மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ப்பலில் பொருள்களை ஏற்றும்முன்       (Shipment) தேவையான ஆவணங்கள் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இப்போது, கப்பலில் பொருள்களை ஏற்றியபின் தேவைப்படும் ஆவணங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். இந்த ஆவணங்களை ஏற்றுமதியாளர், வங்கியாளர், சி.ஹெச்.ஏ லைனர் ஆகியோர் தயார் செய்வார்கள்.  

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்!

கப்பலில் பொருள்களை ஏற்றியபின் தேவைப் படும் ஆவணங்கள் நான்கு. 1. பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் (Bill of Exchange), 2. பேங்க் கவரிங் லெட்டர் (Bank Covering letter), 3. பில் ஆஃப் லேடிங் (Bill of Lading), 4. எக்ஸ்போர்ட்டர் காப்பி (Exporter Copy).

பில் ஆஃப் எக்ஸ்சேஞ்சுடனான, பேங்க் கவரிங் லெட்டர், பில் ஆஃப் லேடிங், எக்ஸ்போர்ட்டர் காபி ஆகிய ஆவணங்களை சிஹெச்ஏ மூலமாக நாம் தயார் செய்ய  வேண்டும்.  பின்னர், இந்த ஆவணங்களை வங்கியில்  கொடுக்க வேண்டும். ஏற்றுமதி ஆவணங்களுக்கான வங்கி நடைமுறைகளைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். எக்ஸ்போர்ட்டர் காபி என்பது ஷிப்மென்ட் நடைமுறையில் இறுதியாகக் கொடுக்கப்படும் ஆதார ஆவணமாகும். மற்றொரு ஆவணம் இபிஆர்சி (eBRC). இபிஆர்சி ஆவணமானது ஷிப்மென்டுக்கான பணம்  நமக்கு இறக்குமதியாளரிடமிருந்து வந்தபிறகு வங்கியால் வழங்கப்படுவதாகும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்!பில் ஆஃப் லேடிங் என்பது நம்முடைய சரக்கை எடுத்துச் செல்வதற்கான ஆவணம் ஆகும். விமானத்தில் செல்வதாக இருந்தால், ஏர்வே பில் (Airway Bill) என்று சொல்லப்படும். கப்பல் மூலம் அனுப்புவதாக இருந்தால், கப்பலுடைய முதலாளியானவர் நம்முடைய சரக்கு குறித்த விவரங்கள் அனைத்தையும் கொண்டு இந்த ஆவணத்தை உருவாக்குவார். அதாவது, என்ன பொருள், யாரிடமிருந்து யாருக்கு, எங்கிருந்து எங்கே போகிறது, இன்வாய்ஸ் நம்பர், ஐ.இ கோட் ஆகிய விவரங்களையெல்லாம் கொண்டு ஆவணம் தயார் செய்வார். இந்த ஆவணத்தை வைத்துத்தான் பொருள்கள் சென்று சேரவேண்டிய துறைமுகத்தில் சரக்கை க்ளியர் செய்ய முடியும். இந்த பில் ஆஃப் லேடிங் ஆவணத்தில் மூன்று வகைகள் உள்ளன. 1. மாஸ்டர் பிஎல் (Master BL), 2. ஃபார்வேடர் பிஎல் (Forwader BL), 3. ஸ்விட்ச் பில் (Switch Bill). 

மாஸ்டர் பிஎல் என்பது கப்பலுடைய ஓனர் அல்லது லைனர் என்பவரே நேரடியாக நமக்குத் தருவதாகும்.  ஃபார்வேடர் பிஎல் என்பதை ஹவுஸ் பிஎல் என்றும் சொல்வார்கள். இது நேரடி யாக கப்பல் ஓனர் மூலம் செயல்படுத்தப்படாமல் ஏஜென்ட் மூலமாக வழங்கப்படுவதாகும்.

ஸ்விட்ச் பில் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு பொருளை நாம் சென்னை யிலிருந்து புரூனேவுக்கு அனுப்புகிறோம் எனில், அந்தப் பொருளைப் பெறுபவர் நம்முடைய நேரடி வாடிக்கையாளராக இருக்கமாட்டார். நம்மிடமிருந்து பொருளை வாங்கும் பார்ட்டி சிங்கப்பூரில் இருப்பார். ஆனால், பொருள் புரூனேவில் இருக்கும் வேறொரு நபருக்குப் போய்ச்சேரும். ஆவணங்கள் மட்டும் சிங்கப்பூர்க்காரருக்குப் போகும். நமக்குப் பணமும் சிங்கப்பூரில் இருப்பவரிடமிருந்துதான் வரும். அவர் அந்த ஆவணத்தை, புரூனேவில் இருப்பவர் சரக்கை க்ளியர் செய்யும் வகையில் மாற்றி, புதிதாக மாஸ்டர் பிஎல் அல்லது ஹவுஸ் பிஎல் ஆவணமாகத் தயார் செய்வார். நாம் ஸ்விட்ச் பில்லாக ஆவணங்களைத் தயார் செய்திருந்தால் தான் அவரால் அந்த ஆவணங்களை மாற்றி அனுப்ப முடியும். அவர் புரூனேவில் இருப்பவருக்கு அனுப்பும் ஆவணங்களில் நம் விவரங்கள் எதுவும் இருக்காது.

