நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

திக ரிஸ்க் எடுத்தால், அதிக லாபம்; குறைவான ரிஸ்க் எடுத்தால், குறைவான லாபம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பல சிறு முதலீட்டாளர்கள் தாங்கள் அதிகமான ரிஸ்க் எடுக்கிறோம் என்று தெரியாமலேயே, முதலீடு செய்து கொண்டி ருப்பார்கள். ஏதேனும் பெரிய நஷ்டம் ஏற்படும்போதுதான், அவர்கள் எடுத்த ரிஸ்க் எவ்வளவு அதிகம் என்பது புரியும். அந்த நிலையில்தான், தாங்கள் எவ்வளவு முட்டாள் தனமாகச் செயல்பட்டு  இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.  

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் பல லட்சம் முதலீட்டாளர்கள் ‘நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்’ எனக் கூறி, நிரந்தர வருமானம் தரக்கூடிய மிகக் குறைவான ரிஸ்க் உடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலும், பாண்டுகளிலும் முதலீடு செய்துகொண்டிருப்பார்கள்.  இவர்கள் பணவீக்கத்துக்கு ஈடுகட்ட முடியாமல் தவிப்பதுடன்,  பணத்தைப் பெருக்கக்கூடிய பொன்னான வாய்ப்புகளையும் இழப்பார்கள். 

இந்த இருசாராருமே செய்த பெரிய தவறு – போர்ட்ஃபோலியோ அணுகுமுறையின்படி முதலீடு செய்யாததே. பரபரப்பான இந்த நாகரிக உலகில், குறைந்த ரிஸ்க்கில் அதிக லாபம் ஈட்டுவதே  புத்திசாலித்தனம். அதற்கு போர்ட்ஃபோலியோ அணுகுமுறை  உதவி செய்கிறது.  

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

போர்ட்ஃபோலியோ என்பது என்ன? முதலீட்டுக் கலவையைத் தான் நாம் போர்ட்ஃபோலியோ என்கிறோம். நாம் அனைவரும் ரிஸ்க் எடுத்துப் பணத்தைச் சம்பாதிக்கிறோம். வேலை செய்பவராகட்டும் அல்லது தொழில் செய்பவராகட்டும், ரிஸ்க் எடுத்துச் சம்பாதித்த பணத்தை, குறைந்த அளவு ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்து அதிக அளவு வருமானம் சம்பாதிப்பதுதான் உசிதம்.

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் முதலீட்டு வகைகள் மேலே உள்ள படத்தில்  தரப்பட்டுள்ளன. இந்த நான்கு சொத்து வகைகளிலும் ஒருவரின் முதலீட்டு ஒதுக்கீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அட்டவணை 1-ல் தந்துள்ளோம். 
நாம் மேலே தந்துள்ள முதலீட்டு வகைகளில், நாம் வசிக்கும் வீடானது முதலீடாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. அட்டவணை 1-ல் உள்ள ஒதுக்கீட்டை, உங்களின் தற்போதைய ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் எதில் முதலீடு செய்யத் தவறி யிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.

பொதுவாக, நம்மில் பலர் எதில் அதிகமாக சொத்து வைத்திருக்க வேண்டுமோ, அதில் குறைவாகவே வைத்திருப் போம். எதில் குறைவாக வைத்திருக்க வேண்டுமோ, அதில் அதிகமாக வைத்திருப்போம். உதாரணமாக, நம்மில் பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக முதலீடு செய்திருப்போம். அதில் இப்போது பெரிய வருமானம் இல்லை. இன்னும் பலர் வங்கி டெபாசிட்டுகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள். பணவீக்கம் அளவுக்குக்கூட இதில் வருமானம் கிடைக்காது.  ஆனால், சிறிய தொகையொன்றை வங்கி டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கிறேன் என்பார்கள். கொஞ்சம் விசாரித்தால், அந்த சிறிய தொகை ரூ.50 லட்ச மாகவோ அல்லது ரூ.1 கோடியாகவோ இருக்கும். வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைந்துவரும் இந்தச் சமயத்தில், அந்தப் பணத்தை எதில் முதலீடு செய்வது என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். வங்கிகளில் வட்டி விகிதம் குறைவதினால் இவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இல்லை என்றால், ‘அந்த சிறிய தொகை அதிலேயே இருக்கட்டும்’ என்று விட்டுவிடுவார்கள்.  இதைத்தான் நாம்  ‘ரீஇன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்’ என்கிறோம். இது பலருக்கும் தெரிவதில்லை. 

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

இன்னும் சிலரோ, கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள்.  இவ்வாறு ஒரே சொத்தில் முதலீடு செய்யும்போது, லாபம் வரும்போது அதீதமாக வரும்; நஷ்டம் வரும்போது, அதுவும் அதிகமாகவே இருக்கும்.

ஆகவே, உங்கள் முதலீட்டுக் கலவையை உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப / உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப / உங்கள் வயதுக்கேற்ப அமைத்துக்கொள்ளுங்கள்.

