நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?

ஜி.எஸ்.டி கேள்வி பதில்கள்ஜி.கார்த்திகேயன் ஆடிட்டர், கோவை

நான் சிறிய நகைக்கடை வைத்துள்ளேன். தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை விற்று வருகிறேன். தங்க நகைகளுக்கு 3% ஜி.எஸ்.டி வரி என்று தெரியும். ஆனால், வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் வரும் என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா?

எஸ்.பரந்தாமன், மாயவரம்    

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?

‘‘தங்க நகைகளுக்கான வரிவிதிப்பைப் போன்றே வெள்ளி நகைகளுக்கும் 3 சதவிகித வரிதான் விதிக்கப்படும். இது 71 ஹெச்.எஸ்.என் கோட்-க்குக் கீழே வரும். எனவே, 3 சதவிகித வரிதான் இதற்குப் பொருந்தும்.’’

எங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள் தொழில் காரணமாக மும்பை மற்றும் வட மாநில விடுதிகளில் தங்கும்போது அதற்கான விலைப் பட்டியலில் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.சி.எஸ்.டி வசூலிக்கின்றனர். இவ்வாறு பிற மாநிலங்களில் வசூலிக்கப்படும் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.சி.எஸ்.டி-யை இங்கே உள்ளீட்டு வரியாகப் பெற முடியுமா? இதற்கான தீர்வு என்ன?

மூர்த்தி, திண்டுக்கல் 

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?‘‘மற்ற மாநிலங்களில் பெறப்படும் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.சி.எஸ்.டி-யை அந்த மாநிலத்தில் வெளியீட்டு வரி இருந்தால் சரிசெய்து கொள்ள முடியும். இதற்கான உடனடித் தீர்வு,  உங்களுடைய நிறுவன விற்பனை அதிகாரிகள் தங்கும் விடுதிகளின் பதிவை மேக் மை டிரிப் (Make my trip) போன்ற இணையதள சேவை வழங்குநர் மூலம் செய்தால், அவர்கள் ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிப்பார்கள். அத்தகைய ஐ.ஜி.எஸ்.டி வரியை சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி-யில் சமன் செய்துகொள்ள முடியும்.’’

மின்சாரப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளேன். தற்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய ஜி.எஸ்.டி.ஆர் டிரான் 1 படிவத்தைத் தாக்கல் செய்யும்போது சில விவரங்களை விட்டுவிட்டேன். இப்போது டிரான் படிவத்தில் மாற்றங்கள் செய்ய முடியுமா?

எம்.செந்தில்குமார், ஆத்தூர்


‘‘ஜி.எஸ்.டி.ஆர் டிரான் படிவம் தாக்கல் செய்வதற்கான தேதி தற்போது ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தைச் செய்து அக்டோபர்    31-ம் தேதிக்குள் டிரான் 1 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த டிரான் 1 படிவத்தில் மாற்றம் செய்ய ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே, ஏதேனும் விடுபட்டிருந்தால் மாற்றம் செய்து நீங்கள் தாக்கல் செய்து கொள்ளலாம்.’’

நான் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இந்தச் சூழ்நிலையில் நாங்கள் ஜி.எஸ்.டி பதிவு செய்யாத ஒருவரிடம் பொருள்கள் வாங்கினால் இதற்காக வரி செலுத்த வேண்டுமா? இதில் சில உச்சவரம்பு உள்ளதாக கூறுகிறார்களே!

ஸ்ரீபிரியா, கும்பகோணம்


‘‘நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ரிவர்ஸ் சார்ஜ் (Reverse Charge) முறையில் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரு நாளைக்கு ரூ.5,000 வரை வாங்கப்படும் பொருள்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த முறை உள்மாநிலத்துக்கு  மட்டும்தான் பொருந்தும். நீங்கள் வாங்கும் பொருள்கள் ரூ.5,000-த்தைத் தாண்டும்போது அதனைக் கணக்கில் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு மொத்தமாக வரி செலுத்தலாம்.’’

எங்கள் நிறுவனம் கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றைப் பல மாநிலங்களில் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ஜி.எஸ்.டி பதிவு செய்துள்ள நாங்கள், இத்தகைய கண்காட்சி பரிவர்த்தனைகளுக்கு எவ்வாறு வரி செலுத்துவது?

அமலா, கரூர்


‘‘மற்ற மாநிலங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி-யில் நிரந்தரமற்ற வர்த்தகர் (Casual Person) என்கிற அடிப்படையில் ஜி.எஸ்.டி-யில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பதிவு 90 நாள்களுக்குச் செல்லுபடியாகும். மேலும், இதற்கான உத்தேச வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.’’

நான் உடற்பயிற்சி மருத்துவராக (Physiotharapist) சுயதொழில் செய்து வருகிறேன். எனது ஆண்டு வருமானம் ரூ.20,00,000-த்தைத் தாண்டி விடும். இந்த நிலையில் நான் ஜி.எஸ்.டி வரிக்கு உட்பட்டவனா ? காரணம் நான் நேரடி மருத்துவத்துறையில் இல்லாததால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

அன்னபூரணி குமரேஷ், சேலம்


‘‘நீங்கள் செய்துகொண்டிருக்கும் உடற்பயிற்சி மருத்துவம் என்பது மருத்துவம் சார்ந்த சேவையில் தான் வரும். மருத்துவம் சார்ந்த சேவைகள் ஜி.எஸ்.டி-யில் கொண்டுவரப்படவில்லை என்பதால் நீங்கள் ஜி.எஸ்.டி-க்கு உட்பட வேண்டியதில்லை.’’ 

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு வரி வித்தியாசம் உண்டா?