நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!”

“பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!”

சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன் பேட்டி

ணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏறக்குறையப் பத்து மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், அதனால் பெரிய நன்மை ஏதும் ஏற்பட வில்லை என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் பேசிய பேச்சுகள் அனைத்துமே அதை உறுதி செய்வ தாகவே இருந்தது. இந்த நிலையில், சரிந்துவரும் நமது பொருளாதார வளர்ச்சி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரனிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தார் அவர். இனி, அவர் நமக்களித்த பேட்டி...    

“பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!”

பணமதிப்பு நீக்கத்தின் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் அடைந்த வெற்றி என்ன, தோல்வி என்ன?

‘‘இந்த நடவடிக்கையினால் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பது குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல்களை வைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை விசாரித்து, அதன் மூலம் வரி வசூலிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கலாம். இதுதான் இந்த நடவடிக்கை மூலம் நடந்த, வெளிப்படையாகத் தெரியும் உருப்படியான விஷயமாகப்படுகிறது. மற்றபடி பொருளாதாரத்தை அமைப்புரீதியாக மாற்றியமைப்பதிலோ, அதை டிஜிட்டல்மயமாக்குவதிலோ (Digitise) வெற்றியை நோக்கிச் செல்லும் எந்த வெளிப்படையான அறிகுறியும் தெரியவில்லை.

தோல்விகள் என்று பார்த்தால் முதலில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் குறைந்தபட்சம் 20 சதவிகிதப் பணமாவது திரும்ப வராமல் போகும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது  ஏமாற்றத்தில் முடிந்தது. இந்த அளவுக்கான பணம் வராமல் போனால், ரிசர்வ் வங்கி மூலம் அரசுக்கு அதிகமான டிவிடெண்ட் கிடைக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு, வங்கிகளுக்குத் தேவைப்படும் மூலதனத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசாங்கம் நினைத் திருக்கலாம். இரண்டாவதாக, டிஜிட்டல்மயப்படுத்தும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆதரவு கிடைக்கவில்லை. மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியானது அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட அதிக இறக்கத்தைக் கண்டிருக்கிறது.’’
 
பணமதிப்பு நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கப் பலரும் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிவிட்டார்கள் என்பது சரியா?

‘‘அப்படித்தான் தெரிகிறது. மக்கள் தங்கள் கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் பல்வேறு வழிகள் மூலம் வங்கிக் கணக்குக்குள் கொண்டுவந்து விட்டார்கள். தங்களிடமிருந்த பணத்தை வெள்ளையாக்குவதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா என்பது வருமான வரித் துறையினரின் ஆய்வுக்குப்பிறகே தெரியும்.’’
 
கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக்க பல வழிகள் உள்ளன என்பதை முன்பே புரிந்துகொள்ளாதது அரசின் தோல்வியைக் காட்டுகிறதா?

‘‘மக்கள் தங்களிடமிருந்த அத்தனை பணத்தையும் வங்கிக் கணக்கில் கொண்டு வந்துவிடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். தவிர, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிப் பணியாளர்கள், தங்கள் வாடிக்கை யாளர்களை அதிகம் கேள்வி கேட்காமல் பணம் டெபாசிட்​ செய்ய அனுமதித்திருக்கிறார்கள்.’’

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யினால் ஏற்படும் நீண்ட கால நன்மைகளைவிட குறுகிய காலப் பாதிப்புகள் அதிகம் என ரகுராம்  ராஜன் சொல்லியிருப்பது சரியா?

‘‘இப்போதைக்குச் சரியென்றே    படுகிறது. இந்த நடவடிக்கையினால் மக்கள் அடைந்த துன்பத்தைப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும், அதைச் செய்தபின் வலிபோக்கும் மருந்தைத் தர வேண்டும். இந்த விஷயத்தில், வலி போக்கும் மருந்து என்னவாக இருக்கும்? அது வரிச் சலுகையாக இருக்கலாம். அல்லது வளர்ச்சிக்கான திட்டங்களாக இருக்கலாம்.”

நமது ஜி.டி.பி வளர்ச்சி குறையக் காரணம், பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிதான் என்று சொல்லப்படுவது எந்த அளவுக்குச் சரி?

