
சென்னை ஃபண்டமென்டல் வகுப்பில் வாசகர்கள் நெகிழ்ச்சி!
நாணயம் விகடன் நடத்தும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த வகுப்பில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன், பயிற்சி வகுப்பினை நடத்தினார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு என்பது, நமது காரை ஓட்ட டிரைவர் வைத்துக் கொள்வதுபோல. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, நாமே காரை ஓட்டுவதற்குச் சமம். நாமே கார் ஓட்ட வேண்டும் என்றால், கார் குறித்த அடிப்படைத் தகவல்களும், வண்டி ஓட்டுவதற்கான பயிற்சியும் தேவை.
முதலில் நமக்கான போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் இருந்தால் ஆண்டுக்கு 7% வருமானம், தங்கத்தில் முதலீடு செய்தால் 12% வருமானம், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 15-20% வரை வருமானம் கிடைக்கலாம். உங்கள் போர்ட்ஃபோலியோவை இதை மையமாகக் கொண்டு அமைத்துக்கொள்ளவும்.பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டில்தான் நல்ல லாபம் எடுக்க முடியும்’’ எனப் பல்வேறு உதாரணங்களைச் சொல்லிய அருள்ராஜன், இணையத்தில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் செய்ய உதவும் தளங்கள் குறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

பயிற்சியில் பங்குகொண்டவர்களில் ஒருவரான தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.அருள், ‘‘வருங்காலத்தில் வளர்ச்சிபெற வாய்ப்புள்ள பல மடங்கு லாபம் தரும் ‘மல்டி பேக்கர்’ பங்குகளைக் கண்டு
பிடிக்கும் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டோம்’’ என்றார்.
பெங்களூருவைச் சேர்ந்த வாணி, ‘‘சந்தை தொடர்பான அடிப்படைத் தகவல்களை அறிந்து கொண்டேன். என்னைப் போன்ற ஆரம்பக் கால முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
- பொன்.செந்தில்குமார்
படங்கள்: ப.பிரியங்கா