மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!

செல்லமுத்து குப்புசாமி

ன் நண்பர் ஒருவர் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவதொரு மாற்றம் இருக்க வேண்டும் என்பார். புதிய திறமைகள் எதையாவது வளர்த்திருக்க வேண்டும். புதுத் தொழில்நுட்பம், புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது, வீடு, வாசல், நிலபுலன்கள் உள்ளிட்ட உடைமைகளை வாங்கிச் சேர்ப்பது, பர்சனல் ஃபைனான்ஸ் விஷயத்தில் மேம்பட்டிருப்பது, தனது நெட்வொர்த் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருப்பது, தீர்க்க முடியாமல் நீண்ட நாள்களாக இழுத்துவரும்  பிரச்னைகளைத் தீர்ப்பது... என மாற்றம் என்பது அவர் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்பார்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!

எந்த மாற்றமும் இல்லையென்றால், செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில் நாம் சுற்றிவர ஆரம்பித்துவிடுவோம். அது நமக்கு நிச்சயம் நல்லதல்ல.  போட்டி மிகுந்த இந்த உலகத்திலிருந்து நம்மைக் காலாவதியாகாமல் தக்க வைத்துக்கொள்வதும், தொடர்ச்சியாக நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வதும் இன்றியமையாதவை.

நமது வாழ்க்கை ஒப்பீடுகளால் ஆனது. “என்னை அடுத்தவனோட கம்பேர் பண்ணாதே” என்று பேசுவோம். ‘நேற்று நாம் எப்படியிருந்தோம்; இன்று எப்படியிருக்கிறோம்; நாளை எப்படி இருக்க வேண்டும்? இந்த மூன்றைத்தான் ஒப்பிட வேண்டுமே தவிர, அண்டை வீட்டுக்காரரோடு என்னை நான் ஒப்பிட விரும்பவில்லை’ என நாம் கருதலாம்.

மற்றவர்களோடு ஒப்பீடு  செய்வதொன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை. நமது பலம், பலவீனம் பற்றிய சிந்தனைகளைத் தாண்டிச் சுற்றிலுமிருக்கிற வாய்ப்புகள், சவால்களைப் பற்றிய புரிதலுக்கு அவை அடிகோலும். 

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!நாம் பங்குகளில் முதலீடு செய்யும்போது ஒரு நிறுவனத்தை, அதே துறையில் இயங்கும் ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடுவோம். அந்தத் துறையின் நம்பர்-1, நம்பர்-2 கம்பெனிகளோடு ஒப்பீடு செய்வோம். ஏனென்றால், ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு பெஞ்ச்மார்க் ஒன்று கட்டாயம் தேவை. அப்படி நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று PEG விகிதம்.

இந்த PEG-ல் PE என்பது நாம் ஏற்கெனவே கவனித்த பங்கு விலைக்கும் (P), ஒரு பங்கு ஈட்டுகிற லாபத்துக்கும் (E) இடையேயான PE விகிதமேயாகும். குறைவான PE-ல் கிடைக்கும் பங்குகள் மலிவானவை என்றும், அதிக PE-ல் விற்பனையாகும் பங்குகள் ஆபத்தானவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.  வேறுபடுகிற இரு PE விகிதங்களுக்கான காரணங்களை ஆராய்வது முக்கியம்.

ஒரு குறிப்பிட்ட துறையில் A மற்றும் B என இரு நிறுவனங்கள் உள்ளன. இதை மேலோட்டமாக நோக்கினால் B அதிக விலைக்கு விற்பது போலவும், A மலிவாக உள்ளது போலவும் தோன்றலாம். ஆனால், இவை எவ்வாறு வளர்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிலைப்பாடு மாறுதலுக்கு உள்ளாகும். (பார்க்க, அட்டவணை-1)

A ஆண்டுக்கு 10% வளர்ச்சியடைகிறது. மாறாக, B ஆண்டுக்கு 30% வளர்கிறது. அப்படி வளரும் போது ஐந்தாண்டுகள் கழித்து அவற்றின் லாபம் (E) எவ்வளவாக இருக்கும்?

நிறுவனம் A-ன் தற்போதைய ரூ.10 லாபம், 5 வருடங்கள் கழித்து ரூ.16.11-ஆக வளர்ந்திருக்கும். நிறுவனம் B, ஆண்டுக்கு 30% வளர்ந்து, அதன் லாபம் 37.13 ரூபாயாக உயர்ந்திருக்கும். 

அப்போதும் A-ன் PE  விகிதம் 10-ல் இருந்தால், அதன் பங்கு விலை ரூ 161.10-ஆக உயர்ந்திருக்கும்.  B அதே அளவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் என்றால், அதே 25 PE-ல் விற்பனை ஆகும் சாத்தியங்கள் அநேகம்.  அப்படியானால் அதன் பங்கு விலை 37.13 X 25=932.50 ரூபாயாகப் பெருகியிருக்கும்.    

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி!

ஒருவேளை B-ன் வளர்ச்சி வாய்ப்புகள் ஐந்தாண்டுகள் கழித்துக் குறைந்து, படிப்படியாக அதன் PE  20-க்கு வந்தாலும் பங்கு விலை     ரூ.746-க்கு ஆக இருக்கும். இன்னும் கீழே 15-க்கே இறங்கினாலும், அதன் பங்கு விலை ரூ.559.9-ஆக இருக்கும்.

