நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

சஞ்சய் காந்தி

“சார், நாங்க ஏபிசி பேங்க்ல இருந்து பேசறோம். உங்களுக்கு கிரெடிட் கார்டு ஃப்ரீயா தர்றோம்.”

இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும்.  நம்மில் பலர் “வேண்டாம்” என போனை கட் பண்ணியிருப்போம். ஆனால், கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால் தொடர்ந்து விளக்கங் களைக் கொடுக்கத் தொடங்கிவிடு வார்கள்.   

கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

“எங்க கார்டை யூஸ் செஞ்சிட்டு 45 நாளைக்கு அப்புறம் பில் கட்டினாப் போதும் சார்” என அவர்கள் சொல்ல, நாம்  ‘சரி’ என்று சொன்னால் கார்டு நம் கைக்கு வந்துவிடும்.

இவர்கள் நமக்கு எதற்கு இலவசமாக கிரெடிட் கார்டைத் தேடி வந்து தர  வேண்டும் என்கிற ரீதியில் நீங்கள் யோசித்திருக்கிறீர்களா..? 

பலர் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. கிரெடிட் கார்டின்  நடைமுறைகள் என்ன, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் யோசிப்பவர்கள் வெகுசிலர்தான்.

யாரும் லாபமில்லாமல் தேடி வந்து கார்டைக் கொடுப்பார்களா என்ன..?  அவர்களைப் பொறுத்தவரை, நீங்கள் அவர்களுக்குப் பணம் கொட்டும் எந்திரம். அது மட்டுமில்லை. எந்த வங்கியும் இலவசமாகக் கடன் அட்டை தருவதில்லை. ரூ.200 முதல் ரூ.2,000 அல்லது அதற்கு மேலும் வருடாந்திரக் கட்டணம் உண்டு. உங்கள் உபயோகத்தைப் பொறுத்து கட்டணத் தள்ளுபடிகள் கிடைக்கும். ரூ.30,000  கிரெடிட் லிமிட் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்தால், வருடாந்திரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வோம் எனச் சொல்வார்கள். நாமும் தள்ளுபடியைப் பெற, தேவையே இல்லாத நிலையிலும் ரூ.1.5 லட்சத்துக்கு அட்டையைத் தேய்ப்போம்.

பின்னர், குறித்தத் தேதியில் தொகையைச் செலுத்த முடியாமல் தவிப்போம். அப்போதுதான் வட்டிக்கு வட்டி குட்டி போட்டுத் தாமதக் கட்டணம், அதற்கு 18% சேவை வரி... எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எனப் போட்டுத் தாக்கிவிடுவார்கள்.

கிரெடிட் கார்டைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?



அப்படி எதுவும் நடக்காது, நான் சரியான தேதியில் பணம் கட்டிவிடுவேன் எனச் சொல்கிறீர்களா? சந்தோஷம். ஆனால், அதிலும் ஆப்பு இருக்கிறது.  ரூ.30,000 லிமிட் இருக்கும் கார்டில் ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் வரை செலவு செய்ய முடியும். இதில் ரூ.1.5 லட்சம் என்பது 50 சதவிகிதத்துக்கும் கீழ்தான் இல்லையா?

நம்மில் பலருக்குக் கட்டுபாடு என்பது சுட்டுப் போட்டாலும் வராத விஷயம். ரூ.1.5 லட்சம் என்றால், அவ்வளவுதான் செலவு செய்வோமா என்ன..? கிரெடிட் கார்டைத் தேய்க்கப் பழகி விட்டால் அதைத் தேய்க்காமல் இருப்பது மிகவும் சிரமம். நாம் இரண்டு லட்ச ரூபாயோ அல்லது இரண்டரை லட்ச ரூபாயோ சர்வசாதாரணமாகத் தேய்த்துவிடுவோம்.

சரி, அதனால் என்ன என்கிறீர்களா? உங்களுடைய மொத்த ஜாதகமும் ஒவ்வொரு மாதமும் சிபிலில் (CIBIL) பதிவு செய்யப்படும். அந்த ஜாதகம் மொத்தமும் மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களால் பார்க்கப்படும். நீங்கள் வீடு, கார் இன்னும் பிற லோன் கேட்கும்போது, அந்த நிறுவனத்தால் உங்கள் சிபில் ஜாதகம் ஆராய்ச்சி உள்ளாகும். “கிரெடிட் கார்டிலேயே வாழ்ந்திருக் கிறீர்கள். கையில் பணம் இல்லையென்றால் எங்களுக்கு எப்படி இ.எம்.ஐ கட்டுவீர்கள்?” என்ற கோணத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு, கடன் மறுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

கடன் அட்டை வழங்கிய வங்கியின் பெயர், நீங்கள் அட்டை பெற்ற தேதி, உங்கள் கிரெடிட் லிமிட், நீங்கள் அதிகபட்சமாகப் பயன்படுத்திய தொகை, சரியாக அல்லது எத்தனை நாள் தாமதமாக பில் கட்டினீர்கள் என்ற விவரம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் சிபிலில் அப்டேட் செய்யப்படும். இந்த விவரங்கள் ஒருபோதும் அழிக்கப்பட மாட்டாது. கிரெடிட் கார்டு அக்கவுன்டை குளோஸ் செய்துவிட்டாலும் அப்படியே சிபிலில் தொடரும். சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு பல லட்சங்களை இழக்கத் தயாரா நீங்கள்? 

சரி, அப்படியானால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாதா எனக் கேட்பது புரிகிறது. பயன்படுத்தவே கூடாது எனச் சொல்லவில்லை. சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது. நம் எதிர்காலக் கடன் தேவைகளுக்கு நம் இமேஜை உயர்த்திக் கொடுக்கும் வல்லமை அதற்குண்டு.