‘‘இது எல்லோரும் சொல்கிற கருத்துதான். பணமதிப்பு நீக்கமும், சரக்கு மற்றும் சேவை வரியும் அடுத்தடுத்து நடைமுறைக்கு வந்ததால், இந்த இரண்டினாலும் நமது ஜி.டி.பி வளர்ச்சி குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், உலக அளவில் பலவீனமான பொருளாதார வளர்ச்சி இருப்பதால்தான் நமது பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. நமது ஏற்றுமதியும் குறைந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். பெரிய நிறுவனங்கள், பெரிய அளவில் முதலீடு செய்ய யோசிக்கின்றன. இதனால் நமது மூலதன உருவாக்க விகிதம் குறைந்திருக்கிறது. இந்திய வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பேலன்ஸ்ஷீட்டில் உள்ள பிரச்னைகளே இதற்குக் காரணம். தொழில் நிறுவனங்களும் புதிதாகக் கடன் வாங்குவதில் ஆர்வம் காட்டாமலே இருக்கின்றன.’’

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?


‘‘என்ன செய்ய வேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பதைச் சொல்வது சில சமயங்களில் எளிதான விஷயமாக இருக்கும். மத்திய அரசாங்கமானது ஜி.எஸ்.டி வரியைத் தேவையில்லாமல் சிக்கல் மிகுந்ததாக ஆக்கிவிட்டு, அதை இரண்டே மாதங்களுக்குள் மாற்றி அமைத்திருக்க வேண்டியதில்லை. சொகுசு கார்களுக்கான வரி மாற்றியமைக்கப்பட்டிருப்பது இதற்கு  உதாரணம். வரியை நினைத்தபோதெல்லாம மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடாது.

2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில், தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிக் குறைப்பை அரசாங்கம் பின்பற்றியாக வேண்டும். பிசினஸுக்கு எதிரான, தனியார் நிறுவனங்களுக்கு எதிரான மேடைப் பேச்சுகளை உடனே நிறுத்த வேண்டும். வரித் தீவிரவாதத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். புதிய வேலைவாய்ப்பை  உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். பொதுத் துறை வங்கிகள் கோலோச்சும் வங்கித் துறையில் அதிதீவிரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றைத் தவிர, பொருளாதாரத்தை உயர்த்த வேறு வழிகளே இல்லை.   

“பொருளாதாரம் மோசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்!”

விவசாயிகளுக்கான விதைக் காப்பீடு தொடர்பான  குழப்பங்களை மத்திய அரசாங்கம் உடனே நீக்கி, சரிசெய்ய வேண்டும். இது உடனடியாகத் தேவைப்படும் நல்ல திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. தேசியத் திறன் வளர்ச்சித் திட்டத்தை (National Skill Development Programme) மறுசீரமைத்து மீண்டும் தொடங்க வேண்டும். இப்போது அது சிக்கலில் சிக்கிச் செயலற்றுக் கிடக்கிறது. மேலும், உலக அளவில் 20 முக்கியமான கல்வி நிலையங்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அமைச்சரவை அளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டும்.’’

வேலைவாய்ப்பைப் பெருக்குவதை விட்டுவிட்டு, புல்லட் ரயில் விடுவதினால் நாட்டின் பொருளாதாரம் உயருமா?

‘‘இந்த இரண்டுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. சில சமயங்களில், புல்லட் ரயில் விடுவது போன்ற நடவடிக்கையினால் புதிய தொழில்கள் உருவாகி, அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்படலாம்.  இந்தத் திட்டத்துக்குத் தேவையான பணத்தை ஜப்பான் அரசாங்கம் மிகக் குறைந்த வட்டியில் தருகிறது. இந்தப் பணம் இந்தத் திட்டத்துக்குத் தவிர வேறு எதற்கும் கிடைக்காது. எனவே, இந்தப் பணத்தைக் கொண்டு வேறு திட்டங்களுக்குச் செலவு செய்திருக்கலாம் என்று வாதாடுவது புத்திசாலித்தனமல்ல.’’

- ஏ.ஆர்.குமார்