நாம் அட்டவணை 1-ல் தந்துள்ள போர்ட்ஃபோலியோ மாடலைச் சரியாக செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பங்குச் சந்தையில்  அதிக ஒதுக்கீட்டை மாடரேட் மற்றும் அக்ரெஸிவ் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.இங்கும் போர்ட்ஃபோலியோவைச் சரியான கலவையில் முதலீட்டாளர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.  

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

பங்குச் சந்தை என்று நாம் கூறும்போது, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பிரதானமாக இருக்கும். அதற்கு அடுத்தாற்போல், நேரடி பங்குகளில் முதலீடு இருக்கும். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது பலர் 20 -30 ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பார்கள். ஒருவர் தனது முதலீட்டை அதிகமாக பரவலாக்கம்  (Diversify) செய்யும்போது,  வருமானம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதை ஓவர் டைவர்ஸிஃபிகேஷன் (over diversification) என்பார்கள். அதேசமயம், ஒரே ஒரு ஃபண்டில் மட்டும் முதலீடு செய்வதும் தவறு.

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்குள்  லார்ஜ்கேப், மல்டிகேப், ஸ்மால் அண்ட் மிட்கேப், செக்டோரல் ஃபண்ட் என பல வகைகள் உள்ளன. இந்த வகை திட்டங்களுக்குள் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வது அவசியம். உங்களின் 100 ரூபாய் பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வாறு பிரித்து முதலீடு செய்துகொள்ளலாம் என்பதை உங்களின் தேவையைப் பொறுத்து, வயதைப் பொறுத்து, ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து பக்கம் 15-ல் உள்ள அட்டவணை 2-ல் தந்துள்ளோம்.   

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

பொதுவாக, நோக்கங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து முதலீடு செய்யும்போது, நேரடி பங்கு முதலீட்டைவிட மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்தது. நோக்கங்கள் ஏதும் இல்லாமல், உங்களுக்குப் போதிய அளவு நேரமிருந்து, அறிவுமிருந்து, மிக நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், நேரடியாகப் பங்கு முதலீட்டை மேற்கொள்ளலாம். நேரடி பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைவிட அதிக ரிஸ்க் / ரிவார்ட் உடையது.

அடுத்த குழப்பம் ஒவ்வொரு கேட்டகிரியிலும், எத்தனை ஃபண்டுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. போர்ட் ஃபோலியோ கச்சிதமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு கேட்டகிரிக்கு ஒரு ஃபண்ட் போதும். ஈக்விட்டி ஃபண்டுகளில் மொத்தத்தில் நான்கு ஃபண்டுகளும், டெட் ஃபண்டுகளில் ஒன்றோ அல்லது இரண்டோ என மொத்தம் ஆறு ஃபண்டுகள் போதுமானதாகும். சரியாகப் பராமரித்தால் மொத்தத்தில் (ஈக்விட்டி + டெட்) ஆறு ஃபண்டுகள், மிகவும் சிறப்பான  போர்ட்ஃபோலியோவை அமைத்துத் தரும்.  

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

இவை தவிர, உங்களின் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் போன்ற முதலீடுகள், உங்களுடைய போர்ட்ஃபோலியோவை முழுமையாக்கும். ஆறு ஃபண்டுகளுக்குத் திட்டமிட்டீர்கள் என்றால்தான், நீண்டகாலத்தில் பராமரிப்புச் சுமையினால் 8 அல்லது 9 ஃபண்டுகளில் நம் போர்ட் ஃபோலியோ முடிவடையும்.

நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய  விருப்பமுடையவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பொதுவாக, நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யும்போது, மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ வைப் போல, அதற்கென ஒரு தனி போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும்.

நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர் களில் பெருவாரியானவர்கள் தவறு செய்வது விலை மலிவாகக் கிடைக்கும் ஊர்பேர் தெரியாத நிறுவனப் பங்குகளை வாங்குவதுதான். ஆகவே, அதை கட்டாயமாகத் தவிர்த்து விடுங்கள். நாம் போர்ட் ஃபோலியோ என்று கூறும்போது,  அனைத்துத் துறை சார்ந்த பங்கு களும் இடம்பெற வேண்டும். மேலும், பங்குச் சந்தை சார்ந்த ஏதாவது ஒரு குறியீட்டை உங்களின் பெஞ்ச் மார்க்காக எடுத்துக்கொள்ளுங்கள்.   

ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் போர்ட்ஃபோலியோ மேஜிக்!