ஆக, நிறுவனங்கள் என்ன வேகத்தில் வளர்கின்றன என்பது முக்கியம். 10%, 30% எனக் குறிக்கப் படும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் தான் G எனப்படுகிறது. சுருக்கமாக, PE-க்கும், G-க்கும் இடையேயான விகிதமே PEG ஆகும் (பார்க்க, அட்டவணை- 2)

பொதுவாகவே, PE 1-க்கு மேலே நிலவும் கம்பெனிகள் கவனிக்கத் தக்கவை. மந்தமான கம்பெனிகளை விட சுறுசுறுப்பாக வளர்கிற கம்பெனிகளுக்கு எப்போதுமே முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. வருடா வருடம் ஏதேனும் மாற்றம், வளர்ச்சி, மேம்பாடு இருப்பது தனி நபர் களைப் போலவே நிறுவனங்களுக் கும் அவசியம். இல்லாவிட்டால் அவை காணாமல் போய்விடும்.

கம்பெனியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டு, மாற்றங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை செயல்படுத்தும் அதே சமயம், முதலீட்டாளர்களின் நலனை முன்னிறுத்தும் நிர்வாகம் அமைந்தால் மட்டுமே அது சாத்தியம்.

நமது உடல் பருமன், கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ரிப்போர்ட்களை  பார்க்கும் டாக்டர்கள், ‘தினம் எவ்வளவு தூரம் நடக்கிறீங்க? பிசிக்கல் ஆக்டிவிட்டி என்ன பண்றீங்க? இனி மேல் தினமும் ஒரு கிலோ மீட்டர் ஓடுங்க... வெறும் பத்து நிமிஷம்தான் ஆகும். அதைப் பிறகு தினம் 100 மீட்டராக அதிகரிச்சுக்கலாம்” என்று சொல்வார். நமது ரிப்போர்ட்டையும், நம்மையும் பத்து நிமிடம் பார்த்தாலே இப்படி புட்டுப்புட்டு வைக்கும் டாக்டரைப் போல, ஷேர் மார்க்கெட்டை ஆராயும்போது சில எண்களைப் பார்த்துவிட்டு (quantitative) அந்த எண்ணுக்கான காரணங்களை (qualitative) ஆராய்ந்தால், நமக்குப் பல உண்மைகள் புலப்படும். PEG என்பது அது மாதிரியான ஒரு முக்கியமான அளவீடு.

சில நேரம் ஒட்டுமொத்த துறையுமே வளர்ச்சிப் பாதையில் நடைபோடும். சில துறைகளில் எல்லா நிறுவனங்களும் சீரான வேகத்தில் வளரும்போது, ஓரிரு நிறுவனங்கள் மட்டும் கூடுதலாக வளரும். அதுதான் கவனிக்க வேண்டியது.

கவிஞர் ஒருவரிடம் பேட்டி ஒன்றில், “நீங்கள் சினிமாவுக்குப் பாட்டெழுத வராமலிருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?” என்று கேள்வி கேட்டார்கள். ‘‘எங்கள் ஊரில் தேநீர் கடை வைத்திருப்பேன். அப்போதும் இந்தியாவிலேயே சிறந்த தேநீர் கடை என்று பெயரெடுத்திருப்பேன்” என்று பதில் அளித்தார்.

சில நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை,  துறைகளை, வாழ்க்கையின் போக்குகளை மாற்றும். அதன் வாயிலாக வளரும். அவை வித்தியாசமான விஷயங்களைச் செய்கிறவையாக இருக்கும். அவை வேகமாக வளரக்கூடிய துறைகளாக இருக்கும்.

இன்னொரு பக்கம் ஆண்டாண்டு காலமாகச் செய்கிற காரியத்தை வித்தியாசமாகச் செய்வதும் இருக்கிறது. திருச்சி மற்றும் கோவை வானொலி யிலும் நான் கேட்டு வளர்ந்த ‘ஜெமினி காபி தாராபுரம் - ஜெமினி காபி காங்கேயம்’ இப்போது இல்லை. ஆனால், ஈரோட்டில் சைக்கிளில் மிளகாய்ப்பொடி விற்றவர் தொடங்கிய சக்தி மசாலா, பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்திருக்கிறது. காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை வளர்த்துக் கொண்டதுதான். அப்படிப்பட்ட பங்கு நிறுவனங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

(லாபம் சம்பாதிப்போம்)

சென்செக்ஸ் வளர்ச்சியை ஓவர்டேக் செய்த எல்.ஐ.சி!

ந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சியில் எப்போதுமே எல்.ஐ.சி-யின் பங்கு உண்டு. அதன் முதலீடு அவ்வளவு சிறப்பாகவும் பெரிய அளவிலும் இருக்கும். அந்த அளவுக்குச் சந்தைக் குறியீடுகளின் ஏற்றத்துக்கு எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் வழிவகுத்துள்ளன. அந்த ஏற்றத்தின் மூலம் எல்.ஐ.சி தனது முதலீடுகளில் நல்ல வருமானமும் ஈட்டியிருக்கிறது. எல்.ஐ.சி, பட்டியலிடப்பட்ட 375 நிறுவனங்களின் பங்குகளைத் தன்வசம் வைத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் எல்.ஐ.சி-யின் டாப் 100 பங்குகள் 89 சதவிகித வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. இது சென்செக்ஸ் அடைந்த வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும்.

சென்செக்ஸ் இந்தக் காலகட்டத்தில் 68% வளர்ச்சி அடைந்தது, பிஎஸ்இ-யின்100 பங்குகள் 87% வளர்ச்சி அடைந்தன. எல்.ஐ.சி-யின் டாப் பங்குகளில் மாருதி சுஸூகி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  இரண்டும் முறையே 313% மற்றும் 213% வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன.