - 20 ஆண்டுகளுக்கு இதில் செய்யப்படும் முதலீட்டில் ரிஸ்க் குறைவு. குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் முதலீடு செய்யும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் முறை மூலம் இதில் முதலீடு செய்யலாம்.

பெண்கள் பலரும் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது புத்திசாலித்தனமான தேர்வல்ல. இந்த பாலிசியை எடுப்பதைத் தவிர்த்து, குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.    

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

வருடம் ஒருமுறை நிதி ஆலோசகரிடம் சென்று, தற்போதைய வருமானத்துக்கேற்ப எந்த முறையில் சேமிக்கலாம், ஏற்கெனவே முதலீடு செய்த திட்டங்களின் போக்கு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அடுத்த 10 வருடங்களில் நம் சேமிப்பின் மதிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்ற இலக்கும், அதை நோக்கிய செயல்பாடும் பெண்களுக்குத் தேவை.

நிதி நிர்வாகம், முதலீடு ஆகிய விஷயங்களில் தாங்களே முடிவெடுக்கும்போது ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் வெற்றிகரமாகச் செயல்படும் பெண்களுடன் நட்புடன் பழகும்போது நம்பிக்கை கிடைக்கும். சின்னச் சின்ன தவறுகளைச் செய்தாலும், அனுபவத்தின் மூலம் அடுத்தமுறை அந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்’’ என்றார்.

கையெழுத்துப் போடும்முன் சிந்திக்க வேண்டும்

அடுத்து,  நிதி ஆலோசகர் புவனா ஸ்ரீராமைச் சந்தித்தோம். 

‘‘பணிக்குச் செல்லும் நிலையிலும்கூட, பெண்கள் பலரின் சின்னச் சின்ன ஆசைகள் முதல் பொருளாதார ஆதரவு வரை அனைத்தும் ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவர்கள் அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். 10 சதவிகித பெண்கள்தான் வீட்டில் தனக்கான உரிமையையும், முக்கியத்துவத்தையும் விட்டுக்கொடுக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள். ‘கணவர்தானே சம்பாதிக்கிறார். அது அவர் பணம்தானே?’ என்ற எண்ணம் பெண்கள் பலருக்கு இருப்பதால், அவர்கள் நிதி விஷயங்களைக் கையிலெடுக்கத் தயங்குகிறார்கள். ‘எதுக்கு ரிஸ்க்’ என நினைப்ப வர்களும் உண்டு. குடும்பமாக உட்கார்ந்து வரவு, செலவு விஷயங்களைப் பேசும்போது, ‘காபி போட்டுட்டு வர்றேன்’ என்று எழுந்து செல்லும் பெண்களும் உண்டு. இவையெல்லாம்தான் இன்வெஸ்மென்ட் விஷயங்களில் இருந்து பெண்களைத் தள்ளிவைக்கின்றன.

பொதுவாக, குடும்பங்களில் பட்ஜெட்டிங் என்றால் பெண், முதலீடு என்றால் ஆண் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. இதை மாற்ற பெண்கள்தான் முன்வர வேண்டும். இப்போது பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் மோகத்தில் இருந்து சற்று வெளிவந்திருக்கிறார்கள். ‘இது வேண்டாம்’ என்று சிந்திக்கத் தெரிந்த அவர்களுக்கு, ‘எது வேண்டும்?’ என்ற தெளிவும் கிடைக்கப்பெற வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அறிவு பெறுவது அதற்கு முதற்படி. அதைச் செயல்படுத்துவதற்கான வழிகளைத் தேடியடைவது இரண்டாவது படி. நீண்ட கால, தெளிவான திட்டத்துடன் முதலீட்டைச் செய்தால் லாபம் நிச்சயம்’’ என்றார்.

குடும்பத்தில் பொருளாதார முடிவுகளை எடுப்பதில், நகர்ப்புறங்களில் வாழும் பெண்களின் பங்கு அதிகம்.  அதிக லாபம் தராத திட்டங்களை விடுத்து, நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல திட்டங்கள் எவை என்பதைக் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவை பற்றி படித்து, அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலமே நம் பெண்கள் முன்னேற்றம் காண முடியும்!

- வே.கிருஷ்ணவேணி 


படங்கள்: மீ.நிவேதன், க.விக்னேஷ்வரன்

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

பிசினஸுக்கும், குடும்பத்துக்கும் தனித்தனி அக்கவுன்ட்!

ராஜேஸ்வரி, (இல்லத்தரசி மற்றும் பிசினஸ் பெண்மணி), திருவையாறு:

‘‘நான் ஐந்து வருஷமா பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். ஆரம்பத்துல ஃபைனான்ஸ்ன்னாலே தயக்கமா இருக்கும். `பணம் சார்ந்த விஷயங்களை நீங்களே பார்த்துக்கோங்க’னு கணவர்கிட்டே விட்டுட்டு மற்ற வேலைகளைப் பார்த்துக்கிட்டேன். பிறகு நிதி நிர்வாகத்தைப் புரிஞ்சுகிட்டேன். பிசினஸுக்குனு தனியா ஒரு அக்கவுன்ட் வெச்சுக்கணும்னு நெனைச்சு ஆரம்பிச்சோம். பிசினஸ் சார்ந்த டிரான்ஸாக்‌ஷன் எல்லாத்தையும் அதுலதான் பண்றோம். வீட்டுக்கான செலவுகள் மற்றும் வரவுகளுக்கு பெர்சனல் அக்கவுன்ட்டை மெயின்டெய்ன் பண்றோம். சிறு சேமிப்புக்கு போஸ்ட் ஆபீஸ்ல போட்டுவோம். எல்லாத்தையும் என் கணவர்கிட்ட முன்கூட்டியே தெளிவாப் பேசிடுவேன். இப்பவெல்லாம் குடும்பத்தில் பொருளாதார முடிவுகளை எடுக்க நானும் தயங்குறதில்லை.’’

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

``சம்பளத்தில் பத்து சதவிகிதத்தைக் கண்டிப்பாகச் சேமிக்கணும்!’’

வனிதா, (இல்லத்தரசி) ஈரோடு

‘‘சேமிப்பு என்பதை எதிர்காலத்துக்கான முதலீடாக நினைக்கிறேன். ஒவ்வொருவரும் தன் சம்பளத்தில் பத்து சதவிகிதத்தைக் கண்டிப்பாகச் சேமிக்கணும். இன்னும் சொல்லணும்னா, இன்றைய சூழலில் சம்பாத்தியத்தில் பாதி அளவு சேமிச்சாத்தான் எதிர்காலம் நல்லா இருக்கும். நீண்ட கால சேமிப்பு ரொம்பவே முக்கியம். அது இல்லைன்னாலும், குறுகிய கால சேமிப்பிலாவது கவனம் செலுத்தணும். படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல அஞ்சலக சேமிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்காங்க. நூறு ரூபாய் முதல் இந்தச் சேமிப்பில் தொடரலாம். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதுபோல அது வளரும். வீண் செலவைக் குறைச்சாலே கையில் காசு நிற்கும் என்பதை உணர்ந்திருக்கேன்.’’

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: நிதி நிர்வாகம்... முதலீடு... இன்றைய பெண்களின் நிலை என்ன?

``ஒரு ரூபாய் செலவு பண்ணாலும் அதை எழுதிவெச்சுடுவேன்!’’

கிளாரா ராஜ் (தனியார் நிறுவன ஊழியர்) கோவை:


‘‘மா
தத்தின் செலவு பட்டியலில் முதல் இடம்பெறுவதே சேமிப்புதான். இரண்டாவது, இன்ஷூரன்ஸ், மூன்றாவது கடன். நான்காவதாக வீட்டுச் செலவுகள். வீண் செலவுகளை யாருமே செய்ய மாட்டோம். என் முதல் பையனை காலேஜில் சேர்க்கும்போதும், `நம் வசதிக்குச் சரிப்பட்டு வருமா, ஃபீஸ் கட்ட முடியுமா’னு பார்த்துத்தான் சேர்த்தோம். தகுதிக்கு மேற்பட்டு எதையும் செய்யலை. எந்த ஒரு செலவையும் ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிப்பேன். என் கணவர் என்கிட்ட கேள்வியே கேட்கமாட்டார். ஏன்னா, ஒரு ரூபாய் செலவு பண்ணாலும் அதை எழுதி வெச்சுடுவேன். அவங்களும் அப்படித்தான். இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஈஸியா லோன் கிடைக்குது. முக்கியமாக, பெண்களை டார்கெட் பண்றாங்க. எல்லா லேடீஸ் தலையிலும் லோன் விழுந்துடுது. விடியறதுக்கு முன்னாடியே லோன் கட்டத்தான் ஓடறாங்க. இப்படிச் சிக்கலில் மாட்டாமல், சரியான முறையில் சேமிப்பைத் தொடங்குவதும் அவசியம்.’’