எப்படி? அதைத் தெரிந்துகொள்ளும் சில விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

முதலில், கிரெடிட் கார்டை வாராது வந்த மாமணியாகக் கருதி, அதைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் லிமிட் என்ன என்று பாருங்கள். பொதுவாக, முதல் முறையில் ரூ.30,000 உங்கள் லிமிட்டாக இருக்கும். 
அத்தியாவசியமான, குறைந்த செலவுகளுக்கு மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துங்கள். கிரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்த வேண்டாம். 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்தினால், உங்களிடம் காசு கையிருப்பு இல்லாததால்தான், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்று புரிந்து கொள்ளப்படும். 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது மிக நன்று. உங்கள் அதிகபட்ச பயன்பாடு சிபிலில் அப்டேட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடன் அட்டையில் பில்லிங் தேதி, உங்களுக்குப் பணம் செலுத்த வசதியான சூழலாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது தான் கிரெடிட் கார்டு பில் கட்டுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னை இருக்காது. தயவுசெய்து உங்கள் வருமானத்தையும், மாத கமிட்மென்ட்டுகளையும், கிரெடிட் லிமிட்டையும் மனதில் வைத்து, கடன் அட்டையைப் பயன்படுத்தினால் நல்லது.

செலவழித்த தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திவிடுங்கள். உங்களால் இதை நினைவில் வைத்துக்கொண்டு செலுத்த இயலாது என்றால், வங்கியின் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஆட்டோ டெபிட் (Auto Debit) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும். வங்கியில் தேவையான அளவு  பனம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கிரெடிட் கார்டு பில்லில், கட்ட வேண்டிய குறைந்தபட்சத் தொகை மற்றும் முழுத் தொகை தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் முழுமையான பில்லைக் கட்டிவிடுங்கள். குறைந்தபட்ச பில் மட்டும் கட்டினால், மீதமுள்ள தொகைக்கு 3 சதவிகிதத் துக்கு மேல் வட்டி கட்ட வேண்டியிருக்கும்.  அது மட்டுமின்றி, அடுத்த மாத பில்லுடன் கூடுதல் சுமையாக வந்து நிற்கும். தாமதமாக பில் கட்டினால், அதுவும் சிபிலில் பதிவு செய்யப்படும். பின்னர் நீங்கள் வேறு கடன் கேட்டால் எந்த நிறுவனமும் தராது.

 ஆன்லைன் பர்ச்சேஸ் என்றால் நம்பிக்கையான இணையதளங்களில் மட்டும் அட்டையைப் பயன்படுத்துங்கள். விலை குறைவு, நல்ல ஆஃபர்  என ஆசைப்பட்டு, பரிச்சயமில்லாத இணைய தளங்களில் கார்டைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கார்டு விவரங்கள் களவாடப்பட்டு பெரும் துயரத்தில் தள்ளிவிட்டுவிடும்.

கிடைக்கிறதே என்பதற்காக கணக்கில்லாமல் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். கையாள்வது கஷ்டம். நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், இருக்கும் கார்டிலேயே லிமிட் அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் போதும்.

எக்கச்சக்க ரகங்களில் கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து வாங்குங்கள். ஷாப்பிங் செய்வர்களுக்கு, அதிகம் பயணம் செய்பவர் களுக்கு, எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எனப் பலவகைகளில் கிடைக் கின்றன. உங்களுக்கேற்ற கார்டை வாங்கினால், சலுகைகளின் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்கு வழங்கிய வங்கியின் இணைய தளத்துக்குச் சென்று, உங்கள் அட்டைக்கான சலுகைகளைத் தெரிந்துக்கொண்டு பயன்படுத்தி னால் பணத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் முன்னிலையில் மட்டுமே அட்டையைப் பயன்படுத்துங்கள். ஓட்டல், கடை பணியாளரிடம் கொடுத்து அனுப்பி பயன்படுத்த வேண்டாம். உங்கள் அட்டையைப் பிரதியெடுக்க வாய்ப்புள்ளது.

இவற்றை எல்லாம் சரியாகக் கடைப்பிடித்தால் உங்களுக்கு இன்னொரு பெரிய நன்மையும் கிடைக்கும். உங்கள் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். சிபில் ஸ்கோர் 300-ல் இருந்து 900 வரை கணக்கிடப்படும். 750-க்கும் குறைவாக இருந்தால் உங்களுக்குக்  கடன் தர மாட்டார்கள். அப்படியே தந்தாலும், மீட்டர் வட்டி, ரன் வட்டியாக வசூலிப்பார்கள். 750-க்கும் மேல் இருந்தால் போட்டிப் போட்டுக் கடன் கொடுக்கமுன் வருவார்கள். வட்டியும் குறைவாக இருக்கும்.

வங்கியில் இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை வைத்தெல்லாம் கிரெடிட் கார்டு வாங்குபவர்கள் உண்டு. ஏனெனில், அவர்களுக்குப் போதுமான அளவு சிபில் ஸ்கோர் இருக்காது. ஃபிக்ஸட் டெபாசிட்டை வைத்து, கிரெடிட் கார்டை வாங்கி, அதை முறையாகப் பயன்படுத்தி சிபில் ஸ்கோரை உயர்த்தி எதிர்காலக் கடன்களை உறுதி செய்பவர்கள் ஏராளம். எனவே, கடன் அட்டை தவறானதில்லை, நாம் சரியாக பயன்படுத்தும் வரை!