நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!

வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: டிஸ்ரப்ட் யுவர்செல்ஃப் (Disrupt Yourself)

ஆசிரியை: விட்னி ஜென்ஷன் (Whitney Johnson)

பதிப்பாளர்: பெர்ஷுஸ் (Perseus)

‘மாற்றம்தான் நிரந்தரம்’ - எல்லோருமே சொல்லும் வார்த்தைகள் இவை. ஆனால், நம் வாழ்க்கையிலும், பிசினஸிலும் இதைப் பின்பற்று கிறோமா என்றால் அதுதான் இல்லை. இருக்கும் நிலையைத் தகர்த்தெறிந்து, சீர்குலைக்கும் புதுமையைத் (Disruptive Innovation) தனிமனிதர்களும் எப்படி நடைமுறைப்படுத்தி வெல்லலாம் என்பதை ‘டிஸ்ரப்ட் யுவர்செல்ஃப்’ என்கிற புத்தகத்தில் சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்  வைட்னி ஜான்சன் என்னும் பெண்மணி.     

வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!

பிசினஸில் புரட்டிப்போட நினைக்கும் நிறுவனங்கள், முதலில் குறைந்த லாபம் கொடுக்கும் அடிப்படை நிலை பொருளைத் தயாரிப்பதன் மூலமே ஒரு சந்தையில் பங்கேற்க ஆரம்பிக்கின்றன. உதாரணமாக, 1950-களில் ஜப்பானிய நிறுவனமான டொயொட்டா அமெரிக்காவில் கால்பதித்தது. அங்கே அந்தச் சமயத்தில் அது அறிமுகப்படுத்திய கார் ‘கொரோனா’ என்னும் குறைந்த பட்ஜெட் கார். கார் என்று ஒன்று இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் வாங்கக்கூடிய விலையில் ‘கொரோனா’ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் சூழலில் ஏனைய கார் நிறுவனங்கள் எதுவும் டொயோட்டாவைக் கண்டுகொள்ளக்கூட இல்லை.

பின்னர் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. பெரிய நிறுவனங்கள் நினைத்தால், அந்த நிலையிலேயே டொயோட்டாவை ஒரு கொசுவை அடிப்பதுபோல் அடித்து நசுக்கிவிட்டிருக்க முடியும். ஆனால், ‘இதெல்லாம் ஒரு கார். இது விற்கிறது என நாமெல்லாம் கவலைப்பட வேண்டுமா?’ என நினைத்தன பெரிய நிறுவனங்கள். ஜெனரல் மோட்டாருக்கு இது குறித்த கவலையே இல்லை. ஆனால், அந்தக் கவலை வந்த வேளையில் நிலைமை கையை மீறிப் போயிருந்தது.  அதற்குள் டொயோட்டா, பிரீமியம் கார்களான ‘கேம்ரி’  மற்றும் ‘லெக்சஸ்’ கார்களை அறிமுகப்படுத்திவிட்டது. பங்குச் சந்தையிலோ டொயோட்டா நிறுவனம் மேல்நோக்கி முன்னேற ஆரம்பித்து, ‘அய்யய்யோ, அந்தப் பங்கை வாங்காமல் விட்டுவிட்டேனே’ என்று புலம்புவர்கள் இன்றைக்கும் ஏராளமாக இருக்கிறார்கள்.

இதேபோல்தான் நாம் பார்க்கும் வேலை மற்றும் தொழில்களிலும் நம்முடைய நிலை இருக்கிறது. ‘‘இந்தப் புத்தகம் டிஸ்ரப்ஷனை எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றி சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல. நம்மை நாமே டிஸ்ரப்ட் செய்துகொள்வது எப்படி என்பதைச் சொல்வதற்காக எழுதப்பட்டது’’ என்கிறார் ஆசிரியை.   

வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!

எல்லாம் நல்லாத்தானே போய்க்கொண்டி ருக்கிறது. எதற்கு நாம் டிஸ்ரப்ட் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். டிஸ்ரப்ஷன் என்பது முதலில் பணியிடத்தில் நமக்கு வந்துவிட வாய்ப்புள்ள தேக்கநிலையைத் தவிர்க்க உதவும்.  புதிதாக வந்தவர்கள் நம்மை முந்திச் செல்வதைத் தடுக்கவும் நம்முடைய வேலையில் நாம் வேகமாக முன்னேற்றமடையவும் அது நமக்கு உதவும் என்கிறார் ஆசிரியை. நம்முடைய பணியிடச் சூழல் மேலே தரப்பட்டுள்ள ‘S curve’  போன்ற நிலைமையிலேயே இருக்கும்.

வேலைக்குச் சேருவோம். வேலை பழகுவோம். சரியான சூழலில் இவன் யாரென்று தெரிகிறதா என்ற வாய்ப்பு நமக்கு அலுவலகத்தில் கிடைக்கும். அதைத் தொடர்ந்து வேகமான வளர்ச்சி வரும். அதன் பின்னால், அவர்தானே எல்லாம் என்ற நிலைமை அலுவலகத்தில் வந்துவிடும். எந்த ஒரு தொழிலும் இதே நிலையைத்தான் தனது செயல்பாடுகளின்போது சென்றடையும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, எப்போது  ‘saturation’ என்ற மந்தமான நிறைவு நிலை வருகிறது என்பதைக் கண்டறிதல் கொஞ்சம் கடினமாக இருக்கும்.

ஆனால், பணியிடத்தில் தனிமனிதனால் சுலபத்தில் அதை உணர்ந்துகொள்ள முடியும்.   ஒரு நிலைக்கு மேல் நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் பெரிதாகச் சாதிக்க முடியாது. அல்லது நாம் சாதிப்பதெல்லாம் சாதனையாக மேலிடத்துக்குத் தெரியாது.  இதனாலேயே நமக்கு நாமே செய்துகொள்ளும் டிஸ்ரப்ஷன், நம்மை இந்த மந்தமான நிறைவு நிலையை அடையாமல் பார்த்துக்கொள்கிறது என்கிறோம். 

உதாரணத்துக்கு இந்த நிறைவு நிலை வருவதற்கு முன்னால் வேறு நிறுவனத்துக்கு நாம் பணிமாற்றம் செய்துகொண்டால் எப்படி இருக்கும்? ஆனால் ஏன் இப்படி செய்யவேண்டும், இப்பதான் இங்கே நான் ஒரு ஆளாய் ஆகியுள்ளேன் என்று நினைத்தால் சிக்கல்களே வரும். பத்தோடு பதினொன்றாக அப்படியே இருந்துவிட வேண்டியதுதான் என்ற நிலைமை வந்துவிடும். இதைத் தவிர்க்கத்தான் டிஸ்ரப்ஷன் தேவைப்படு கிறது. இப்படி நம்மை டிஸ்ரப்ட் செய்துகொள்வதன் மூலம் புதிய பணிக்குச் செல்கிறோம். அங்கே மீண்டும் புதிய விஷயங்களைச் செய்து நாம் நம்மை ஒரு முக்கியப் புள்ளியாகக் காட்டிக்கொள்ள முயல்கிறோம். நமது அறிவுக்கூர்மையும் செயல்திறனும் சிறப்பாகக் கூர்மைப்படுத்தப்படும் அதேவேளையில் அங்கீகாரங்களும் கிடைக்க ஆரம்பிக்கின்றன இல்லையா என்கிறார் ஆசிரியை. 

வெற்றிக்கு வழிவகுக்கும் புதுமை!



‘‘ஏற்கெனவே இருந்த இடத்தில் செளகர்யமாக இருக்கிறது என்று நினைத்துத் தொடர்ந்திருந்தால் நம் திறமைகளும் கூர்மைப்படுத்தப்பட்டிருக்காது, அங்கீகாரமும் கிடைத்திருக்காது என்பதே உண்மை.

நான் இங்கே வேலைக்கு வரும்போது எல்லாம் குழப்பமாக இருந்தது. எல்லாவற்றையும் சரி செய்து சூப்பராக செட் செய்துவிட்டேன். இப்போது ஒரு பிரச்னையும் இல்லாமல் ஜாலியாக இருக்கிறேன் என்ற நிலை மனதில் தோன்றும் வேளையிலேயே இது சரிப்படாது என்ற அலாரமும் மூளையில் அடிக்கவேண்டும். “ஆண்டவன் ஒருவனை அழிக்க வேண்டும் என்று நினைத்து விட்டான் என்றால் அவனுக்கு அத்தனை செளகர்யங்களையும் கொடுப்பான் என்ற ட்வைலா தார்ப் என்ற அறிஞரின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்’’ என எச்சரிக்கும் ஆசிரியை, ‘‘எவ்வளவு வேலைகள், எவ்வளவு பிரச்னைகள், எத்தனை சிக்கல்கள் என இருந்த நாம் எல்லாம் அதுவாக சரியாகப் போகிறது என்ற சூழலுக்கு வந்துவிட்ட உடனேயே, நம் கரியருக்குப் பிரச்னைகளும், சிக்கல்களும் வந்துவிடப்போகிற நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்’’ என்கிறார்.

மேலே தரப்பட்டுள்ள படம் இன்னமும் விளக்கமாக, இந்த நிலை எப்படி வருகிறது என்பதைக் காட்டுகிறது என்று சொல்லும் ஆசிரியை, இந்த நிலையைத் தவிர்க்க சரியான ரிஸ்க்குகளை அவ்வப்போது எடுத்தல்,  நம்முடைய சிறப்பு இயல்புகள் மற்றும் வலிமைகளைச் சரியான விகிதத்தில் உபயோகப்படுத்துதல், சிக்கல்களை எதிர்கொள்ளுதல், உரிமைக்குக் குரல் கொடுத்தல், வளர்ச்சிக்காக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரத் தயங்காதிருத்தல், ‘எப்போதும் வென்றான்’ என்ற நிலை யாருக்கும் சாத்தியமில்லை; தோல்விக்கும் வாய்ப்புள்ளது என்பதை மனதில் இருத்தி நடத்தல், புதியதாக எதையாவது செய்யவேண்டும் என்ற ஆவலுடன் நடத்தல்... என நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஏழு பெரும் பிரிவுகளாகத் தந்துள்ளார்.

டிஸ்ரப்ஷன் என்பதே கடினமான ஒன்று. அதுவும் தனிமனிதன் அவனை டிஸ்ரப்ஷன் செய்துகொள்வது என்பதெல்லாம் அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. ஏனென்றால் பயம் பிடித்து நம்மை ஆட்டும். இந்தப் பயத்தை ஒழித்துவிட்டால் அது தரும் லாபம் என்பது பல மடங்கு என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் பயத்தை வெல்வதால் பலன் உண்டு என்பதை உணர்வீர்கள் என்கிறார்.

உங்கள் பணி சிறந்து, உங்கள் கரியர் சிறக்கவேண்டும் என்றால் ‘சாதனை’ என்ற வார்த்தை, உங்கள்  அகராதி யிலிருந்து நீக்கப்பட்டு, பங்களிப்பு என்ற வார்த்தை மட்டுமே இருக்கவேண்டும் எனும் பீட்டர் ட்ரக்கர் வார்த்தையை மறந்து விடாதீர்கள். டிஸ்ட்ரப்டிவ் வான செயல்பாடுகளில் ஈடுபடுவதில் வேறொரு நன்மையும் இருக்கிறது. பணியிடத்தில் நல்ல நிலையில் இன்றைக்கு இருக்கும் நீங்கள், முன்னேற்றத்துக்காக டிஸ்ரப்டிவ்வான விஷயங்களை இன்று செய்தீர்கள் என்றால் (பயத்தை ஒழித்து), தொடர்ந்து பிற்காலத்திலும் அதுபோன்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் டிஸ்ரப்ட்டிவ்வான விஷயங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியை, கடைசியில்  டிஸ்ரப்ஷன் செய்யத் தயாரா என்ற கேள்வியுடன் முடிக்கிறார்.

தொடர் வெற்றிக்கு டிஸ்ரப்ஷன் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் ஒருமுறை படிக்க வேண்டும்!

 - நாணயம் டீம்