இந்த முறையை ஏன் பயன் படுத்துகிறாரென்றால், இறக்குமதி யாளருக்கு நம் விவரங்கள் தெரிந்தால், அவர் நேரடியாக நம்மிடம் பொருளை வாங்க முயற்சி செய்வார். பிறகு நம்மிடமிருந்து வாங்கி அவருக்கு விற்பவருக்கு பிசினஸ் இல்லாமல் போய்விடும். புரூனேவில் பொருளை எடுப்பவருக்கு சிங்கப்பூர்க்காரர்தான் ஏற்றுமதியாளர்; நீங்கள் அல்ல. இந்த முறையில் ஏற்றுமதி செய்யும் போது நாம் இந்த ஸ்விட்ச் பில்லை ஸ்விட்ச் அட் சிங்கப்பூர் (Switch at Singapore) என்று தயார் செய்ய வேண்டும். ஸ்விட்ச் பில் அல்லாமல் மாஸ்டர் அல்லது ஹவுஸ் பிஎல் கொடுத்தால் அவரால் ஸ்விட்ச் செய்ய முடியாது. எனவே, பில் ஆஃப் லேடிங் ஆவணத்தைத் தயார் செய்வதற்கு முன்பு, இதுபற்றி நமது இறக்குமதியாளரிடம் அவருக்கு இந்த மூன்றில் எந்த வகை பிஎல் தேவை என்று கேட்டு பின்னரே தயார் செய்ய வேண்டும்.

பில் ஆஃப் லேடிங் ஆவண முறைகளில் இவை மூன்றும் அல்லாது நான்காவதாக ஒன்று உள்ளது. அதுதான் சரண்டர் பிஎல். இது ஆபத்தானதாகும். அதாவது, இறக்குமதியாளர்கள் சில நேரங்களில்,  ‘பிஎல் ஒரிஜினல் ஆவணத்தை வங்கியில் சரண்டர் செய்துவிடுங்கள், அதனுடைய நகலை மட்டும் எனக்கு ஸ்கேன் செய்து மெயிலில் அனுப்பி விடுங்கள்’ என்று சொல்வார்கள். அப்படி அவர்கள் சொன்னபடி, நாம் பில் ஆஃப் லேடிங் ஆவணத்தை சரண்டர் செய்துவிட்டு அவருக்கு நகல்களை அனுப்பி வைத்தோமானால், இறக்குமதியாளர் எந்த ஒரிஜினல் ஆவணங்களும் இல்லாமலேயே நம் பொருள்களை க்ளியர் செய்து எடுத்துவிடுவார்கள். இந்த முறையில் பணம் தராமல் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், மிகவும் கவனம் தேவை.

ஏமாற்றும் வாய்ப்பு இருப்பது தெரிந்தும் இந்த முறை செயல்படுத்தப்பட சில காரணங்கள் உள்ளன. ஆவணங்கள் இருந்தால்தான் எடுக்க முடியும் எனும்போது அதற்கான நடைமுறை களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் அவசியம் தேவை.  எனவே,  மிக விரைவாக பொருள்கள் தேவை என்ற சூழலில், இந்த முறை எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் இந்த சரண்டர் பிஎல் முறையை, அட்வான்ஸ் பணம் தந்தவர்கள், நன்கு  தெரிந்தவர்கள், நம்பிக்கை யானவர்களுக்கு மட்டுமே செயல்படுத்துவது நல்லது. அப்படி இல்லையெனில், இந்த முறையைத் தவிர்த்து விடுங்கள். எக்ஸ்பிரஸ் பில் எனப்படும் ஏர்வே வழியாக அனுப்பும் ஷிப்மென்ட்டு களுக்கான முழுப் பணமும் வந்தபிறகுதான் அனுப்ப வேண்டும். உதாரணமாக, காய்கறிகள், பழங்கள். 

இந்த ஆவணங்களையெல்லாம் தயார் செய்த பின்னரே நாம் வங்கி நடைமுறைகளைச் செயல்படுத்த முடியும். வங்கி நடைமுறைகள் மூலம் மட்டுமே, நாம் அனுப்பும் பொருளுக்கான பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை சாத்தியம் ஆகும். வங்கி நடைமுறைகள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

(ஜெயிப்போம்)