உதாரணத்துக்கு,  நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குறியீட்டில் ஒவ்வொரு துறையும் எந்த அளவுக்குப் பங்கெடுத்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். அதையொட்டி உங்களின் துறை சார்ந்த ஒதுக்கீடும் இருப்பது நல்லது. அதிலிருந்து சில சதவிகிதங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வைத்துக்கொள்ள நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல், அந்தத் துறைக்குள் தலைசிறந்த பங்குகளை ஆராய்ந்து வாங்கவும் நீங்கள் முடிவெடுக்கலாம்.  உதாரணமாக, கடந்த ஆகஸ்ட் 31, 2017-ம் தேதி அன்று  நிஃப்டி 50-ன் துறை சார்ந்த வெயிட்டேஜைத் (அட்டவணை 3) தந்துள்ளோம். குறைவான ரிஸ்க்கில் நேரடியாகப் பங்கு சார்ந்த முதலீட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்த அட்டவணையை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்ள லாம்.  அதேபோல், நிஃப்டி 50-ல் இருக்கும் பங்குகளுக்குள் தேர்ந்தெடுத்து போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்வது ரிஸ்க்கைக் குறைக்கும். அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் நிஃப்டி மிட்கேப் 50, நிஃப்டி 500 போன்ற குறியீடுகளை பெஞ்ச்மார்க்காக வைத்துக்கொள்ளலாம். அந்தக் குறியீடுகளில் உள்ள துறை சார்ந்த வெயிட்டேஜை வைத்து முதலீட்டை மேற்கொள்வது உசிதம். நாம் நமக்கென ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, முதலீடு செய்வதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம். நாம் ஏற்கெனவே சொன்னது போல, ஒவ்வொரு வகை சொத்துகளும் ஒரு சமயத்தில் நல்ல லாபத்தைத் தரும். உதாரணமாக, கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகத் தங்கத்தில் செய்த முதலீடானது நெகட்டிவ் வருமானத்தையே தந்திருக்கிறது. அதேபோலத்தான் ரியல் எஸ்டேட்டும். இதில் அதிகமாக முதலீடு செய்திருப்பவர்கள்,  மனைகளுக்கும், வீடுகளுக்கும் மவுசு குறைந்துள்ள நிலையில், அவற்றை விற்று, முதலீட்டைத் திரும்ப பெறமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இதுவரை டெபாசிட்டையே நம்பியிருந்தவர்கள், இனி அதை மட்டுமே நம்பியிருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்கப் பங்கு சார்ந்த முதலீட்டையே நம்பியிருப்பவர்கள், சந்தை வேகமாக இறங்கும்போதும் கஷ்டப்படவே செய்வார்கள். இவை அனைத்திலும் கலந்து முதலீடு செய்தவர்கள், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அதிக வருமானத்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

மேலும், பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் நமக்குக் கிடைக்கும் நிகர லாபத்தை அதிகரிப்பதில் வருமான வரியும் பெரிய பங்கு வகுக்கிறது. இந்தியாவில் பங்கு சார்ந்த முதலீடுகளை ஒரு வருடத்துக்குமேல் வைத்திருக்கையில், கிடைக்கும்  லாபத்துக்கும்  வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை. டிவிடெண்டாகக் கிடைக்கும் தொகைக்கும் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. ஆனால், தங்கம், டெபாசிட், ரியல் எஸ்டேட் போன்றவற்றிலிருந்து வரும் வருமானத்துக்கு நீங்கள் உரிய வருமான வரியைச் செலுத்த வேண்டும். ஆகவே அவற்றில் உங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்கும், வரிக்குப் பிந்தைய லாபத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதேபோல், நீங்கள் ஒரே ஒரு ஃபண்டில் மட்டும் முதலீடு செய்திருந்தால், அந்த ஃபண்டின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தால், அதன் மூலம் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.  ஆனால், அந்த ஃபண்ட் சரியாக செயல்படாவிட்டால் நஷ்டமே ஏற்படும். 
இளம் வயதினர் ஆரம்ப காலத்தில் போர்ட் ஃபோலியோவை அமைப்பது பெரும்பாலும் எஸ்.ஐ.பி முறையில்தான். அவ்வாறு அமைக்கும் போது, குறைந்தபட்சமாக ஒன்றிரண்டு ஃபண்டு களும் (ஈக்விட்டி + டெட்), அதிகபட்சமாக 4 – 6 ஃபண்டுகளும், மாத முதலீட்டுத் தொகையைப் பொறுத்து, அமைத்துக்கொள்வது சிறந்தது.

ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய்பவர்கள்  செய்யும் பொதுவான தவறு, ரூ.10,000- க்குப்  பத்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி ஆரம்பிப்பது. ரூ.10,000-க்கு இரண்டு ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி ஆரம்பித்தாலே போதும். ஃபண்ட்
போர்ட்ஃபோலியோவில் இருக்க வேண்டிய எஸ்.ஐ.பி-களின் எண்ணிக்கையை அட்டவணை 4-ல் தந்துள்ளோம். இதையும் ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீங்கள் பின்பற்றலாம்.

நாம் மேலே குறிப்பிட்ட நான்கு சொத்து வகைகள் ஒரு நடுத்தர வர்க்கத்து முதலீட்டாளருக்குப் போதுமானதாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் எதிலும், வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம். அதேபோல, திட்டமிட்டு போர்ட்ஃபோலியோ அமைத்துக்கொண்டால், நீண்ட காலத்தில் உங்களுக்குக் குறைவான ரிஸ்க்கில் சிறந்த லாபம் என்பது உறுதி!